’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்!

  • சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள விவகாரம் தமிழக அரசியலில் தொடர்ந்து விவாதத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளார். இந்நிலையில், விஜய்யை வைகோவின் மகனும் எம்பியுமான துரை வைகோ சந்தித்து பேசியதாக வெளியாகியுள்ள தகவல் திமுக கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அரசியல் கூட்டணிகளிலும், கட்சிகளின் நிலைப்பாடுகளிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக, ஆளும் தவெக அரசுக்கு ஆதரவாக சில திமுக கூட்டணிக் கட்சிகள் செயல்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

    Advertisement

    இந்த சூழலில், அதிமுகவைச் சேர்ந்த சில எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த சம்பவம் அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியது. இதை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    வைகோ

    இந்த நிலையில், இந்த விவகாரத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளார். நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய வைகோ," தற்போது சிலர் கட்சி மாறுவதையும், அதற்காக தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்வதையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் தமிழக அரசியலில் புதிதல்ல. கடந்த காலத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சிகளில் இணைந்த சம்பவங்கள் நடந்துள்ளன.

    Advertisement

    கட்சி தாவல்

    குறிப்பாக 2006-ம் ஆண்டு மதிமுக சார்பில் வெற்றி பெற்ற கம்பம் ராமகிருஷ்ணன் பின்னர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து திமுகவில் இணைந்தார். அதேபோல், அதிமுக அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்து, பின்னர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த நேரத்தில் இன்று போல பெரிய அளவில் விமர்சனங்கள் எழவில்லை" என்றும் வைகோ கூறினார்.

    அதிமுக எம்எல்ஏக்கள்

    "அன்று நடந்த சம்பவங்கள் மறக்கப்பட்டுவிட்டதா? அரசியலில் ஒருவர் உருவாக்கிய பாதையை மற்றொருவர் பின்பற்றுவது புதிதல்ல" என்ற கருத்தை வைகோ முன்வைத்துள்ளார். தற்போதைய அரசியல் சூழலில் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ள எம்எல்ஏக்கள் செய்திருப்பதும் இதே வகையான அரசியல் நகர்வுதான் என்ற கருத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

    Advertisement

    திமுக கூட்டணி

    வைகோவின் இந்த கருத்துகள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றன. ஏனெனில், அண்மைக்காலமாக திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் தவெக அரசுடன் நெருக்கமாக செயல்படுகின்றன என்ற விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்தும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

    விஜய் ஆதரவு

    இந்த நிலையில், திமுக மீது நேரடியாக விமர்சனங்களை முன்வைத்து, கடந்த கால அரசியல் நிகழ்வுகளை எடுத்துக்காட்டியுள்ள வைகோவின் பேச்சு திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்த விவகாரமே இன்னும் ஓயாத நிலையில், வைகோ கூறிய இந்த விஜய் ஆதரவு கருத்துகள் அடுத்த சில நாட்களில் தமிழக அரசியலில் மேலும் பல புதிய விவகாரங்களை உருவாக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

    Advertisement

    அதிமுக

    ஒருபுறம் அதிமுக தனது கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், மறுபுறம் தவெக தொடர்ந்து புதிய கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சித்து வருகிறது. இந்த விவகாரங்களுக்கு மத்தியில், வைகோ முன்வைத்துள்ள கேள்விகளும், அவர் சுட்டிக்காட்டிய வரலாற்றுச் சம்பவங்களும் திமுகவை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.

    English Summary

    Vaiko backs Vijay on MLA defections, citing past political precedents as Durai Vaiko's reported meeting triggers debate.