முதலமைச்சர் விஜய்க்காக ஆழமான கிணற்றில் இறங்கிய தவெக கருப்பையா.. பதறிய தொண்டர்கள்! பின்னணி ரீசன் என்ன

  • சென்னை: தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்று புதிய ஆட்சி அமைந்துள்ளதைத் தொடர்ந்து, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பல்வேறு வினோத நேர்த்திக்கடன்களைச் செலுத்தி வருகின்றனர்.. அந்த வகையில், மதுரை சோழவந்தான் தொகுதி தவெக எம்எல்ஏ கருப்பையா ஆழமான கிணற்றுத் தண்ணீரில் மிதந்து அம்மனுக்கு வினோத ஜலப்பிரதட்சண வழிபாடு நடத்தியுள்ளார்.. இதுதான் சோஷியல் மீடியாவில் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

    Advertisement

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராகப் பதவியேற்க வேண்டும் என்றும், கட்சியின் பொதுக்கூட்டங்களில் இனி எவ்வித அசம்பாவிதங்களும் நடக்கக்கூடாது என்றும் வேண்டி, அக்கட்சியின் நெல்லை மாவட்ட கிளைக் கழகச் செயலாளர் இசக்கியப்பன் (48) என்பவர் தீவிர வழிபாடு ஒன்றை சமீபத்தில் நடத்தியிருந்தார்.

    Advertisement

    தவெக தொண்டர்களின் நேர்த்திக்கடன்

    நெல்லை மாவட்டம் செட்டிக்குளம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த இவர், இதற்காக கார்த்திகை மாத வழிபாட்டை மேற்கொண்டு, 3 கிலோ எடையும், 12 அடி நீளமும் கொண்ட பிரம்மாண்ட சூலாயுதவேல் அலகை தனது வாயில் குத்திக்கொண்டார்.

    செட்டிக்குளம் கடற்கரையிலிருந்து புறப்பட்டு, முத்தாரம்மன் கோயில் வரையிலான சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு அலகு குத்தியபடியே நடந்து சென்று தனது நேர்த்திக்கடனைச் செலுத்தினார்.

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த பேரதிர்ச்சி சம்பவம் நடந்ததைத் தொடர்ந்தே, இனி இதுபோன்ற அசம்பாவிதங்கள் எங்குமே நிகழக் கூடாது என்ற நோக்கில் இசக்கியப்பன் இந்த வழிபாட்டை முன்னெடுத்திருந்தார்.

    Advertisement

    பால்குடம் - தவெக தொண்டர்

    இந்த ஊர்வலத்தின்போது மற்ற பக்தர்கள் பால்குடம் ஏந்தியபடி பின் தொடர, மேளக் கலைஞர்கள் விஜய் நடித்த திரைப்படப் பாடல்களையும், கட்சியின் கொள்கைப் பாடல்களையும் உற்சாகமாக இசைத்துக் கொண்டே வந்தனர். குறிப்பாக, தவெக துண்டை கழுத்தில் அணிந்தவாறு இசக்கியப்பன் மேற்கொண்ட இந்த அசாத்திய நேர்த்திக்கடன் வழிபாட்டை அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் மிகுந்த ஆச்சரியத்துடன் கூடிப் பார்த்தனர்.

    இந்த வழிபாடு குறித்துப் பேசிய இசக்கியப்பன், வரும் தேர்தலில் விஜய் நிச்சயம் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக அரியணை ஏறுவார் என்றும், தங்களின் இந்த தீவிர பக்தி மற்றும் நேர்த்திக்கடன் குறித்துத் தெரிந்தால் விஜய் தங்களை நேரில் அழைத்து பேசுவார் என நம்புவதாகவும் தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

    Advertisement

    இதுபோல தவெக தொண்டர்கள் பலர், விஜய் முதல்வராக வேண்டும் என்று பிரார்த்திக் கொண்டனர்.. இப்போது விஜய் முதலமைச்சராகிவிட்டார்.

    ஜலப்பிரதட்சண வழிபாடு

    இந்நிலையில், தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், சோழவந்தான் தொகுதி தவெக எம்எல்ஏ கருப்பையா கிணற்றுத் தண்ணீரில் மிதந்து வினோத நேர்த்திக்கடன் ஒன்றைச் செலுத்தியுள்ளார்.

    மதுரை மாவட்டத்தில் உள்ள சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், அண்மையில் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்தபோது தற்காலிக சபாநாயகராகச் செயல்பட்டு ஒட்டுமொத்த தமிழக மக்களின் கவனத்தையும் ஈர்த்திருந்தார்.. இந்நிலையில், சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் திருக்கோயில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியுள்ளது..

    Advertisement

    புதிய அமைச்சர் பதவி

    இந்த வைகாசி திருவிழாவின் ஒரு பகுதியாக, தவெக தலைவர் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதற்குத் தனது நன்றியையும் நேர்த்திக்கடனையும் செலுத்தும் வகையில் எம்எல்ஏ கருப்பையா இந்த ஜலப்பிரதட்சண வழிபாட்டை முன்னெடுத்தார்.

    இதற்காக அங்கிருந்த ஆழமான கிணற்றுத் தண்ணீரில் இறங்கி, நீண்ட நேரம் அப்படியே மிதந்தபடி அவர் ஜலப்பிரதட்சணம் செய்து அம்மனை வழிபாடு செய்த காட்சியைப் பொதுமக்கள் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.. தவெக ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து தற்காலிக சபாநாயகராகப் பதவி வகித்த இவருக்கு, விரைவில் விஜய் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும்போது புதிய அமைச்சர் பதவி கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது..!!!

    English Summary

    Unbeliveable twist in Madurai as TVK MLA Karuppiah floats in deep well for CM Vijay