சென்னை: யுபிஐ பரிவர்த்தனை கட்டணத்தை நடைமுறைப்படுத்தினால், அந்தக் கட்டணச் செலவும், பொருட்களின் மீதே ஏற்றப்படும். அதனால் விலைவாசி உயர்வு ஏற்படும். யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. இந்த முறையை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கு புதிய விதிமுறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ. 2,000-க்கு மேற்பட்ட யுபிஐ வணிகப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படவுள்ளது. அதேபோல, ரூ. 75,000 மற்றும் அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ. 300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறையானது அக்டோபர் 15 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இதற்கு அரசியல் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூல் செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அக்டோபர் 15 முதல் ரூ. 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட வர்த்தகம் சார்ந்த யுபிஐ பரிவர்தனைகளுக்கு 2 விழுக்காடு வரை கட்டணம் வசூலிக்கப்படும். இக்கட்டணம் வர்த்தகர்களுக்கு மட்டுமே பொருந்தும், சாதாரண நுகர்வோருக்கு யுபிஐ சேவைகள் எப்பொழுதும் போல இலவசமாக வழங்கப்படும் என இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் அறிவித்துள்ளது. இது அதிர்ச்சி அளிக்கிறது. வர்த்தகர்களுக்கு மட்டுமே இக்கட்டணம் வசூலிக்கப்படும் எனக் கூறப்பட்டாலும் கூட, ரயில்வே, தொலை தொடர்பு, பெட்ரோல் பங்க், காப்பீட்டு பிரிமியம், மின்சாரம், தண்ணீர் பயன்பாடு போன்றவற்றிற்கான கட்டணங்களுக்கு, அக்கட்டணம் ரூ. 2000-க்கு மேல் இருந்தால், அதற்கு ரூபாய் 5 நிலையான கட்டணமாக வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்தக் கட்டணம் படிப்படியாக உயர்த்தப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. இந்த கட்டண வசூல் பொதுமக்களை நேரடியாக கடுமையாக பாதிக்கும். வர்த்தகத்திற்கு யுபிஐ பரிவர்த்தனை கட்டணத்தை நடைமுறைப்படுத்தினால், அந்தக் கட்டணச் செலவும், பொருட்களின் மீதே ஏற்றப்படும். அதனால் விலைவாசி உயர்வு ஏற்படும். யுபிஐ சேவைக்கு கட்டணம் வசூலிப்பது, இந்த சேவையை வழங்கிவரும் பன்னாட்டு பெரு நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்குமே, நிதி மூலதனத்திற்குமே சாதகமானதாகும். அவற்றின் லாப வேட்கைக்கு இரை போடுவதாகவே அமையும். மத்திய பாஜக அரசு இதுபோன்று கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுவதும், சாதாரண மக்களுக்கு எதிராக செயல்படுவதும் கடுமையான கண்டனத்திற்குரியது. எனவே, உடனடியாக யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூல் செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டும் என மத்திய பாஜக அரசை வலியுறுத்துகிறேன் என்ற தெரிவித்துள்ளார்.கம்யூனிஸ்ட் கண்டனம்
ரூ.2000க்கு மேல் கட்டணம்
மக்களுக்கு எதிரானது