உதயநிதி முகம் வெளிறி போச்சு.. விஜய்யின் பலவீனத்தை தொட்டு, ட்ரிகர் செய்த திமுக.. பொங்கிய முதலமைச்சர்

  • சென்னை: முதலமைச்சர் விஜய்யின் பலவீனத்தை தொட்டுப் பார்த்து அவரை "ட்டிரிக்கர்" செய்வது, எதிர்க்கட்சியின் நோக்கம்.. நேற்று விஜய் பதிலுரையின்போது, சட்டமன்ற நிகழ்வுகள் ஒருபுறம் வருத்தமாக இருந்தாலும், தன்னை எப்படி நசுக்கினார்களோ, அவர்களை விஜய் திருப்பி நசுக்குவதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது.. ஆனால், இது எல்லை கடந்து போய்விடக்கூடாது. அப்படிப் போனால் அது மக்களுக்கான ஆட்சியாக இருக்காது என்று மூத்த சினிமா விமர்சகர் வலைப்பேச்சு அந்தணன் கருத்து தெரிவித்துள்ளார்.

    Advertisement

    Valaipechu anthanan சேனலில் பேசியிருக்கும் அந்தணன், "முதலமைச்சர் விஜய் பேச வேண்டிய பதிலை ஏன் மற்ற அமைச்சர்கள் பேசுகிறார்கள்?" என்று நீண்ட காலமாகவே திமுக விமர்சனம் வைத்து வருகிறது.

    Advertisement

    கடந்த வெள்ளிக்கிழமையன்று நடந்த விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "ஏன் உங்கள் முதலமைச்சருக்கு பதில் சொல்லத் தெரியாதா? துறை சார்ந்த விஷயங்களுக்கு அவர்தானே பதில் சொல்ல வேண்டும், நீங்கள் ஏன் பேசுகிறீர்கள்?" என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி முதலமைச்சர் விஜய்க்கு பெரிய நெருக்கடியை தந்துவிட்டார்.

    உண்மையில், முதலமைச்சரின் பலவீனத்தை தொட்டுப் பார்த்து அவரை ட்டிரிக்கர் செய்வது, எதிர்க்கட்சியின் நோக்கம்... முதலமைச்சர் விஜய் இயல்பாகவே மிகவும் அமைதியானவர்.. அளந்து பேசக்கூடியவர். இன்று பல மேடைகளில் அவர் பேசுவது தயாரித்து எழுதப்பட்ட உரைதான் என்றாலும், அதை இயல்பாகவும் நேர்த்தியாகவும் முன்வைக்கும் விதம் மக்களைக் கவர்ந்துள்ளது.

    Advertisement

    துண்டுச் சீட்டு - உதயநிதி

    கவிப்பேரரசு வைரமுத்து போன்றவர்களே மேடையில் தடுமாற்றமின்றி பேச முன்னதாகவே உரையைத் தயார் செய்கிறார்கள். ஏன், உதயநிதி ஸ்டாலின் கூட கையில துண்டுச் சீட்டு இல்லாமல் பேசுகிறாரா என்ன? முன்னாள் முதல்வர் கலைஞர் போன்ற ஒரு சிலரைத் தவிர, தயாரிப்பு இல்லாமல் மணிக்கணக்கில் பேசக்கூடியவர்கள் மிகச் சிலரே.

    முதலமைச்சர் விஜய்க்கு மனதில் பல எண்ணங்கள் இருந்தாலும், அதை வெளிப்படுத்துவதில் உள்ள சில சிக்கல்கள் காரணமாகவே மற்ற அமைச்சர்கள் பேசுகிறார்கள். "இது ஒரு கூட்டு முயற்சி, முதலமைச்சரின் அனுமதியோடு அமைச்சர்கள் பதில் அளிக்கலாம்" என்று சபாநாயகரும் தெளிவுபடுத்திவிட்டார். அப்படியிருந்தும், "நீ ஏன் பேசவில்லை? நீ ஏன் பேசவில்லை?" என்று எதிர்க்கட்சியினர் தொடர்ந்து சீண்டியதால் எழுந்த கோபத்தின் விளைவாகவே, சட்டமன்றத்தில் முதலமைச்சர் நேற்று விஜய் பொங்கியெழுந்து விட்டார்.

    Advertisement

    உதயநிதி முகம் வெளிறிப்போய்

    எனினும், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் காவல்துறைக்கான நன்மைகள் மற்றும் புதிய சலுகைகள் குறித்து முதலமைச்சர் அறிவித்திருக்க வேண்டும். ஆனால், எதிர்க்கட்சிகளின் தூண்டுதலால் அந்த முக்கிய அறிவிப்புகளை விட்டுவிட்டு அவர்களை தாக்கிப் பேச வேண்டிய சூழல் உருவானது.

    முன்னாள் முதல்வர்கள் கலைஞர், ஸ்டாலின் பற்றின முதலமைச்சர் விஜய்யின் ஆவேசமான பேச்சால் உதயநிதி ஸ்டாலின் மட்டுமே நெருக்கடிக்கும் கவலைக்கும் உள்ளானார்.. அவரது முகம் வெளிறிப்போய்விட்டது. ஆனால், மற்ற திமுக உறுப்பினர்கள் சிரித்துக் கொண்டு சாதாரணமாகத்தான் உட்கார்ந்திருந்தார்கள்.. சபாநாயகர் அமைதியாக இருக்குமாறு சொல்லியும், எதிர்க்கட்சியினர் கேட்காததால், சபை காவலர்களை அழைத்து அவர்களை வெளியேற்ற வேண்டிய நிலை வந்தது.

    Advertisement

    பிரேமலதா விஜயகாந்த்

    முதலமைச்சர் விஜய் பேசியதில் சரி, தவறு என 2 பக்கமும் விவாதங்கள் இருந்தாலும், எதிர்க்கட்சியினர் அவரை சீண்டித் தூண்டியதே இந்த அமளிக்கு முழுக் காரணம். இதனால், காவல்துறை மானியம் மற்றும் ஊர்காவல் படையினருக்கான வயது வரம்புச் சலுகை போன்ற பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்படாமல் போனது குறித்து பிரேமலதா விஜயகாந்த் ஆதங்கப்பட்டதும் உண்மைதான்.

    அதேநேரத்தில், "பெண்களைத் தரக்குறைவாகவும் இரட்டை அர்த்தத்திலும் பேசுவதை விட்டுவிடுங்கள், உங்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொண்டு பேசுங்கள்" என்று அவையில் இருந்தவர்களை நோக்கி முதலமைச்சர் விஜய் கண்டித்துப் பேசியதிலும் நியாயம் இருக்கிறது.

    Advertisement

    தரம் தாழ்ந்து பேசுவது தவறு

    சட்டமன்றம் என்பது மக்கள் பிரச்சனைகளைப் பேசுவதற்கான மன்றம். ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, தரந்தாழ்ந்து தனிநபர்களைச் சீண்டுவது தவறு. எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை வைக்க வேண்டும்.. அதை விட்டுவிட்டுத் தொடர்ந்து சீண்டிக்கொண்டே இருந்தால் முதலமைச்சர் இன்னும் ஆவேசமாகத்தான் பேசுவார்.

    கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் விஜய்யின் அரசியல் நடவடிக்கைகளுக்கும், கட்சி தொடங்குவதற்கும் பல முட்டுக்கட்டைகளும் அடக்குமுறைகளும் போடப்பட்டன. ஒரு எலியை மூலைக்கு விரட்டினால் அது ஓட முடியாமல் திருப்பிப் பாயும் அல்லவா? அப்படித்தான், அன்று அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்டு செய்த அடக்குமுறைகளின் வெளிப்பாடும், கோபமும்தான் இன்று விஜய்யிடம் இருந்து வெளிப்படுகிறது.

    அமைதியான எடப்பாடி பழனிசாமி

    அவையில் இருதரப்பும் அமளியில் ஈடுபட்டபோது, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைதியாக அமர்ந்து வேடிக்கை பார்த்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதேபோல, அவையில் இவ்வளவு கூச்சலும் குழப்பமும் நடந்தபோதும், எந்தவித உணர்ச்சியையும் முகத்தில் காட்ட முடியாமல் பொம்மை போல் அமர்ந்திருக்க வேண்டிய சூழலில் இருந்த பெண் சட்டமன்றப் பணியாளர்களை பார்த்தபோது மிகவும் பரிதாபமாக இருந்தது.

    சட்டமன்ற நிகழ்வுகள் ஒருபுறம் வருத்தமாக இருந்தாலும், தன்னை எப்படி நசுக்கினார்களோ அவர்களை விஜய் திருப்பி நசுக்குவதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது.. ஆனால், இது எல்லை கடந்து போய்விடக்கூடாது. அப்படிப் போனால் அது மக்களுக்கான ஆட்சியாக இருக்காது. எனவே, அடுத்தடுத்த சட்டமன்றக் கூட்டத்தொடர்கள் எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் அழகாகவும் சுவாரசியமாகவும் நடக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்." என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Udhayanidhi Stalin Turned Pale.. DMK Triggered Vijay by Touching His Weak Spot, Furious CM Hits Back