சென்னை: சென்னை நீலாங்கரையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டில் போலீஸார் குவிக்கப்பட்ட நிலையில் அவரை கைது செய்து விசாரணைக்காக தஞ்சாவூருக்கு போலீஸார் அழைத்துச் செல்கிறார்கள்.
நாளை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை முடக்க தவெக அரசு திட்டமிட்டுள்ளதாக திமுக குற்றம்சாட்டியிருந்த நிலையில் தற்போது அவரை வீட்டில் வைத்து கைது செய்து விசாரணைக்காக தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்வதால் பரபரப்பு எழுந்துள்ளது.
தஞ்சாவூரில் தவெக அரசை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது அவர் காவிரி விவகாரத்தில் முதல்வர் விஜய் மெத்தனமாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் காவிரி பிரச்சினையில் தலையிட்டால் காங்கிரஸ் தனது அரசுக்கு கொடுத்த வாபஸை திரும்ப பெற்றுவிடும் என்ற பயம் முதல்வர் விஜய்க்கு இருப்பதாவகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அந்த கூட்டத்தில் உதயநிதி பேசிய போது அங்கிருந்தவர்கள் ஏதோ சொல்லி கூச்சலிட, அதற்கு அவர் இரட்டை அர்த்தத்தில், பெண்களை ஆபாசமாக குறிக்கும் வகையில் ஒரு வார்த்தையை உதயநிதி சொன்னார். இது மிகப் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. உதயநிதியின் இந்த ஆபாச பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. உதயநிதிக்கு இது போன்ற பேச்சுகளை சிவாஜி கிருஷ்ணமூர்த்தி எழுதிக் கொடுத்தாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. உதயநிதியின் இந்த பேச்சை கண்டித்து தவெகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். இந்த நிலையில் உதயநிதியை அமைச்சர்கள் கண்டித்துள்ளனர். அதில் ஆதவ் அர்ஜுனா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: "அண்ணா உருவாக்கிய அறிவாலயத்தை ஆபாசக் கூடாரமாக மாற்றிய ஆபாசநிதி.. இன்று தனது ஆபாச மொழியாலும் இரட்டை அர்த்தப் பேச்சுக்களாலும் அழித்து வருகிறார் உதயநிதி. அடிப்படை மனித மாண்புகூட கொஞ்சமும் இல்லாமல், தரங்கெட்டத்தனமாக மேடையில் பேசியிருக்கிறார். பெண்கள் பற்றி அவர் கொண்டிருக்கும் வக்கிர சிந்தனையை வெளிப்படுத்தும் விதமாக இன்று அவர் பேசியுள்ள ஆபாசப் பேச்சு கேட்பவர்களைக் காது கூசச் செய்கிறது. இதுபோன்ற இழிவான பேச்சுகளை தமிழ்நாட்டின் எந்தவொரு தாய்மார்களும், அக்கா - தங்கைகளும், பெற்றோர்களும் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். இதுபோன்ற நபர்களின் ஆதிக்க சிந்தனையால்தான் திமுகவை இந்த தேர்தலில் தமிழ்நாட்டுப் பெண்கள் தூக்கியெறிந்தார்கள்" என கடுமையாக விமர்சித்துள்ளார். அமைச்சர் கீர்த்தனா வெளியிட்டுள்ள பதிவில், "பொது மேடைகளில் பேசப்படும் வார்த்தைகள் அரசியல் நாகரிகத்தையும், சமூகப் பொறுப்பையும் பிரதிபலிக்க வேண்டும். ஆனால் உதயநிதி பேசிய பேச்சு, பெண்களின் கண்ணியத்தையும், சமூகத்தின் நாகரிக விழுமியங்களையும் புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.கருத்து வேறுபாடுகள் அரசியலில் இயல்பானவை. ஆனால் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலோ, இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகளாலோ, ஆபாசமான மொழியாலோ கருத்துகளை வெளிப்படுத்துவது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் மேடை என்பது மக்களுக்கு வழிகாட்டும் இடமே தவிர, பெண்களின் மாண்பைக் காயப்படுத்தும் வார்த்தைகள் ஒலிக்கும் இடமாக மாறக் கூடாது. பெண்களை இழிவுபடுத்தும் அரசியல் மொழிக்கு தமிழ்நாட்டின் பெண்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள். பெண்களின் கண்ணியத்தை காயப்படுத்தும் இதுபோன்ற பேச்சுகளுக்கு ஜனநாயக ரீதியாக தக்க பதிலை தமிழக பெண்கள் வழங்குவார்கள்" என கடுமையாக தாக்கியுள்ளார். நாளை சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் நிலையில் உதயநிதியின் இந்த பேச்சு விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த நிலையில் நீலாங்கரையில் உள்ள உதயநிதியின் வீட்டை சுற்றி காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இதையடுத்து அங்கு திமுகவினரும் குவிந்துள்ளதால் போலீஸார்- திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உதயநிதியின் வீட்டிற்குள் சென்ற போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். பகல் 12 மணி வரை உதயநிதியை கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் அப்படி எந்தவொரு தடையும் எங்களுக்கு வரவில்லை என கூறி உதயநிதியை போலீஸார் கைது செய்தனர். உதயநிதி மீது போட்ட வழக்குகள் உதயநிதி மீது மொத்தம் ஒன்பது பிரிவுகளில் வழக்கு BNS 196- பொது அமைதியை கெடுத்தல் 192- கலவரத்தை தூண்டும் வகையில் ஆத்திரம் 79- பெண்களின் சுயமரியாதைக்கு களங்கம் ஏற்படுத்துதல் 352- வேண்டுமென்றே ஒருவரே அவமதித்தல் 296(b) ஆபாசமாக பேசுதல் 351(2)- மிரட்டல் BNS 61- குற்றவியல் சதி பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு (4) தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 67