சென்னை: சென்னையில் இருந்து வைகை சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் மதுரைக்கு செல்ல வழக்கமாக 7 மணி நேரம் 35 நிமிடங்கள் எடுத்து கொள்ளும். ஆனால், சமீபத்தில் வைகை எக்ஸ்பிரஸ் இந்த 430 கிமீ தூரத்தை, வெறும் 5 மணி நேரம் 35 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்துள்ளது. இது கிட்டத்தட்ட வந்தே பாரத் ரயிலுக்கு இணையான வேகம் என பலரும் புகழ்ந்து வருகிறார்கள்.
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நீண்ட தூர பயணத்திற்கு ரயில்களையே பயன்படுத்துகிறார்கள். ரயில்களில் சவுகரியமாக பயணிக்கலாம் என்ற போதிலும் ரயில் தாமதம் என்பது பலரும் நிஜமாகவே எதிர்கொள்ளும் ஒரு சிக்கல் தான். அந்த சிக்கலை ஓரளவுக்கு தீர்ப்பது வந்தே பாரத் போன்ற அதிவேக ரயில்கள்.
ஆனால், வந்தே பாரத் ரயிலையே தூக்கி சாப்பிடும் வேகத்திற்கு வைகை சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் பறந்துள்ளது. சென்னையில் இருந்து கோவைக்கு 430 கிமீ உள்ள நிலையில், அதை கடக்க வழக்கமாக வைகை எக்ஸ்பிரஸுக்கு 7.35 மணி நேரம் ஆகும். ஆனால், வெறும் 5.35 மணி நேரத்தில் வைகை எக்ஸ்பிரஸ் கடந்துள்ளது. கடந்த அக்டோபர் 24ம் தேதி தான் இந்த சாதனை பயணத்தை வைகை எக்ஸ்பிரஸ் மேற்கொண்டுள்ளது. அன்றைய தினம் சென்னையில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் தாமதமாகவே புறப்பட்டுள்ளது. வழியிலும் கூட தாமதம் ஆகியிருக்கிறது. ஆனால், பயண நேரத்தை எப்படியோ ஈடுகட்டி அதிவிரைவாக மதுரையை சென்றடைந்துள்ளது. ரூப்ட்டில் பெரும்பாலான இடங்களில் மணிக்கு 110 கிமீ வேகத்தில் ரயில் இயக்கப்பட்டதாகவும், வந்தே பாரத் ரயில்களுக்கு இணையான வேகத்தில் வைகை எக்ஸ்பிரஸ் பயணித்ததாகவும் கூறப்படுகிறது. தெற்கு ரயில்வேயால் இயக்கப்படும் வைகை சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், அக்டோபர் 24ம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 1.25 மணிக்குப் புறப்பட்டது. திட்டமிட்ட நேரத்தைவிட சுமார் 10 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்ட இந்த ரயில், கோடம்பாக்கம் அருகே தண்டவாள பராமரிப்புப் பணிகள் மற்றும் வழித்தடத்தில் ஏற்பட்ட தடைகள் காரணமாக மேலும் சுமார் 20 நிமிடங்கள் தாமதமாகியுள்ளது. இருப்பினும், அதன் பிறகு வேகம் எடுத்த வைகை எக்ஸ்பிரஸ் 110 கிமீ வேகத்தில் பறந்து, பயண நேரத்தை ஈடுகட்டியது. மதுரை அருகே நெருங்கிய பிறகு கட்டுமான பணிகள் நடைபெற்றதால் அந்த பகுதியில் மட்டும் ரயிலின் வேகம் குறைக்கப்பட்டது. இது தொடர்பாக ரயிலில் அடிக்கடி கவனித்து வரும் பயணிகள் கூறுகையில், "வைகை எக்ஸ்பிரஸ் தாம்பரத்திற்கு பிற்பகல் 2.25 மணியளவில் வந்தது. அங்கிருந்து 2.30 மணிக்கு புறப்பட்டது.. பின்னர் செங்கல்பட்டை அடைய 2.58 மணி ஆகிவிட்டது. செங்கல்பட்டில் இருந்து விழுப்புரம் வரையிலான 103 கிமீ தூரத்தை ஒரு மணி நேரம் 4 நிமிடங்களில் ரயில் கடந்துள்ளது. விழுப்புரத்தில் ரயில் இன்ஜின் ஓட்டுநர்கள், உதவி ஓட்டுநர்கள் மாற்றப்பட்டனர். மதுரை கோட்டத்தை சேர்ந்த பணியாளர்கள் அங்கிருந்து ரயிலை இயக்கினர். ஆனாலும் வேகம் குறையவில்லை. மதுரை ரயில் நிலையத்தை இரவு 8.37 மணியளவில் வைகை எக்ஸ்பிரஸ் சென்றடைந்தது" என்றார். அதேநேரம் இதுபோல லேட் ஆன பிறகு அதை மின்னல் வேகம் மூலம் வைகை எக்ஸ்பிரஸ் ஈடுகட்டுவது இது முதல்முறையல்ல. கடந்த 2022 மார்ச் 3ம் தேதி, மதுரையில் இருந்து காலை 7.05 மணிக்குப் புறப்பட வேண்டிய ரயில், இயந்திரக் கோளாறு காரணமாக 7.26 மணிக்கு புறப்பட்டது. 21 நிமிடங்கள் தாமதமானபோதிலும், சென்னையை மதியம் 2.07 மணிக்கே சென்றடைந்தது. சென்னை - மதுரை இடையே பயணிகளின் வசதிக்காக 1977 ஆகஸ்ட் 15ம் தேதி வைகை எக்ஸ்பிரஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய ரயில்வே வரலாற்றில் பல்வேறு சாதனைகளையும் இந்த ரயில் படைத்துள்ளது. மீட்டர் கேஜ் பாதையில் மணிக்கு 100 கிமீ வேகத்தில் இயக்கப்பட்ட இந்தியாவின் முதல் ரயில் என்ற பெருமையை வைகை எக்ஸ்பிரஸ் பெற்றது. மேலும், மீட்டர் கேஜ் ரயிலில் உணவு வழங்கும் பேன்ட்ரி கார் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் சேவையும் இதுவாகும். 1994ம் ஆண்டு, மீட்டர் கேஜ் ரயிலில் 42 இருக்கைகள் கொண்ட குளிர்சாதன வசதி பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், 2019ம் ஆண்டு வைகை மற்றும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் நவீன லிங்கே ஹோஃப்மான் புஷ் பெட்டிகளை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியது.வைகை எக்ஸ்பிரஸ்
மின்னல் வேகம்
பயணிகள் சொல்வது என்ன
வைகை எக்ஸ்பிரஸ் வரலாறு