சொத்தை ரீசன்.. வாகை சந்திரசேகர், எம்ஜிஆர் காலத்தில் நடக்காததா? அர்ச்சனா கல்பாத்தி போஸ்ட்டிங் சர்ச்சை

  • சென்னை: "அர்ச்சனா கல்பாத்திக்கு அரசுப் பதவி தரப்பட்டுள்ளது சர்ச்சையாகி உள்ளது. சினிமாத்துறையை சேர்ந்தவர்களுக்கு அரசுப் பதவிகளை வழங்குவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், அவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களா, இங்குள்ள மக்களோடும் பண்பாட்டோடும் தொடர்புடையவர்களா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். இனிமேலாவது கவுரவப் பதவிகளையும் வாரியத் தலைவர் பதவிகளையும் வழங்கும்போது, அரசு சுதாரிப்பாகவும் கவனமாகவும் செயல்பட வேண்டும்" என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா கருத்து தெரிவித்துள்ளார்.

    Advertisement

    The Gentleman சேனலில் பேசியிருக்கும் சேகுவேரா, "தமிழக அரசு சில முக்கியமான அரசு பொறுப்புகளைத் தனிநபர்களுக்கு வழங்கி வருகிறது. திருக்கோயில்களின் அறங்காவலர்களை நியமிக்கக்கூடிய 7 பேர் கொண்ட குழுவில், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

    Advertisement

    அர்ச்சனா கல்பாத்திக்கு அரசு பதவி

    சினிமா தயாரிப்பாளர்களுக்கு இதுபோன்ற அரசுப் பதவிகளை வழங்குவது சரியா என்ற கேள்வி இப்போது பெரிய விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. இதற்கு முன்புகூட, தமிழ்நாடு டெல்லி பிரதிநிதியாக ஜனநாயகன் படத் தயாரிப்பாளர் கே. வெங்கட் நாராயணா நியமிக்கப்பட்டார்.

    கடந்த கால ஆட்சிகளிலும்கூட சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு வாரியத் தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ பதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் ஆர்.எம். வீரப்பன் போன்றவர்களுக்கும், திமுக ஆட்சிக் காலத்தில் ராமநாராயணன், வாகை சந்திரசேகர் போன்றவர்களுக்கும் பதவிகள் வழங்கப்பட்டன.

    தவெக அரசு - எதிர்ப்பு அலைகள்

    அதனால் திரைத்துறையினருக்கு பதவி வழங்குவது ஒன்றும் புதிதல்ல. அதைத் தவறென்றும் நான் சொல்லவில்லை. ஆனால், அன்றைக்குப் பதவி பெற்றவர்கள் அனைவரும் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள்.. இங்கேயே வாழ்வாதாரத்தை கொண்டவர்கள்.

    Advertisement

    ஆனால் இன்றைக்கு நிலைமை வேறு. அர்ச்சனா கல்பாத்தி கேரளாவைச் சேர்ந்தவர்... தமிழ்நாட்டுக் கோயில்களுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? டெல்லி பிரதிநிதியாகப் போடாப்பட்ட வெங்கட் நாராயணா ஆந்திராவைச் சேர்ந்தவர். இப்படி பக்கத்து மாநிலத்தவருக்கு தமிழ்நாட்டின் அதிகாரமிக்க பதவிகளை தாரை வார்ப்பது மிகப்பெரிய தவறு. இந்த நியமனங்கள் எதிர்காலத்தில் பெரிய அரசியல் எதிர்ப்பு அலையை உருவாக்கும்.

    தமிழினம், தமிழ் உணர்வு"

    தேர்தல் நேரத்தில், தமிழ்நாட்டின் முக்கிய பதவிகள் பிற மாநிலத்தவருக்குத் தாரை வார்க்கப்பட்டு விட்டன என்ற பிரச்சாரம் மக்களிடம் இயல்பாகவே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அப்போது திமுக, அதிமுக போன்ற எதிர்கட்சிகள் இதை கடுமையாகக் விமர்சிக்கும்.. "தமிழினம், தமிழ் உணர்வு" என்ற பேச்சு இயல்பாகவே எழும்போது, அதற்கு அரசால் தகுந்த பதில் சொல்ல முடியாது.

    Advertisement

    அறங்காவலர் நியமனக் குழு உறுப்பினர் பதவி என்பது ஊதியம் இல்லாத கவுரவப் பதவிதான். ஆனால், அது மிகப்பெரிய அதிகாரம் கொண்ட பொறுப்பு. இந்த குழுவில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் இருக்கிறார்கள். அவர்களோடு நடக்கும் முக்கிய கூட்டங்களில் அர்ச்சனா கல்பாத்தி போன்றவர்கள் கலந்து கொள்ளாமல் போனால், அந்தப் பதவியே வீணாகிவிடும்.

    அதுமட்டுமல்லாமல் பிரபலங்களை இதுபோன்ற குழுக்களில் போடும்போது, அவர்கள் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி மற்ற உறுப்பினர்களைவிட மேலாதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.

    நடிகை திரிஷா நெருங்கிய தோழி

    இன்னொரு பக்கம், அர்ச்சனா கல்பாத்தி நடிகை திரிஷாவுக்கு மிக நெருங்கிய தோழி என்பதால், இந்தப் பதவி நியமனத்தில் திரிஷாவின் தலையீடு இருக்குமோ என்ற தேவையற்ற வதந்திகளும் சர்ச்சைகளும் கிளம்புகின்றன. திருமண நிகழ்வுகளில் அவர்கள் ஒன்றாக பங்கேற்ற போட்டோக்களை ஷேர் செய்து சோஷியல் மீடியாவில் தேவையில்லாமல் பேசுகிறார்கள்.

    Advertisement

    ஒரு அரசு, இதுபோன்ற தேவையில்லாத சர்ச்சைகள் உருவான பிறகு டேமேஜ் கண்ட்ரோல் செய்வதை விட்டுவிட்டு, முன்கூட்டியே இத்தகைய விவகாரங்களைத் தவிர்க்க வேண்டும்.

    சொத்தையான காரணம்

    அதற்காக இதற்கு அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அளிக்கும் விளக்கமும் ஏற்கும்படியாக இல்லை. அர்ச்சனா கல்பாத்தி 10 முதல் 20 கோயில்களுக்குக் கும்பாபிஷேகமும் புனரமைப்புப் பணிகளும் செய்திருக்கிறார், அதற்காகவே இந்த ஊக்குவிப்புப் பதவி என்று அமைச்சர் சொல்கிறார். இது மிகச் சொத்தையான காரணம்.

    தமிழ்நாட்டில் எத்தனையோ பேர் சொந்த பணத்தை செலவழித்து தர்ம காரியங்கள் செய்கிறார்கள்.. கோயில்களுக்கு சொத்துக்களை தானமாக எழுதியே வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் அரசு பதவி கொடுத்துவிட்டதா?

    Advertisement

    சினிமாத்துறையை சேர்ந்தவர்களுக்கு அரசுப் பதவிகளை வழங்குவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், அவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களா, இங்குள்ள மக்களோடும் பண்பாட்டோடும் தொடர்புடையவர்களா என்பதை மட்டுமே ஆராய்ந்து பார்க்க வேண்டும். இனிமேலாவது இதுபோன்ற கவுரவப் பதவிகளையும் வாரிய தலைவர் பதவிகளையும் வழங்கும்போது, அரசு மிகவும் சுதாரிப்பாகவும் கவனமாகவும் செயல்பட வேண்டும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Archana Kalpathi Government Post.. Trisha’s Name Dragged Into the Controversy, What’s the Real Background?