சென்னை: முரசு புயலில் சிக்கி காசிமேட்டை சேர்ந்த மீனவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாயமான மீனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்த மற்றும் மாயமான மீனவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். அப்போது மீனவர்களின் குடும்பத்தினர் முன்வைத்த கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த அக்டோபர் 29-ம் தேதி ஒரே விசைப்படகில் 9 மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்றனர்.
காசிமேடு மீனவர்கள் அப்போது வங்கக்கடலில் முரசு புயல் தீவிரமடைந்ததால், ஆந்திர மாநிலக் கடற்கரைப் பகுதியில் தங்களது படகைப் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர். புயல் கரையைக் கடந்த பிறகு மீண்டும் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றபோது படகின் என்ஜினில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களின் விசைப்படகு விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதையடுத்து 9 மீனவர்களும் மாயமானார்கள். அவர்களைத் தேடும் பணியில் கடலோரக் காவல் படையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். இதில் ஆந்திர மாநிலம் கோத்தப்பட்டினம் கடற்கரைப் பகுதியில் 4 மீனவர்களின் உடல்கள் கரை ஒதுங்கின. மீதமுள்ள மீனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ரூ.7 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் இந்த நிலையில், முரசு புயலில் சிக்கி உயிரிழந்த மற்றும் மாயமான காசிமேடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களின் வீடுகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்றார். அங்கு மீனவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதலும் இரங்கலும் தெரிவித்தார். உயிரிழந்த மீனவர்களின் புகைப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தியதுடன், திமுக சார்பில் அவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியையும் வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீனவர்கள் நவம்பர் 2-ம் தேதி இரவு வரை குடும்பத்தினருடன் பேசியதாகவும், அதன் பிறகு தொடர்பு கிடைக்காததால் குடும்பத்தினர் அதிகாரிகளிடம் புகார் அளித்ததாகவும் தெரிவித்தார். ஆனால், அந்தப் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார். மேலும், திமுக ஆட்சியில் புயல் காலங்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல அனுமதித்ததில்லை என்றும், முழுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினார். தற்போதைய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் விமர்சித்தார். அரசுக்கு வைத்த கோரிக்கை இதனிடையே, தனது சோஷியல் மீடியா பதிவிலும் உதயநிதி இந்தச் சம்பவம் தொடர்பாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.. முரசு புயலில் சிக்கி உயிரிழந்த மற்றும் மாயமான காசிமேடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்களின் இல்லங்களுக்குச் சென்று அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் - இரங்கலையும் தெரிவித்தோம். உயிரிழந்த மீனவர்களின் திருவுருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, அவர்களின் குடும்பங்களுக்கு கழகத்தின் சார்பில் நிவாரண நிதி வழங்கினோம். புயல் நேரத்தில் மீனவர்கள் கடலுக்குள் செல்வதை அனுமதித்ததோடு மட்டுமின்றி, அவர்கள் மாயமானது தொடர்பான புகார்களை கண்டுகொள்ளாத இந்த ஆட்சியாளர்களின் மெத்தனப்போக்கே, மீனவர்கள் மரணத்துக்கு காரணம் என்று கண்ணீரோடு கூறினர். அரசுத் தரப்பில் வழங்கப்பட்ட நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் - குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் - மீனவர்களுக்கு காப்பீடு வசதிகளை செய்து தர வேண்டும் என்ற அக்குடும்பத்தினரின் கோரிக்கையை இந்த சோப்ளாங்கி அரசு உடனே நிறைவேற்றவேண்டும். அரசின் மெத்தனத்தால் இனியொரு மீனவரின் உயிர் பறிபோகக்கூடாது. அதனை மனதில் வைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ள வேண்டும்" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்,.