“தொடமாட்டேன் விடமாட்டேன்னு முதல்வர் விஜய் சொன்னது இதைத்தானா?” - உதயநிதி ஸ்டாலின் கிண்டல்!

  • சென்னை: "முதலமைச்சர் விஜய் சட்டசபையில் தொடமாட்டேன், விடமாட்டேன் எனப் பேசினார். இன்றைக்கு ஒரு அதிமுக எம்எல்ஏக்களை கூட நான் விடமாட்டேன், அதிலும் ஊழல் வழக்குகள் இருப்பவர்களை மற்ற யாரும் தொட விட மாட்டேன், நான் மட்டும் தான் தொடுவேன் என சட்டசபையில் சொன்னதை இன்று செய்துகாட்டிக் கொண்டிருக்கிறார் முதல்வர்" என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

    Advertisement

    சென்னை தென் மேற்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை 256 இடங்களில் நடத்தியுள்ளனர். இதற்கான பாராட்டு விழாவில் எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.

    Advertisement

    அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், "முதலமைச்சர் விஜய் சட்டசபையில் தொடமாட்டேன் விடமாட்டேன் எனப் பேசினார். இன்றைக்கு ஒரு அதிமுக எம்எல்ஏக்களை கூட நான் விடமாட்டேன், அதிலும் ஊழல் வழக்குகள் இருப்பவர்களை மற்ற யாரும் தொட விட மாட்டேன், நான் மட்டும் தான் தொடுவேன் என கூறுகிறார். சட்டசபையில் சொன்னதை இன்று செய்துகாட்டிக் கொண்டிருக்கிறார் முதல்வர். ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து விட்டோம். அதே ரீல்ஸ் மூலம் ஆட்சி நடத்தலாம் என தவெகவினர் நினைக்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி முதலமைச்சரை சந்திக்கிறவர் வரை ரீல்ஸ் போடுகிறார்கள். ரீல்ஸ் அரசாங்கம் தான் நடக்கிறது.

    Advertisement

    ஆனால் திமுக ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக செயல்படும். நாம் பார்க்காத வெற்றியும் கிடையாது, சந்திக்காத தோல்வியும் கிடையாது. அதிமுகவை இரண்டாக உடைத்து விட்டார்கள். ஆனால் திமுகவை தொட்டுப் பார்க்க முடிந்ததா? திமுகவை எந்த கொம்பனாலும் தொட்டுப் பார்க்க முடியாது. சட்டமன்றத்தில் எப்படி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மிஸ் பண்ணுகிறோமோ அதேபோல் இந்த நேரத்தில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகனை நான் மிஸ் செய்கிறேன்.

    இத்தகைய தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் நம் கட்சி பெயரை சொல்லி, திராவிட மாடல் அரசின் சாதனைகளை சொல்லி, உடன்பிறப்புகள் உழைப்பால் ஓட்டு வாங்கியவர்கள். அவர்களில் சிலர் எம்.எல்.ஏ ஆகி அமைச்சராகவும் உள்ளனர். ஆனால் தமிழக அரசின் குறைபாடுகளை கூட்டணி கட்சிகள் யாரும் விமர்சனம் செய்வது கிடையாது. ஏனென்றால் சோபாவை பிடுங்கி விடுவார்கள் இல்லையா? வாயை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.

    Advertisement

    ஒவ்வொரு நாளும் தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏக்களை திமுக இழுக்கப் பார்க்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால் எங்களுக்கு அந்தக் கட்சி எம்எல்ஏக்கள் யார் என்றே தெரியாது.. அப்படி இருக்கும்போது எப்படி இழுக்க முடியும்? உண்மை என்ன? அடுத்த கட்சி எம்.எல்.ஏக்களை இளநீர் இழுப்பது போல இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் வரும் நாட்களில் நம் மக்களை சந்தித்து சொல்ல வேண்டும். நாம் மிசாவை பார்த்தவர்கள். இதெல்லாம் தூசு போல தட்டி விட்டு செல்வோம்.

    நேற்று வந்த கட்சிக்கெல்லாம் திமுக பயப்படாது. வேறு யாரிடமாவது அதை வைத்துக் கொள்ளுங்கள். அண்ணா சொன்னது போல பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு மாதிரி, கொள்கை என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி போன்றது. அது தான் நமக்கு முக்கியம். என்றைக்கும் மக்களுக்காக களத்தில் நிற்போம். நானும் தொண்டர்களுடன் தோள் கொடுத்து நிற்பேன். சோஃபா மாடல் அரசின் அவலநிலையை மக்களிடத்தில் அம்பலப்படுத்துவோம். தேர்தல் மூலம் ஜனநாயக முறையில் மீண்டும் திமுக ஆட்சியைப் பிடிப்போம்" எனப் பேசினார்.

    English Summary

    “Chief Minister Vijay had declared in the Assembly, ‘I will neither touch nor spare.’ Today, he is demonstrating that resolve by ensuring he does not spare even a single AIADMK MLA—particularly those facing corruption charges—and by making sure no one else touches them; only he will,” criticized Leader of the Opposition Udhayanidhi Stalin.