சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் திருச்சி திமுக மாவட்ட செயலாளரும், பள்ளிக் கல்வித்துறையின் முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இந்நிலையில் அவரை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மீண்டும் சந்தித்துப் பேசியுள்ளார். மூன்று நாட்களில் இரண்டாவது முறையாக இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த திங்கட்கிழமை சென்னையில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் சென்னை ஊழல் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சென்னை புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார். கடந்த 3 நாட்களாக சிறையில் உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணி செயலாளருமானஉதயநிதி ஸ்டாலின் ஏற்கெனவே நேரில் சந்தித்துப் பேசியிருந்தார். இந்நிலையில், இன்று மீண்டும் புழல் சிறைக்குச் சென்ற உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழியைச் சந்தித்துள்ளார். அவருடன் முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவும் சென்றுள்ளார். அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இந்தச் சந்திப்பின்போது ஆலோசிக்கப்பட்டதாக திமுகவினர் சொல்லுகின்றனர். இதற்கிடையே, அன்பில் மகேஷ் பொய்யாமொழியை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.புழலில் அன்பில் மகேஷுக்கு என்னென்ன வசதிகள் தெரியுமா? எண்ணெய் இல்லாத சாப்பாடு, 3 நாள் சிக்கன் குழம்பு