சென்னை: நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் நிலை என்ன என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்ட உதவி எண்களுக்கு எத்தனை அழைப்புகள் வந்துள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ள உதயநிதி ஸ்டாலின், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேபாளம் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடேகோஷி ஆற்றில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் சிக்கி 157 உயிரிழந்தனர். ஆற்றின் இரு பக்கங்களிலும் இருந்த வீடுகள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டன. இதனிடையே இந்தியாவில் இருந்து 157 பேர் நேபாளத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அதில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 57 பேர் இருக்கின்றனர். இதில் 20 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், 37 பேரின் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லை.
இதனால் அவர்களின் குடும்பத்தினர் பதற்றத்தில் இருக்கின்றனர். இதுதொடர்பாக தமிழகத்தில் உள்ள அவர்களது குடும்பத்தினர் உதவிக்கு 80690 09901 என்ற அவசர தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் நேபாளம் பெருவெள்ளம் தொடர்பாக தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். அப்போது நேரடியாக அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளிக்க சபாநாயகர் அனுமதி அளித்தார். இதற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதன்பின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், நேபாளம் வெள்ளப்பெருக்கில் 160 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வந்துள்ளது. சுற்றுலா சென்றுள்ள 110 இந்தியர்கள் சிக்கியுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட மக்கள் சிக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. நேபாளம் சென்ற குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று இங்குள்ளவர்கள் பதற்றம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தில் எத்தனை தமிழர்கள் சிக்கியுள்ளனர். எத்தனை பேரை மீட்டுள்ளோம்? தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்ட உதவி எண்களுக்கு எத்தனை அழைப்புகள் எடுக்கப்பட்டுள்ளது? அந்த அழைப்புகள் தொடர்பாக என்ன மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? தமிழர்களை மீட்க ஏதாவது சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளாரா? அவர்கள் நேபாளம் செல்ல ஏதேனும் திட்டம் இருக்கிறதா? நேபாளம் வெள்ளத்தில் சென்னை நீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் பாதிக்கப்பட்டுள்ளதாக என்று தகவல் கிடைத்துள்ளது. இதுதொடர்பான தகவலை திமுக எம்பி தயாநிதி மாறன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் கடிதமாக கொடுத்துள்ளார். இந்த சம்பத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டு கொள்வதாக தெரிவித்துள்ளார்.