“இன்ஸ்டாவில் ரீல்ஸ் போடும் போராளிகளைத்தான் இன்று சமூகம் கொண்டாடுகிறது” - உதயநிதி ஸ்டாலின் காட்டம்

  • சென்னை: "இன்றைக்கு மக்களுக்கான களப் போராளிகளைக் கொண்டாடுவதைவிட இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் எடுக்கும் போராளிகளைத்தான் இந்தச் சமுதாயம் அதிகமாகக் கொண்டாடிக்கொண்டு இருக்கிறது." என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

    Advertisement

    சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில், 'உதவும் கைகள்' அறக்கட்டளை மற்றும் திணை நிலவாசிகள் ஒருங்கிணைத்த தகைசால் தமிழர் தோழர் இரா.நல்லகண்ணு சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நல்லகண்ணு உருவச்சிலையைத் திறந்துவைத்தார். இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியனும் பங்கேற்றார்.

    Advertisement

    இந்த நிகழ்வில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "தோழர் நல்லகண்ணுவுக்கு முதன்முதலாக எழுப்பப்பட்டுள்ள சிலையை உங்களுடன் சேர்ந்து திறந்து வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பை எனக்குத் தந்திருக்கும் உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இன்றைக்கு மக்களுக்கான களப் போராளிகளைக் கொண்டாடுவதைவிட இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் எடுக்கும் போராளிகளைத்தான் இந்தச் சமூதாயம் அதிகமாகக் கொண்டாடிக்கொண்டு இருக்கிறது. "போராடினால் எதுவும் கிடைக்கும்" என்று உறுதியாக நம்பியவர் நல்லகண்ணு. அதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம் சமீபத்தில் டெல்லியில் நடந்த போராட்டம்.

    டெல்லியில் நடந்த போராட்டத்தையொட்டி, இந்தியா முழுவதும் இளைஞர்கள் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஆனால், நீட் எதிர்ப்புப் போராட்டம் என்பது, தமிழ்நாட்டுக்குப் புதிது கிடையாது. என்றைக்கு நீட் முதன்முதலாக வந்ததோ, அன்றிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் அதை எதிர்த்துக்கொண்டுதான் இருக்கிறது.

    Advertisement

    குறிப்பாக திமுக இளைஞரணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், 80 லட்சம் பேரிடம் கையெழுத்து இயக்கம், பைக் பேரணி போன்றவற்றை நிகழ்த்தினோம். அதுமட்டுமல்லாமல் 2021ம் ஆண்டு திமுக அரசு அமைந்தவுடன் நீட் பாதிப்பை கண்டறிய ஓய்வுப்பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

    அந்த குழு தமிழ்நாடு முழுக்க பயணம் மேற்கொண்டு மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்களை சந்தித்து ஒரு பரிந்துரையை அரசிடம் கொடுத்தார்கள். அதனடிப்படையில் நீட் விலக்கு வேண்டும் என்று அப்போதைய முதலமைச்சராக திமுக தலைவர் ஸ்டாலின் சட்ட முன்வடிவை கொண்டு வந்தார். அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதற்காக உச்சநீதிமன்றம் வரை சென்று திமுக போராடியது.

    Advertisement

    டெல்லியில் நீட் குளறுபடிக்கு எதிராக நடந்த மாணவர்கள் போராட்டம் முடிந்துவிட்டது என்று நான் நினைக்கவில்லை. இனிமேல்தான் அந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்போகிறது என்பதுதான் என் எண்ணம். நீட்டை முற்றிலும் ஒழிப்பதற்கான தொடக்கமாகத்தான், நான் அந்தப் போராட்டத்தைப் பார்க்கிறேன்.

    நல்லகண்ணு இன்று இருந்திருந்தால், அவரும் இதைத்தான் நிச்சயம் சொல்லியிருப்பார். அவர் எந்த அளவுக்கு எளிமைக்குச் சொந்தக்காரரோ, அதே அளவுக்குப் போராட்டக் குணத்துக்கும் சொந்தக்காரர். அப்படிப்பட்டவரின் சிலையைத் திறந்துவைப்பதை என்னுடைய வாழ்நாள் பெருமையாகக் கருதுகிறேன்.

    இந்த நிகழ்ச்சிக்கு நான் வருகிறேன், தோழர் வீரபாண்டியமும் வருகிறார் என்பதால், பல்வேறு இடங்களில் இருந்து தொலைபேசி அழைப்புகள், விசாரிப்புகள் வந்ததாகச் சொன்னார்கள். 'நிறைய பேர் போன் செய்து கேட்டார்கள். "நாளைய நிகழ்ச்சியில் குதிரை பேரம் நடத்துகிறீர்களா?" என்று கேட்டதாகச் சொன்னார்கள். உண்மையாகவே குதிரை பேரம் எங்கு நடக்கிறது என்று என்னைவிட உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

    Advertisement

    தோழர் வீரபாண்டியன் இங்கு வந்தவுடன் என்னுடன் பேசிக்கொண்டு இருந்தார். உங்கள் தந்தையார் எப்படி இருக்கிறார் என்று கேட்டார். எப்போதும்போல அதே தோழமை உணர்வோடுதான் அவர் இங்கே அமர்ந்துள்ளார் என்று நம்புகிறேன். ஏனெனில், தமிழ் - தமிழர் - தமிழ்நாட்டு உரிமைக்கு எதிராக என்ன நடந்தாலும், திராவிட இயக்கமும் பொதுவுடைமை இயக்கமும் என்றைக்கும் ஓரணியில் கைகோர்த்துக் களத்தில் நிற்கும்.

    கலைஞர் அடிக்கடி பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார். "நான் மட்டும் பெரியாரைச் சந்திக்காமல் இருந்திருந்தால், நிச்சயம் கம்யூனிஸ்ட் காரனாகத்தான் இருந்திருப்பேன்" என்று சொல்வார். அந்த அளவுக்கு கம்யூனிஸ்ட்டுகள் மேல் அவருக்கு தனிப்பாசம் உண்டு.

    Advertisement

    2016 சட்டமன்றத் தேர்தலின்போது, நாம் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டோம். வெறும் ஒரு சதவிகித வாக்கு வித்தியாசத்தில் அதிமுக ஆட்சியில் அமர்ந்தது. அப்போது பத்திரிகையாளர்கள் சென்று கலைஞரிடம் கேட்கும்போது, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வரவில்லை என்ற வருத்தம் அவர் மனதில் இல்லை. அப்போது அவர், "தமிழ்நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக கம்யூனிஸ்ட்டுகள் இல்லாத ஒரு சட்டசபை அமைந்திருக்கிறது என்பதுதான் எனக்கு வருத்தம்" என்று குறிப்பிட்டுப் பேசினார். அந்த அளவுக்கு, கம்யூனிஸ்ட்டுகள் மேல் டாக்டர் கலைஞருக்கு தனிப் பாசம் இருந்தது.

    ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, கம்யூனிஸ்ட்டுகள் சொல்லும் கருத்துகளைக் கேட்டு, அதை நடைமுறைப்படுத்தியவர்தான் கலைஞர். அவர் வழியில், கம்யூனிஸ்ட்டுகள் மீது திமுக தலைவரும் தனி மரியாதை வைத்திருக்கிறார். அய்யா நல்லகண்ணுவுக்கு தமிழ்நாடு அரசின் மிக உயரிய விருதான தகைசால் தமிழர் விருதையும் வழங்கி பெருமைப்படுத்தியவர்.

    நானும் தோழர் நல்லகண்ணுவை பலமுறை சந்தித்துள்ளேன். 2021 ஆம் ஆண்டு, நான் சட்டமன்ற உறுப்பினர் ஆனதும், முதலில் சென்று வாழ்த்துப் பெற்றது நல்லகண்ணுவிடம்தான். அவரை யார் சந்திக்கச் சென்றாலும் பரிசாக, அவர் புத்தகங்கள் கொடுப்பார். நான் அவரைச் சந்திக்கச் செல்லும்போது, புத்தகங்கள் கொடுத்தேன். அவரும் என்னுடன் புத்தகங்களைப் பரிமாறிக்கொண்டார். நிறைய அரசியல் பேசுவார். பல அறிவுரைகளையும் சொல்லி இருக்கிறார்." என்று பேசினார் உதயநிதி ஸ்டாலின்.

    English Summary

    "Today, rather than celebrating grassroots activists who work for the people, society is increasingly celebrating activists who make Instagram Reels," said Udhayanidhi Stalin.