தாய்மாமன் காது குத்தும் திட்டம்னு சொல்லுங்க.. 10 ஆணவ கொலை, 8 லாக்அப் மரணம்.. டேட்டாவோடு வந்த உதயநிதி

  • சென்னை: தவெக அரசின் மொத்த திட்டங்களுக்கும் சேர்த்து தாய்மாமன் காது குத்தும் திட்டம் என்று பெயர் வைக்கலாம் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தவெக ஆட்சிக்கு வந்த 116 நாட்களில் 10 ஆணவக் கொலைகளும், 8 காவல் நிலைய மரணங்கள் நடந்துள்ளதாக கூறிய உதயநிதி ஸ்டாலின், தவெக ஆட்சி அமைந்த நாள் முதல் கொலை நடக்காத நாட்களே இல்லை என்றும் சாடியுள்ளார்.

    Advertisement

    சட்டசபையில் இன்று காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், கொள்கை விளக்க குறிப்பு நேற்றிரவு 12 மணியளவிலேயே என்னிடம் வந்து சேர்ந்தது. கொள்கை விளக்க குறிப்பில் திமுக ஆட்சியின் போது குற்றங்கள் குறைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளீர்கள். குறிப்பாக வழிபறி, திருட்டு குற்றங்கள் டேட்டாவுடன் கூறியுள்ளீர்கள்.

    Advertisement

    அதேபோல் கொலை, கொலை முயற்சி, கலவரம், பாலியல் குற்றம் குறைந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. சாதிய பாகுபாடு குறைந்துள்ளதாக கூறி இருக்கிறது. இதனை நேர்மையாக ஒப்புக் கொண்டதற்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தவெக அரசு அமைந்து 116 நாட்கள் ஆகிறது. இந்த 116 நாட்களில் அரசு புதிய திட்டங்களை விடவும், ஏற்கனவே கொண்டு வரப்பட்ட திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ஒன்று பெயர் மாற்ற அறிவிப்பு, இல்லையென்றால் திட்ட ரத்து அறிவிப்பு வருகிறது. திமுக ஆட்சியில் தமிழ்நாடு டாப் கியரில் சென்றது. இப்போது ரிவர்ஸ் கியரில் சென்று கொண்டிருக்கிறது. விவசாயக் கடன் முழு தள்ளுபடி, அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு கட்டணமில்லா பயணம் என்றெல்லாம் கூறினீர்கள். ஆனால் இப்போது பாதி பாதியாக அறிவிப்பு மட்டுமே வெளியிட்டுள்ளீர்கள்.

    Advertisement

    தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் என்று சொன்னீர்கள். ஆனால் தவெக அரசின் மொத்த திட்டங்களையும் சேர்த்து தாய்மாமன் காது குத்தும் திட்டம் என்று மாற்றிக் கொள்ளலாம். திட்டங்களை விடவும் ரீல்ஸ் மக்களை சென்று சேர்ந்தால் போதும் என்ற நிலை இருக்கிறது. 116 நாள் ஆட்சியில் பெண்களுக்கு மிகப்பெரிய சோகமாக உள்ளது. கறிக்கடையில் கூட வெட்டாத அளவிற்கு தினமும் வெட்டு குத்து நடந்து வருகிறது.

    ஆகஸ்ட் மாதத்தில் கோவையில் மட்டும் 9 கொலை.. 10 ஆணவக் கொலை நடந்திருக்கிறது. ஆணவக் கொலை என்று சொன்னவர்கள் இந்த ஆட்சி அமைந்த பின் காதல் மரணங்கள் என்று சொல்கிறார்கள். சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு அரசை குறை சொன்ன தவெக, தற்போது தனி நபர் ஒழுக்கம் என்று பாட்ம எடுக்கிறார்கள். ஆனால் ஆளுங்கட்சியினர் தினம் தினம் குற்றச்செயல்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது.

    Advertisement

    தூத்துக்குடியில் பெண் அளித்த பாலியல் வன்கொலை புகாரில் தவெக எம்எல்ஏ மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன் காவல் மரணங்களுக்கு பற்றிய பேசிய தற்போதைய முதல்வர், சாரி வேண்டாம்.. நீதி வேண்டும் என்றார். ஆனால் தவெக ஆட்சிக்கு வந்த 116 நாட்களில் 8 காவல் மரணங்கள் நடந்துள்ளன.

    இதற்கு இதுவரை குறைந்தபட்சம் சாரி கூட கிடைக்கவில்லை. இதில் என நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? முதல்வர் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் உள்துறை, உளவுத்துறை செயல் இழந்து போய்விட்டதா? எதிர்க்கட்சி, ஜென் ஸி இளைஞர்கள், பத்திரிகையாளர்களை காவல்துறை கைது செய்கிறார்கள். ஆனால் முதல்வரை ஓபனாக விமர்சித்த தமிழக பாஜக தலைவர் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

    Advertisement

    எங்களுக்கு வந்தால் ரத்தம், அவங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா.. பாஜக அடிச்சு வலித்தாலும், வெளியில் சொல்லக் கூடாது என்ற ஆளுங்கட்சியின் திட்டங்களை நாங்கள் பார்த்ததே இல்லை. நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை நடத்த கூடாது என்று மெரினாவை பூட்டினார்கள். அனிதா நினைவேந்தலுக்கு கூட அனுமதி அளிக்கப்படவில்லை.

    இடதுசாரிகளை கணக்கெடுக்க வட்டாட்சியர் உத்தரவிட்டார். டிவி சீரியல்களில் இவருக்கு பதில் இவர் என்று போடுவது போல் பேரவையில் அமைச்சர்கள் பதில் அளிக்கின்றனர். பேரவையில் ஆளுங்கட்சி எப்படி நடந்து கொள்கிறதோ, அதுபோலதான் எதிர்க்கட்சி நடந்து கொள்ளும். முதல்வர் கட்டுப்பாட்டில் தான் காவல்துறை இருப்பதாக இன்னும் நம்புகிறோம் என்று தெரிவித்தார்.

    English Summary

    Udhayanithi Stalin: Opposition Leader Udhayanidhi Stalin Mocks TVK Schemes as 'Thaimaman Kadhu Kuthum Scheme'