காவல்துறை சி.எம் கட்டுப்பாட்டில் இருக்கா? காவி எஜமானர்களின் Control-க்கு போவிட்டதா? - உதயநிதி கேள்வி

  • சென்னை: பெரியார் விழிப்புணர்வு பேரணி, அண்ணா பிறந்தநாள் பேரணி ஆகியவற்றுக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதைக் கடுமையாக கண்டித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின். காவல்துறை, முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? இல்லை அவரது காவி எஜமானர்களின் கன்ட்ரோலுக்கு சென்றுவிட்டதா? என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    விநாயகர் சதுர்த்தியைக் காரணம் காட்டி பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் பேரணிக்கு அனுமதி அளிக்க தவெக அரசு மறுத்துள்ளது சர்ச்சையாக வெடித்துள்ளது. குடியாத்தம் நகர திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 15 ஆம் தேதி பழைய பேருந்து நிலையம் முதல் அண்ணா சிலை வரை ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டு போலீசில் மனு அளிக்கப்பட்டது.

    Advertisement

    அதற்கு குடியாத்தம் நகர போலீசார், விநாயகர் சதுர்த்திக்கு அடுத்த நாள் என்பதாலும், போக்குவரத்து நெரிசல் மிக்க இடம் என்பதாலும், பொதுமக்களுக்கும், பொது போக்குவரத்துக்கும் நோயாளிகளுக்கும் அதிக இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதாலும் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு ஊர்வலம் நடத்த அனுமதி மறுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.

    அதேபோல, தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17 ஆம் தேதி ஆண்டுதோறும் ஈரோடு மாவட்டத்தில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்படும். இந்த ஆண்டும் திராவிடர் கழகம் சார்பில் பேரணி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்தச் சூழலில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை காரணம் காட்டி இந்தாண்டு திகவின் பெரியார் விழிப்புணர்வு பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    எந்த ஆட்சி வந்தாலும் பெரியார் விழிப்புணர்வு பேரணிக்கு தடை விதிக்கப்பட்டது இல்லை. ஆனால், இன்றைய தவெக அரசு, பெரியார் விழிப்புணர்வு பேரணிக்கு ஈரோட்டிலும், அண்ணா பிறந்தநாள் பேரணிக்கு குடியாத்தத்திலும் அனுமதி மறுத்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த ஈரோட்டு மண்ணில் தி.க. சார்பில் செப்டம்பர் 17-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்கும்,

    குடியாத்தத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.கழகம் உள்ளிட்ட கட்சிகள் நடத்தவிருந்த பேரணிக்கும், இந்த Circus அரசின் காவல்துறை அனுமதி மறுத்து இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

    Advertisement

    முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, வலதுசாரி அமைப்புகளின் பேரணிகளுக்கு அனுமதி வழங்கிவிட்டு, தமிழ்நாட்டை செதுக்கிய பெரியார் - அண்ணாவின் பிறந்த நாள் பேரணிகளுக்கு அனுமதி மறுப்பது ஏன்?

    பெரியாரையும், அண்ணாவையும் கொள்கைத்தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் முதலமைச்சர், யாரை திருப்திப்படுத்த இதைச் செய்கிறார்? காவல்துறை, முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? இல்லை அவரது காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?

    பெரியார் - அண்ணாவை புறக்கணிக்கும் Reels முதலமைச்சர், அவருடைய அடிமைத்தனத்தையும் - ஆணவத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, உடனே இந்த பேரணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Leader of the Opposition Udhayanidhi Stalin has strongly condemned the police for denying permission for the Periyar awareness rally and the Anna birthday rally. He questioned whether the police force remains under the Chief Minister's control or has come under the control of his 'saffron masters'.