சென்னை: நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள்.. ஏழை மக்களின் சொந்த வீடு கனவை நிறைவேற்றி வருகிறது... வீடு கிடைத்த பிறகு, அதற்கான பணிகள் மற்றும் ஆவணங்களுக்காக மக்கள் அலுவலகம் செல்ல வேண்டியுள்ளது. இனிமேல் இவர்களுக்கு அந்த வேலைகளை இன்னும் எளிதாக்க ஒரு புதிய வசதி வரப்போகிறது.. அது என்ன தெரியுமா? அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.!!
சொந்த வீடு என்பது பல ஏழை குடும்பங்களுக்கு இன்னும் ஒரு பெரிய கனவுதான்... அந்தக் கனவை நனவாக்கும் வகையில், நகரங்களில் வீடு இல்லாமல் தவிக்கும் ஏழை மற்றும் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு வீடுகளை கட்டி வழங்கி வருவதுதான் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்.
அரசு நிதியுடன் மட்டுமல்லாமல், மத்திய அரசு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் நிதியையும் பயன்படுத்தி குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்தி, தகுதியான குடும்பங்களை தேர்வு செய்து வீடுகளை ஒதுக்கி வருகிறது. இந்த வாரியத்தின் மூலம், வீடு பெற்றவர்கள் தவணை செலுத்துவது, வீட்டு விவரங்களை சரிபார்ப்பது, மாற்றங்கள் செய்வது, விற்பனை பத்திரம் பெறுவது போன்ற வேலைகளை எளிதாக செய்ய முடியும். மேலும், வாரியத்தின் எந்த அலுவலகம் சென்றாலும் இந்த சேவைகளை பெறும் வசதியும் கிடைக்கும். இப்படி வாரியத்தின் வீடுகளை பெற்றவர்களுக்கு இப்போது ஒரு முக்கியமான மாற்றம் வரப்போகிறது. அதாவது, இதுவரை கையில் இருந்த அடையாள அட்டை வெறும் அட்டையாக இல்லாமல், இனிமேல் "ஸ்மார்ட் கார்டு" ஆக மாற உள்ளது. இதற்காக, வாரியத்தின் வீடுகளுக்கு பயனாளிகள் தேர்வு செய்யப்படும்போதே, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அவர்களுடைய பயோமெட்ரிக் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. வீடு ஒதுக்கப்பட்ட பிறகு, காகித வடிவில் ஒதுக்கீட்டு ஆணையும் வழங்கப்படுகிறது. அது மட்டுமல்ல, ஒவ்வொரு குடும்பத்தையும் அடையாளப்படுத்த குடும்ப போட்டோவுடன் ஒரு அடையாள அட்டையும் கொடுக்கப்படுகிறது. இந்த அட்டையில் குடும்பத் தலைவரின் ஆதார் மற்றும் பயோமெட்ரிக் விவரங்கள் இடம்பெறும். இதுவரை இந்த அட்டை அடையாளத்துக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போது, இதன் மூலம் பல்வேறு வசதிகளை பெறும் வகையில் மாற்றப்பட உள்ளது. அதன்படி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அலுவலகங்கள் அனைத்தும் வெப்சைட் மூலம் இணைக்கப்பட உள்ளன. இதனால் ஒருவர் எந்த அலுவலகத்தில் வீடு பெற்றாரோ, அதே அலுவலகத்துக்கு மட்டுமே சென்று வேலைகளை செய்ய வேண்டிய நிலை இருக்காது. இதை இன்னும் எளிமையாக சொல்வதானால், வீட்டுக்கான தவணை தொகையை செலுத்துவது, வீடு தொடர்பான விவரங்களை சரிபார்ப்பது, தேவையான மாற்றங்களை செய்வது, விற்பனை பத்திரத்தை பெறுவது போன்ற பணிகளை வாரியத்தின் வேறு அலுவலகங்கள் மூலமாகவும் மேற்கொள்ளும் வசதி கிடைக்கப் போகிறது. இதன்மூலம் வீட்டை பெற்றவர்கள், அலுவலகம் அலுவலகமாக அலைய வேண்டியதில்லை.. இதற்காகவே ஆன்லைன் சேவைகள் ஆரம்பமாகி உள்ளன. ரூ.75 லட்சம் செலவில் இதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகளை பெற்ற குடும்பங்களின் விவரங்களை டிஜிட்டல் முறையில் ஒருங்கிணைத்து, அவர்கள் பெற வேண்டிய சேவைகளை எளிதாகவும் விரைவாகவும் வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்
"ஸ்மார்ட் கார்டு" வருகிறது
வெப்சைட் வசதி, நேரம் மிச்சம்