“நாக்பூரில் தமிழக விவசாயிகள் கைது.. மகாராஷ்டிர அரசை விஜய் கேள்வி கேட்கணும்”.. கொந்தளித்த உதயநிதி

  • சென்னை: "நாக்பூரில் கைது செய்யப்பட்டுள்ள நம் விவசாயிகளை உடனே விடுவிக்க தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நம் விவசாயிகளை கைது செய்த மகாராஷ்டிர அரசிடம் அதற்கான விளக்கத்தைக் கேட்பதுடன், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கான உறுதியைப் பெற வேண்டும்" என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    காவிரி நீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள மத்திய நீர்வள அமைச்சகத்தை முற்றுகையிடச் சென்ற டெல்டா மாவட்ட விவசாயிகள், இன்று மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் ரயில் நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். தமிழக விவசாயிகளை பலவந்தமாக பெட்டிகளில் இருந்து இறக்கிய நாக்பூர் போலீசார், மீண்டும் தமிழகத்திற்கே திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்தி மாற்று ரயில்களில் ஏற்றி அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர். விவசாயிகள் ஏற்காத நிலையில் அவர்களை கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    இதுதொடர்பாக தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று டெல்லியில் முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக ரயிலில் சென்ற தமிழ்நாட்டு விவசாயிகளை நாக்பூரில் கைது செய்துள்ள மகாராஷ்டிரா மாநில காவல்துறையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    மேகதாது விஷயத்தில் தொடக்கம் முதலே கர்நாடகாவுக்கு ஆதரவாக ஒருதலைபட்சமாக செயல்படும் நீர்வளத்துறையின் போக்கை கண்டித்துதான் தமிழ்நாட்டு விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தனர். ஆனால், அவர்கள் ரயிலில் சென்று கொண்டிருக்கும் போதே நடுவழியில் இறங்க வைத்து, தமிழ்நாட்டுக்கே திரும்பிச் செல்லுங்கள் என கட்டாயப்படுத்தி உள்ளது மகாராஷ்டிர காவல்துறை.

    Advertisement

    நாக்பூரில் கைது செய்யப்பட்டுள்ள நம் விவசாயிகளை உடனே விடுவிக்க தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நம் விவசாயிகளை கைது செய்த மகாராஷ்டிர அரசிடம் அதற்கான விளக்கத்தைக் கேட்பதுடன், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கான உறுதியைப் பெற வேண்டும். டெல்லி சென்று போராட அவர்களை ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும். ஜனநாயக வழியில் போராடும் உரிமையைப் பறிக்கக் கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    “Chief Minister of Tamil Nadu must take immediate steps to secure the release of our farmers arrested in Nagpur. He should seek an explanation from the Maharashtra government regarding the arrest and obtain an assurance that such incidents will not recur,” stated Udhayanidhi Stalin.