சென்னை: டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் புரட்சியை ஏற்படுத்திய யுபிஐ சேவைக்கு கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அமலுக்கு வருமா? என்ற கேள்வி தான் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. பெரிய நிறுவனங்ளுக்கு மட்டும் இந்த கட்டணம் பொருந்தும் வகையில் சட்டத் திருத்த மசோதாவும் நிறைவேறியுள்ள நிலையில், 2,000 ரூபாய்க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு வர்த்தக தள்ளுபடி கட்டணம் விதிப்பது குறித்தும் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
யுபிஐ சேவையை பயன்படுத்தாதவர்களை இப்போது விரல் விட்டு எண்ணிவிடலாம் என்று சொல்லும் அளவுக்கு மக்கள் மத்தியில் யுபிஐ பயன்பாடு அதிகரித்துள்ளது. கையில் ஒரு பைசா ரொக்கமாக கொண்டு செல்லாமல், பெட்டி கடை முதல் வணிக வளாகம் முதல் நினைத்ததை தற்போது யுபிஐ செயலி மூலமாக வாடிக்கையாளர்கள் வாங்க முடியும்.
வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட இந்த யுபிஐ மூலமாக பணப்பரிமாற்றம் எளிதாக இருப்பதால், பொதுமக்களும் அதிக அளவில் இதை அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். யுபிஐ சேவைகளுக்காக போன் பே, ஜிபே, பேடிஎம், அமேசான் பே உள்ளிட்ட பல்வேறு மொபைல் அப்ளிகேஷன்கள் செயல்பட்டு வருகிறது.
இது மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்கள் வங்கி மூலமே யுபிஐ மூலம் பணம் செலுத்தலாம். அது மட்டுமல்லாமல் கிரெடிட் கார்டை கூட தற்போது போன் பே உள்ளிட்ட அப்ளிகேஷன்களில் இணைத்து சிறுக சிறுக செலவழித்துக் கொள்ளலாம். போன் பே உள்ளிட்டவை வந்த பிறகு பலர் கைகளில் பணமே வைத்துக் கொள்வதில்லை. எதற்கெடுத்தாலும் யுபிஐ ஸ்கேனர் இருக்கிறதா என்று பெட்டி கடைகளில் கூட கேட்டு வருகின்றனர். இந்நிலயில், இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் நோக்கில், 2020 ஜனவரி மாதம் முதல் யுபிஐ மற்றும் ருபேய் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கான வர்த்தக தள்ளுபடி கட்டணத்தை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்தது. இதன் மூலம் வணிகர்களும், வாடிக்கையாளர்களும் எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல்யுபிஐ சேவையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளில் யுபிஐ பரிவர்த்தனைகள் பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், வங்கிகள் மற்றும் டிஜிட்டல் கட்டண சேவை வழங்கும் நிறுவனங்களின் செலவுகள், சர்வர் பராமரிப்பு, சைபர் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கான நிதி கணிசமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தற்போதைய மானிய முறை நீண்ட காலத்திற்கு சாத்தியமில்லை என்று வங்கி மற்றும் கட்டணத் துறை நிறுவனங்கள் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தின. இதையடுத்து, 2000 ரூபாய்க்கு மேற்பட்ட யுபிஐ வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு 0.25 சதவீதம் முதல் 0.35 சதவீதம் வரை எம்டிஆர் கட்டணத்தை மீண்டும் அறிமுகப்படுத்த அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கான சட்டத் திருத்த மசோதாவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் இந்த கட்டணம் அனைத்து வணிகர்களுக்கும் பொருந்தாது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆண்டு வருமானம் ரூ.1.5 கோடி வரை உள்ள சிறு மற்றும் குறு வணிக நிறுவனங்கள், சிறிய வர்த்தகர்கள் ஆகியோருக்கு இந்த எம்டிஆர் கட்டணத்தில் இருந்து விலக்கு வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, பெரிய நிறுவனங்கள் மற்றும் அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்த கட்டணம் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. முக்கியமாக, இந்த பொதுமக்கள் தங்களுக்கு ஒருவருக்கொருவர் பணம் அனுப்பும் பரிவர்த்தனைகளுக்கு இந்த கட்டணம் இல்லை என்பதால் மக்கள் பயப்படத் தேவையில்லை என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.டிஜிட்டல் பரிவர்த்தனை
யுபிஐ
எம்டிஆர் கட்டணம்
சட்டத் திருத்த மசோதா
கட்டணம் இல்லை