அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்!

  • சென்னை: தவெகவுக்கு அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் தாவியிருக்கின்றனர். எனவே, இந்த தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில், திமுக-அதிமுக இணைந்து வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்ற சுப.வீரபாண்டியன் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    Advertisement

    நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது. இருப்பினும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் அளவுக்கு பெரும்பான்மை இல்லை என்பதால், திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தன.

    Advertisement

    இங்குதான் பிரச்சனையே வெடித்தது. அதாவது, திமுகவும்-அதிமுகவும் இணைந்து கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க திட்டமிட்டிருந்தது என்று விமர்சனங்கள் எழுந்தன. திமுகவின் கூட்டணியிலிருந்து வெளியேறி கட்சிகள் இந்த விமர்சனத்தை வைத்திருந்தன. ஆனால், இது வெறும் வதந்தி என்றும், மக்களின் தீர்ப்புக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம் எனவும் திமுக கூறியிருந்தது.

    இந்த பின்னணியில்தான் தற்போது சுபவீ கூறியிருக்கும் கருத்து சலசலப்புகளை கிளப்பியிருக்கிறது. அவர் பேசியதாவது, "இப்போது எனக்கு ஒரு கேள்வி எழுகிறது. திமுகவும்-மதிமுகவும் பிரிந்துதானே இருந்தன? எப்படி திமுகவிலிருந்து அதிமுக வெளியேறியிருந்ததோ.. அதுபோலதானே மதிமுக இருந்தது. பிறகு நாம் கூட்டணி வைத்துக்கொள்ளவில்லையா?

    Advertisement

    கூட்டணி இல்லை என்றாலும், ஒரே கட்சியாக இல்லை என்றாலும், நாம் வைகோவை சேர்த்துக்கொள்ளலாம்.. எல்லோரையும் இணைத்துக்கொள்ளலாம். அப்படி இருக்கையில் எடப்பாடி பழனிசாமி மட்டும் அப்படி என்ன தீண்டதகாதவர்? திமுகவும்-அதிமுகவும் சேர்ந்து வரும் இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது சரியாகத்தான் இருக்கும் என்று நான் சொல்கிறேன்.

    இதென்ன முந்திரிக்கொட்டை கருத்து என்று நினைப்பவர்கள் நினைக்கலாம், அவசரப்பட்டு சொல்லுகிறேன் என்று கருதுகிறவர்கள் கருதலாம். இருப்பினும் ஒன்றை நான் அழுத்தமாக சொல்கிறேன். இரண்டு கட்சிகளும் சேர்ந்து நிற்கும்போது அது வலிமையானதாக இருக்கும். நாம் யார்? அண்ணன் தம்பிகள்தானே! திமுகவிலிருந்து போனவர்கள்தானே அவர்கள்.

    Advertisement

    வேறு யார் யாருடனோ கூட்டு சேர்ந்து, துர்திஷ்டவசமாக சேர்ந்துவிட்டோமே என்று அவர்கள் வருத்தப்படுகிற நிலை இல்லாமல், தனித்தனியாகவே இருந்து பொது வேட்பாளரை நிறுத்தும் சூழல் நெருங்கிக்கொண்டிருக்கிறதோ என்று எனக்கு தோன்றுகிறது" என கூறியிருக்கிறார்.

    இந்த கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் பரவலாக எழுந்திருக்கிறது. திமுகவும்-அதிமுகவும் இணைவதுதான் பேச்சு என்று, திமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய கட்சிகள் பேசிக்கொண்டிருப்பதை சுப.வீரபாண்டியனின் பேச்சு உறுதி செய்திருக்கிறது என்றும், திமுக-அதிமுக இணைந்தால் என்ன தவறு என்றும் இரு வேறு கருத்துக்கள் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.

    English Summary

    DMK-AIADMK: Some AIADMK MLAs have defected to TVK; consequently, by-elections are set to be held soon for these constituencies. Suba. Veerapandian’s suggestion that the DMK and AIADMK should join forces to field candidates in these elections has sparked a stir.