சென்னை: "எம்.எல்.ஏ.க்களுக்குக் கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை, விவசாயிகளுக்கான நிதியைக் கொண்டு சேர்ப்பதில் இந்த அரசு காட்டியிருக்க வேண்டும். குறுவை சிறப்புத்தொகுப்பு நிதி விவசாயிகளுக்குச் சென்று சேர இந்த விவசாயிகள் விரோத அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், நடப்பாண்டில் இன்று வரை மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில், விவசாயிகள் குறுவை சாகுபடி செய்வதை ஊக்குவிக்கும் வகையில், கடந்த ஜூன் 12 ஆம் தேதி குறுவைத் தொகுப்பு வழங்குவதற்கான அரசாணையை பிறப்பித்தது தமிழக அரசு.
குறுவை சாகுபடி தொகுப்பு என்பது நெற்பயிர்களை நடவு செய்யும் காலத்திலும், அதைத் தொடர்ந்து வரும் சில நாட்களிலும் வழங்கப்பட வேண்டியது. ஆனால், நடவு முடிந்து விரைவில் அறுவடை தொடங்கவுள்ள நிலையில், தற்போது வரை குறுவைத் தொகுப்பு வழங்கப்படாமல் உள்ளது விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "குறுவை சிறப்புத்தொகுப்பு அறிவிக்கப்பட்டு 2 மாதங்கள் கடந்துவிட்ட பிறகும், விவசாயிகளை அது சென்று சேராமல் இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்காத காரணத்தால், குறுவை சாகுபடி பொய்த்துவிட்டது - விவசாயிகளுக்கு அரசு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் பேசி இருந்தேன். வறட்சி நிவாரணம் பற்றிக் கேட்டதற்கு, குறுவை சிறப்புத்தொகுப்புக்காக நிதி ஒதுக்கியதைப் பற்றி முதலமைச்சர் விளக்கினார். ஆனால், அவர் ஒதுக்கியதாக சொன்ன அந்த நிதியும் இன்று வரை விவசாயிகளைச் சென்றடையவில்லை. இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அவற்றை இந்த Inefficient அரசு கவனித்ததா? அல்லது வழக்கம்போல விவசாயிகள் பிரச்சினையில் அலட்சியம் காட்டுகிறதா? எம்.எல்.ஏ.க்களுக்குக் கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை, விவசாயிகளுக்கான நிதியைக் கொண்டு சேர்ப்பதில் இந்த அரசு காட்டியிருக்க வேண்டும். விவசாயிகள் நலனில் அக்கறையின்றி தொடர்ந்து மெத்தனப் போக்கோடு நடந்து கொள்வது ஏற்புடையது அல்ல. குறுவை சிறப்புத்தொகுப்பு நிதி விவசாயிகளுக்குச் சென்று சேர இந்த விவசாயிகள் விரோத அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, தமிழகத்தில் அனைத்து எம்எல்ஏ.க்களுக்கும் அரசு சார்பில் கார் வழங்கப்படும். தனி உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கான ஊதியம், எரிபொருள் படி ஆகியவற்றுக்காக மாதம் ரூ.1 லட்சம் கூடுதலாக வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கடந்த புதன்கிழமை அன்று அறிவித்தார். அதை செயல்படுத்துவதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதன்படி, மஹிந்திரா நிறுவனத்தின் 6 விதமான கார்களின் மாடல்கள் தலைமைச் செயலக வளாகத்துக்கு நேற்று மாலை கொண்டு வரப்பட்டன. அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கார்கள் டெஸ்ட் டிரைவ் செய்யப்பட்டு தகுதியான மாடல் தேர்வு செய்யப்பட உள்ளது. இந்த கார் வழங்கும் திட்டத்தில் காட்டும் வேகத்தை விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி தொகுப்பு வழங்குவதில் காட்டுமாறு கோரியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.