உதயநிதி ஸ்டாலின் சபாநாயகர் முன்னாடியே சொன்ன அந்த வார்த்தை.. உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

  • சென்னை: உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து மீண்டும் பேசிய விவகாரம் பெரும் புயலை கிளப்பியுள்ள நிலையில், அதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட புதிய அவசர வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.. தமிழக சட்டசபையில் சபாநாயகர் முன்னிலையிலேயே அவர் பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், இந்த வழக்கில் நீதிமன்றம் என்ன மாதிரியான அதிரடி முடிவை எடுக்கப்போகிறது என்ற பரபரப்பு இப்பவே தொற்றியுள்ளது..

    Advertisement

    தமிழக அரசியல் களம் எப்போதுமே பரபரப்பிற்குப் பஞ்சம் இல்லாதது என்றாலும், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபை வளாகத்தில் மீண்டும் ஒரு பரபரப்பு கிளம்பி உள்ளது.

    Advertisement

    ஜேசிடி பிரபாகர் தேர்வு

    தமிழக சட்டசபையின் புதிய சபாநாயகராக தவெக எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் அவையில் கொண்டுவரப்பட்டது.

    இந்தத் தீர்மானத்தின் மீது பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது வாழ்த்துரைகளைத் தெரிவித்து வந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசத் தொடங்கினார்.. மிகவும் சுமுகமாக சென்று கொண்டிருந்த அந்த வாழ்த்துரையின் இறுதி நிமிடங்களில், ஒட்டுமொத்த அவையையும், அதன் பிறகு ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கும் வகையிலான ஒரு கருத்து அவரிடமிருந்து வெளிவந்தது.

    Advertisement

    சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்

    தனது உரையை நிறைவு செய்யும் தருவாயில், "மக்களை பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்" என்று உதயநிதி ஸ்டாலின் மிக திட்டவட்டமாகக் கூறி முடித்தார்.. அவர் பேசி முடித்த அடுத்த கணமே, அவை வளாகத்திற்குள்ளும் வெளியேயும் கடுமையான விவாதங்களும் எதிர்ப்புகளும் கிளம்பத் தொடங்கின..

    இந்த விவகாரம் தீயாய் பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து, தமிழக பாஜகவினர் உள்ளிட்ட மாற்றுத் தரப்பினர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்யத் தொடங்கினர்..

    உதயநிதி தந்த விளக்கம்

    உதயநிதி தனது பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்தன.. சட்டசபையில் எழுந்த இந்த அதிரடித் திருப்பத்தைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் இது தொடர்பாக ஒரு விரிவான விளக்க அறிக்கையை வெளியிட்டார்.

    Advertisement

    அதில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் தான் பேசிய கருத்துக்காக சிலர் தன்னை விமர்சிப்பதாகவும், ஆனால் இதுபோன்ற எதிர்ப்புகளுக்கு தான் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.. திராவிட இயக்கம் என்பதே எதிர்ப்புகளுக்கு மத்தியில்தான் வளர்ந்தது என்பதை குறிப்பிட்ட அவர், சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதன் உண்மையான பொருள் யாரும் கோவிலுக்கு போகக் கூடாது என்பது அல்ல என்று தெளிவுபடுத்தினார்..

    பாகுபாடு கிடையாது

    அதுமட்டுமல்லாமல் தனது விளக்கத்தில், கோவில்களில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சமூகத்திலும் அனைவருக்கும் சமஉரிமை கிடைக்க வேண்டும் என்பதுதான் தனது பேச்சின் நோக்கம் என்றும் பதிவிட்டார்.

    மேல் சாதி மற்றும் கீழ் சாதி என மக்களைப் பிரித்து வைக்கும் பாகுபாட்டு முறையைத்தான் தான் ஒழிக்க வேண்டும் என்று குறிப்பிட்டதாகக் கூறிய உதயநிதி, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோர் வலியுறுத்திய அதே கொள்கையைத்தான் தானும் பேசுவதாகக் குறிப்பிட்டார்.

    Advertisement

    இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

    தாங்கள் யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவர்கள் அல்ல என்றும், ஆனால் சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையையும் ஒடுக்குமுறையையும் தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக சொன்னார்.. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரின் உயரிய நெறியே தங்களின் வழி என்றும் அவர் அந்த பதிவில் விளக்கியிருந்தார்.

    இருந்தாலும் இந்த விளக்கம் தங்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி, டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகப் புதிய மனு ஒன்று அவசர அவசரமாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    வழக்கறிஞர் அமிதா சச்தேவா தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், ஏற்கனவே 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சனாதன தர்மத்தை டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்களுடன் ஒப்பிட்டுப் பேசிய விவகாரத்தில் உதயநிதிக்கு எதிராகப் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

    Advertisement

    வெறுப்பு பேச்சு பேசினாரா

    வெறுப்புப் பேச்சு வழக்குகளில் காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகள் இருந்தபோதிலும், டெல்லி காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

    நீதிமன்றம் ஏற்கனவே இந்த விவகாரத்தில் தனது அதிருப்தியைத் தெரிவித்தும்கூட, மீண்டும் சட்டசபையில் அதே போன்றதொரு கருத்தை உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல், சட்டசபையில் பேசிய தற்போதைய பேச்சையும் அவருக்கு எதிரான கூடுதல் ஆவணமாக நீதிமன்றம் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

    ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த முக்கிய வழக்கு, உச்சநீதிமன்றத்தில் மே 19ம் தேதியான இன்று விசாரணைக்கு வரவுள்ளதால், தீர்ப்பின் திசை எதை நோக்கி இருக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பும் பரபரப்பும் டெல்லி மற்றும் சென்னை அரசியல் வட்டாரங்களில் தொற்றிக்கொண்டுள்ளது..!!

    English Summary

    Udhayanidhi Stalin Dharma Speech Row: New Urgent Petition To Be Heard In Supreme Court Today