உதயநிதி ஸ்டாலின் ஹார்ட் ஒர்க்.. எடப்பாடியின் டெடிகேஷன்! ஆனாலும்? இனி 3 கட்சிகள் செய்ய வேண்டியது என்ன

  • சென்னை: தாராபுரம்.. மதுராந்தகம்.. இந்த 2 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. ஆனால், இது வெறும் 2 தொகுதிகளுக்கான ரிசல்ட் மட்டும்தானா? நிச்சயமாக இல்லை.. ஏற்கனவே அதிமுக வெற்றி பெற்றிருந்த இந்த 2 தொகுதிகளையும் இப்போது தவெக கைப்பற்றியிருக்கிறது. இதனால் அதிமுகவுக்கு என்ன சிக்கல்? திமுக இந்த முடிவை எப்படி பார்க்க வேண்டியிருக்கும்? ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே 2 தொகுதிகளில் வென்றிருக்கும் தவெகவுக்கு இது எப்படிப்பட்ட தொடக்கம்? ஒவ்வொரு கட்சிக்கும் இந்த ரிசல்ட் சொல்லும் செய்தி என்ன?

    Advertisement

    கடந்த சட்டமன்றத் தேர்தலில் தாராபுரம், மதுராந்தகம் என 2 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றிருந்தது. அதனால், இந்த இடைத்தேர்தல் அந்த வெற்றியைத் தக்கவைக்கும் வாய்ப்பாக அதிமுகவுக்கு அமைந்தது.. ஆனால், இப்போது 2 தொகுதிகளுமே தவெக வசமாகிவிட்டன.

    Advertisement

    2 தொகுதிகள் ரிசல்ட்

    இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஏற்கெனவே அதிமுக சார்பில் வெற்றி பெற்றிருந்த சத்தியபாமா, மரகதம் குமாரவேல் ஆகிய 2 பேரும் தவெகவில் இணைந்து, அதே தொகுதிகளில் அந்தக் கட்சியின் வேட்பாளர்களாகக் களமிறங்கினர். இப்போது இருவருமே வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

    அதனால், இது அதிமுகவுக்கு 2 தொகுதிகளை இழந்த விஷயம் மட்டுமல்ல.. கட்சியிலிருந்து வெளியேறிய முன்னாள் எம்எல்ஏக்கள் வேறு கட்சியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றிருப்பதும் அரசியல் கவனத்தைப் பெற்றுள்ளது.

    எடப்பாடி பழனிசாமிக்கு பாடம்

    தாராபுரத்தில் அதிமுகவின் களப்பணி, உள்ளூர் நிர்வாகிகளின் செயல்பாடு குறித்து தேர்தலுக்கு முன்பே பல்வேறு விவாதங்கள் எழுந்தன. மதுராந்தகத்திலும் கே.பி.முனுசாமி தலைமையில் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. ஆனாலும், இரண்டு தொகுதிகளையும் அதிமுகவால் மீண்டும் கைப்பற்ற முடியவில்லை.

    Advertisement

    இதனால், எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி தனது உள்ளூர் அமைப்பை இன்னும் வலுப்படுத்த வேண்டியிருக்கிறதா என்ற கேள்வி எழலாம்.. அதேசமயம், 2 தொகுதிகளின் முடிவுகளை மட்டும் வைத்து ஒட்டுமொத்த அதிமுகவின் பலத்தையும் தீர்மானித்துவிட முடியாது. ஆனால், கட்சியிலிருந்து விலகியவர்கள் வெற்றி பெற்றிருப்பதால், இந்த முடிவை அதிமுக தலைமை சாதாரணமாகக் கடந்துவிட முடியாது.

    திமுகவுக்கும் இந்த ரிசல்ட் முக்கியம்

    திமுகவைப் பொறுத்தவரை, இந்த 2 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியாதது ஏமாற்றத்துக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.. கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்ட நிலையில், தனது சொந்த வாக்கு பலத்தை நிரூபிக்க வேண்டிய வாய்ப்பு திமுகவுக்கு இருந்தது.

    Advertisement

    அதனால்தான் 2 தொகுதிகளிலும் உதயநிதி ஸ்டாலின் ஆரம்பத்திலிருந்தே பிரச்சாரம் மேற்கொண்டார். தொகுதி வாரியாக சென்று வாக்கு சேகரித்ததுடன், தவெக அரசையும் அதன் வேட்பாளர்களையும் விமர்சித்துப் பேசினார். பிரச்சாரத்தின் கடைசிக் கட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் களமிறங்கினார். ஆனால், இந்தப் பிரச்சாரங்கள் திமுகவுக்கு வெற்றியைத் தேடித்தரவில்லை.. 2 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றுள்ளது.

    இதற்குப் பிரச்சார நேரம் மட்டும்தான் காரணமா என்று உடனே முடிவுக்கு வந்துவிட முடியாது. வேட்பாளர்களின் செல்வாக்கு, உள்ளூர் அரசியல் சூழல், கட்சியின் அமைப்பு பலம் எனப் பல விஷயங்கள் தேர்தல் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனாலும், கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்ட திமுகவுக்கு, இந்த முடிவு தனது களப்பணியை மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழலை உருவாக்கியுள்ளது.

    Advertisement

    திமுக 2வது இடம்

    தாராபுரத்தில் திமுக 2வது இடத்தைப் பிடித்தாலும் வெற்றி கிடைக்கவில்லை. மதுராந்தகத்திலும் தவெக வெற்றி பெற்றிருக்கிறது. இதனால், தவெக போன்ற புதிய அரசியல் சக்திகளை எதிர்கொள்வதற்கு திமுக தனது களப்பணியையும் கீழ்மட்ட நிர்வாகிகளின் செயல்பாட்டையும் தொடர்ந்து மதிப்பிட வேண்டியிருக்கும்.

    ஆனால், இந்த முடிவை வைத்து திமுகவின் மாநிலம் தழுவிய பலத்தைத் தீர்மானிக்க முடியாது.. அடுத்தடுத்த தேர்தல்களில் கட்சி தனது வாக்காளர்களை எப்படித் தக்கவைக்கிறது என்பதுதான் முக்கியம்.

    குழந்தைகளை தாக்குவதற்கு பெயர் என்ன தாய்மாமன் தடியடி திட்டமா? உதயநிதி ஸ்டாலின் அட்டாக்

    தவெகவுக்கு செம லக்

    இந்த இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றிருப்பது, கட்சிக்கு முக்கியமான அரசியல் நிகழ்வு. புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில், முதல் இடைத்தேர்தலிலேயே 2 தொகுதிகளையும் கைப்பற்றியிருக்கிறது.

    Advertisement

    அதிலும், ஏற்கெனவே அதிமுக சார்பில் வெற்றி பெற்றிருந்த 2 முன்னாள் எம்எல்ஏக்களும் தவெக சார்பில் மறுபடியும் வெற்றி பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது... இதனால் விஜய்யின் தலைமையில் கட்சி தனது அடுத்தடுத்த தேர்தல் பயணத்தை எப்படி தொடரப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.

    அதேநேரத்தில், இந்த வெற்றியை அடுத்தடுத்த தேர்தல்களிலும் தக்கவைக்க வேண்டிய பொறுப்பும் தவெகவுக்கு நிறையவே உள்ளது. இடைத்தேர்தல் வெற்றி ஒரு முக்கியமான தொடக்கமாக இருக்கலாம்... ஆனால், தொடர்ந்து மக்களின் ஆதரவைப் பெறுவதுதான் அடுத்த சவால்.

    உதயநிதி ஸ்டாலின் களமாடியும் திமுக 0? ஒருவேளை 2 இடத்தில் வென்றால்? விஜய்க்கு காத்திருக்கும் ட்விஸ்ட்

    3 கட்சிகள் இனி செய்ய வேண்டியது

    ஆக, தாராபுரம், மதுராந்தகம் ரிசல்ட் 3 கட்சிகளுக்கும் வெவ்வேறு செய்திகளை சொல்லியிருக்கிறது.. அதிமுக இழந்த தொகுதிகளை மீண்டும் கைப்பற்றுவதற்கான காரணங்களையும் களநிலையையும் ஆராய வேண்டியிருக்கிறது. திமுக தனது தனிப்பட்ட வாக்கு பலத்தையும் தவெகவை எதிர்கொள்ளும் வியூகத்தையும் மதிப்பிட வேண்டியிருக்கிறது. தவெகவோ, கிடைத்த வெற்றியை தொடர்ந்து வரும் தேர்தல்களிலும் தக்கவைக்க வேண்டியிருக்கிறது.

    2 தொகுதிகளின் முடிவுகள் தமிழக அரசியலில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளன.. இந்த வெற்றியும் பின்னடைவுகளும் அடுத்த தேர்தல்களில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுதான் இனி கவனிக்க வேண்டிய விஷயம்..பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

    English Summary

    Udhayanidhi Stalin’s Hard Work, Edappadi’s Dedication.. What Must 3 Parties Do After Bypoll Results?