சென்னை: தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அருணாச்சலம் என்பவர் காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்திருப்பது வேதனை அளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காவல்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் விஜய் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்கின்றன என்றும் சாடியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதாகும் இளைஞர் அருணாச்சலம். இவரை சில நாட்களுக்கு முன் சட்டவிரோதமாக மதிபான பாட்டில்களை விற்பனை செய்ததாக தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் தரண்யா தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து விசாரணையின் போது அருணாச்சலம் மயங்கியதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட சூழலில், நேற்றிரவு உயிரிழந்தார். இதையடுத்து காவல்துறையினரின் கடுமையான தாக்குதலால் உயிரிழந்ததாக குற்றம்சாட்டிய உறவினர்கள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே காவல் நிலையத்தில் அருணாச்சலத்தை போலீசார் தலையில் தாக்கியதாக பேசும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் பரவி வருகிறது. இது தமிழ்நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியது. ஏற்கனவே நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளி ஒருவர் லாக் அப் மரணம் அடைந்த விவகாரமே இன்னும் முழுமையாக அடங்கவில்லை. அதற்கு அடுத்த லாப் அப் மரணம் நிகழ்ந்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முதல்வர் விஜய்யை கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்னும் இளைஞர், காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்து இருப்பது வேதனை அளிக்கிறது. போலீஸ் தனக்கு இழைத்த அநீதியை தனது இறுதி நிமிடங்களில் அருணாச்சலமே எடுத்துச் சொன்னதைப் பார்க்கும் போது நெஞ்சம் கலங்குகிறது. காவல் மரணங்களின் போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் அருணாச்சலத்தின் குடும்பத்துக்கு, திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.