சென்னை: தவெக ஆட்சி அமைத்து 116 நாட்களில் 550 குற்றச் சம்பவங்கள் குறித்து இதுவரை முதல்வர் விஜய் வாயை திறக்கவே இல்லை, எனவே பதிலுரைக்கு இன்னும் 3 நாட்கள் இருக்கும் நிலையில் நல்லா prepare செய்துட்டு வரச் சொல்லுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
முதல்வரான விஜய் இதுவரை செய்தியாளர்கள் சந்திப்பை நிகழ்த்தவில்லை என்றும் எந்த ஒரு எதிர்க்கட்சியின் கேள்விகளுக்கும் உரிய பதிலை அளிக்கவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் தமிழக சட்டசபையில் நேற்றைய தினம் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசுகையில், "தவெக ஆட்சியில் சட்டம் இருக்கு, ஆனால் ஒழுங்கு இல்லை. கடந்த ஆட்சி காலத்தில் குற்ற சம்பவங்களுக்கு அரசை காரணம் கூறிய கட்சி, ஆட்சிக்கு வந்த பின்னர் தனி நபர்கள்தான் காரணம் என மக்களுக்கு பாடம் எடுக்கிறார்கள். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு காவல் மரணங்கள் தொடர்பாக பேசிய விஜய், சாரி வேண்டாம், நீதி வேண்டும் என்றார். ஆனால் இந்த ஆட்சியில் நடந்த காவல் மரணங்களுக்கு நீதியும் இல்லை, சாரியும் இல்லை. மாணவர்களுக்கு பயந்து கடற்கரையை பூட்டிய ஒரே அரசு இதுதான். தவெக அரசு பொறுப்பேற்ற 116 நாட்களில் 550 குற்றச் சம்பவங்கள், 8 காவல், சிறை மரணங்கள் நிகழ்ந்துள்ளன. ஆளும் கட்சி நிர்வாகிகள் பிரைட்டர், ரூஸ்வெல்ட் ஆகியோர் தவெக பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்திருந்தார். ஆனால் அவர்கள் மீது இதுவரை தவெக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதல்வரின் பதிலுரைக்கு இன்னும் 3 நாட்கள் (வெள்ளிக்கிழமை, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் விடுமுறை) டைம் இருக்கு. நல்லா prepare பண்ணிட்டு வாங்க" என்றார். அப்போது ஆளும் கட்சியினர் கோபத்தில் கொந்தளித்தனர். உடனே தலையிட்ட சபாநாயகர், "எதிர்க்கட்சித் தலைவர் சொன்னதை ஃலைட்டர் வெயிட்டில் எடுத்துக் கொள்ளுங்கள், உட்காருங்கள்" என கூறிவிட்டு, சபாநாயகர் பேசுகையில், "முதல்வர் அமைதியாக கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பதை பார்த்தால் அவர் எதற்கும் தயாராகத்தான் வந்துள்ளார் என்ற உணர்வை தந்துள்ளது. எனவே பதிலுரை அளிப்பதற்கு தயார்படுத்திக் கொண்டு வர வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று நான் கருதுகிறேன் என்றார். உடனே குறுக்கிட்ட உதயநிதி ஸ்டாலின், "நான் இங்கிலீஷில் சொன்னேன், நீங்கள் தமிழில் சொல்கிறீர்கள். முதல்வர் எதற்கும் தயாராக இருக்கிறார் என்றால், இப்போதே பேச சொல்லுங்கள், நான் வேண்டுமானால் உட்கார்ந்து கொள்கிறேன் என சபாநாயகருக்கு பதில் அளித்தார்.