சென்னை: வரும் திங்கள்கிழமை நாங்கள் எழுந்து ஓடக் கூடாது என சொல்லிவிட்டு முதல்வர் விஜய்யே ஓடுகிறாரே என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல் செய்தார்.
தமிழக சட்டசபையில் இன்று காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கடந்த 116 நாட்களில் தவெக அரசில் நடந்த கொலை, கொள்ளை, ஆணவக் கொலை, பாலியல் குற்றங்களை பட்டியலிட்டார்.
அது போல் தவெக நிர்வாகிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளையும் அவர் முன் வைத்தார். மேலும் "திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என கூறிவிட்டு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையில் அதிகாரியாக இருந்த மகேஷ்குமார் அகர்வாலை எதற்காக இந்த ஆட்சியில் டிஜிபியாக நியமித்தீர்கள், அது போல் போதை பொருள் தடுப்பு பிரிவில் சிறப்பாக செயல்பட்ட அமல்ராஜை ஏன் சென்னை கமிஷனராக்கினீர்கள். நாங்கள் நியமித்த அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டதால்தானே அவர்களுக்கு புரமோஷன் கொடுத்தீர்கள் என உதயநிதி கேள்வி எழுப்பினார். அப்போது முதல்வர் விஜய், "அனைத்து எம்எல்ஏக்கள் கேட்கும் கேள்விகளுக்கும் திங்கள்கிழமை நான் பதிலளிப்பேன். நான் அவையில் இல்லாவிட்டாலும் எல்லா கேள்விகளும் எனக்கு வந்துவிடும். ஆனால் நான் பதிலளிக்கும் போது யாரும் எந்திரிச்சு ஓட கூடாது என்பதை பிராமிஸ் செய்ய வேண்டும்" என கூறிவிட்டு விஜய் அவையை விட்டு வெளியே சென்றுவிட்டார். உடனே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "எங்களை வெளியே ஓடக் கூடாது என கூறிவிட்டு தற்போது அவரே வேகமாக வெளியே ஓடிவிட்டாரே" என்றார். மேலும் உதயநிதி, "3 நாட்கள் அவைக்கு விடுமுறை. எனவே 3 நாட்கள் நன்கு தயார் செய்து கொண்டு வரட்டும். வரும் திங்கள்கிழமை அன்று எந்த திசை திருப்பலும் தேவையில்லாத குட்டி கதைகளும் இல்லாமல் முதல்வர் பதில் சொல்லட்டும்" என உதயநிதி தெரிவித்தார். இன்றைய தினம் முதல்வர் விஜய் சில அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அதில், "அடுத்த 5 ஆண்டுகளில் 29,108 கூடுதல் காவல் பணியிடங்கள் உருவாக்கப்படும். 2026 ஆம் ஆண்டில் 10 ஆயிரம் காவலர்களில் 5000 பெண் காவலர்கள் நியமிக்கப்படுவார்கள். போதைப் பொருள் ஒழிப்பைத் தடுக்கும் நோக்கில் கிராமம் ஒன்றுக்கு ரூ 10 லட்சம் வீதம், 50 கிராமங்களுக்கு வழங்கப்படும். காவல் துறையை நவீனமயமாக்க ரூ 212 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில காவல் நிலையங்களில் சில்லறை செலவினம் உயர்த்தி வழங்கப்படும். பணிக்காலத்தில் துணிச்சலுடன் போராடி இறக்கும் காவலருக்கு ரூ 1 கோடி வழங்கப்படும். பணிக்காலத்தில் இறக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் கருணைத் தொகை ரூ 20 லட்சத்தில் இருந்து ரூ 30 லட்சமாக உயர்த்தப்படும். வண்டலூர் காவல் அகாதெமியில் விளையாட்டு வசதிகள் ரூ 23 கோடி செலவில் அமைக்கப்படும். சேலம், விழுப்புரம் வட்டார தடய அறிவியல் ஆய்வகத்தில் ரூ 14 கோடியில் மரபணு ஆய்வு சோதனை மையங்கள் நிறுவப்படும். காவல் துறையில் ரூ 200 கோடி புதிய வாகனங்கள் வாங்கப்படும் என்றார்.