சென்னை: பிஎம் கிசான் எனப்படும் பிரதம மந்திரி கௌரவ நிதியுதவித் திட்டம் (PM-Kisan) என்பது இந்தியாவில் உள்ள நலிவடைந்த மற்றும் குறு, சிறு விவசாயிகளுக்கு நிதி ஆதாரத்தை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசால் செயல்படுத்தப்படும் ஒரு மிக முக்கியமான திட்டமாகும். இந்த திட்டம் பற்றி, தஞ்சாவூர் விவசாயிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.. மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள அறிவிப்பில், என்ன கூறப்பட்டுள்ளது தெரியுமா?
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் தகுதியுடைய விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி, தலா 2,000 ரூபாய் வீதம் மூன்று சமத் தவணைகளாக விவசாயிகளின் வங்கிச் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது.
விவசாயிகளுக்கு பால்வார்த்த பிஎம் கிசான் திட்டம் இந்த நிதியானது விவசாயிகள் தங்களின் சாகுபடி பணிகளுக்குத் தேவையான விதைகள், உரங்கள் போன்ற இடுபொருட்களை வாங்குவதற்கும், அவசரக் கால வேளாண் தேவைகளை எவ்விதக் கடன் சுமையுமின்றி நிறைவு செய்வதற்கும் பெரும் பக்கபலமாக அமைந்து விவசாயிகளின் பொருளாதாரத் தரத்தை உயர்த்துகிறது... எனவே இதனால் பலன் பெற்று கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உயர்ந்துள்ளது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. பிஎம் கிசான் தவணைத் தொகை நிறுத்தப்படுவதைத் தவிர்க்க மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தின் கீழ் தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் முழுமையாகப் பயன்பெறும் வகையிலும், பல்வேறு தொழில்நுட்ப மற்றும் ஆவணக் காரணங்களால் தவணைத் தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பயனாளிகள் மீண்டும் இத்திட்டத்தில் இணைந்து பலன் பெறவும் மாவட்டம் முழுவதும் தற்போது சிறப்பு முகாம்கள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பிஎம் கிசான் திட்டம் பலன்கள் இந்த திட்டத்தின் கீழ் அடுத்த 23-வது தவணைத் தொகை வரும் ஜூலை மாதத்தில் விவசாயிகளின் கணக்குகளில் வழங்கப்பட உள்ள நிலையில், அதற்கு முன்பாக தங்களின் நில ஆவண விவரங்களைப் புதுப்பித்தல், வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தல் மற்றும் மின்னணு கே.ஒய்.சி. (e-KYC) பதிவுகளைச் சரிசெய்து முடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இப்போது வரை வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத காரணத்தால் 3,069 பேரும், மின்னணு கே.ஒய்.சி. பதிவு செய்யாததால் 1,196 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆதார் எண் மற்றும் மின்னணு கே.ஒய்.சி ஆகிய இரண்டு பதிவுகளையுமே செய்யாத 252 விவசாயப் பயனாளிகள் தொடர்ந்து இந்த திட்டத்தின் பணப் பலன்களை பெற முடியாத ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நீடித்து வருகின்றனர். தனித்துவ அடையாளப் பதிவு எண் அதுமட்டுமின்றி இப்போது தொடர்ந்து தவணை தொகையை பெற்று வரும் விவசாயிகளில் 7,553 பேர் இன்னும் தங்களது Farmer Registry எனப்படும் அதாவது "விவசாயிகள் தனித்துவ அடையாளப் பதிவு எண்" என்ற மிக முக்கியமான நிலவுடமை பதிவை மேற்கொள்ளாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலவுடமைப் பதிவை செய்யாத பயனாளிகளுக்கு எதிர்வரும் தவணைத் தொகை முற்றிலும் நிறுத்தப்படும் அபாயம் உள்ளதால், விவசாயிகள் உடனடியாக தங்களின் நில விவரங்களை அரசுப் பதிவேட்டில் ஏற்றி திட்டத்தின் தொடர்ச்சியை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் வட்டார அளவில் நடைபெறும் இந்த பிஎம் கிசான் சிறப்பு முகாம்களில் பங்கேற்று தங்களின் ஆவணங்களில் உள்ள குறைபாடுகளை உடனடியாகச் சரிசெய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கலெக்டர் விடுத்த அழைப்பு இதற்காக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தையோ அல்லது தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரையோ நேரடியாகத் தொடர்புகொண்டு விடுபட்ட விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், ஏற்கனவே இத்திட்டத்தின் பயனாளிகளாக இருந்து துரதிர்ஷ்டவசமாக இறந்தவர்களின் வாரிசுதாரர்கள், தங்களது பெயரில் நில ஆவணங்களை முறையாக மாற்றியிருந்தால், அதற்குரிய இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழ் ஆகிய ஆவணங்களைச் சமர்ப்பித்து இத்திட்டத்தில் தங்களைப் புதிய பயனாளிகளாகப் பதிவு செய்து தொடர்ந்து நிதியுதவியைப் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளும் இந்தச் சிறப்பு முகாம்களை முழுமையாகப் பயன்படுத்தி, நிதியுதவியைத் தடையின்றிப் பெற தேவையான அனைத்து சட்டபூர்வ நடைமுறைகளையும் உடனடியாகப் பின்பற்ற வேண்டும்" என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் மிகக் கடுமையான விழிப்புணர்வு எச்சரிக்கையை விடுத்துள்ளார்.