விஜயகாந்த் கதையை முடிச்சது வைகோ தான்.. விஜயையும் முடிக்காமல் விடமாட்டார்.. ஆர்.பி உதயகுமார்

  • மதுரை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அரசியல் களம் அடியோடு மாறியுள்ளது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியமைத்துள்ளது. தேர்தலுக்கு பிறகு அதிமுகவின் பல முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைந்து வருகிறார்கள். இதனால் தவெக, அதிமுக நிர்வாகிகள் இடையே கடுமையான மோதல் உருவாகி வருகிறது. இந்நிலையில், நன்றாக இருந்த விஜயகாந்த் கதையை முடித்தது வைகோ தான், அவர் விஜய்யின் கதையையும் முடித்துவிடுவார் என ஆர்.பி உதயகுமார் விமர்சித்துள்ளார்.

    Advertisement

    மதுரையில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், "ஊழலை ஒழிக்க வந்த அவதார புருஷன், மகாத்மா என்று முதலமைச்சர் விஜய்யை இன்ஸ்டாகிராம் மூலம் கன்டென்ட் கிரியேட்டர்கள் பரப்பி வருகிறார்கள். விஜய் யார் தெரியுமா என்று கேட்கிறார்கள். தெரியாதுப்பா நீங்களே சொல்லுங்க. தவெக கூட்டணியில் மதிமுக இணைந்துவிட்டது. வைகோ இருப்பதால் இனி கவலைப்பட வேண்டாம். விஜய்யை முடிக்காமல் அவர் விட மாட்டார். முடித்துவிட்டு தான் அடுத்த வேலை செய்வார்.

    Advertisement

    பேரறிஞர் அண்ணாவுக்கு கேடயமாக இருந்தேன், கலைஞருக்கு கவசமாக இருந்தேன், புரட்சி தலை அம்மாவுக்கு நான் போர்வாளாக இருந்தேன், ஸ்டாலின் ஆட்சியை காப்பாற்றுவதற்கு கருணாநிதியிடம் சத்தியம் செய்தேன் என்கிறார். விஜய்யை காப்பாற்றுவதற்கு யாரிடம் சத்தியம் செய்தார். அதிமுகவுடன் திமுக கூட்டணி வைத்தது தவறு என்று தவெக உள்ளிட்ட அனைவரும் கூறுகிறார்கள். வைகோவுடன் தவெக கூட்டணி வைத்தது தான் தவறு என்பதை விஜய் உணர்வார்.

    பாவம் விஜயகாந்த் நன்றாக இருந்தார். கிட்டத்தட்ட 12 சதவிகிதம் வங்கி வைத்திருந்தார். அவரை நீங்கள் தான் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் மூன்றாவது அணிக்கு தலைமை தாங்குங்கள் என்று கூறி அழைத்தது வைகோ. உடம்புக்கு முடியாதவரை ஊர் ஊராய் கூட்டி சென்று பேச வைத்தனர். கட்டுக்கடங்காத கூட்டத்தில் விஜயகாந்தை முதலமைச்சராக்குவோம் என்று துடித்தனர்.

    Advertisement

    தேர்தல் முடிந்ததும் பாவம் அந்த மனிதர் செத்தே போய்விட்டார். கதையை முடித்துவிட்டதே அவர் தான். வைகோ அவர்களே நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் போர் செய்யுங்கள், யாருக்கு வேண்டுமானாலும் கவசமாக இருங்கள். எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. விஜய்யை கொஞ்சம் பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள். அவர் உங்களுக்கு கவசமாக இருந்துவிட போகிறார்" என்று கிண்டலாக பேசினார்.

    English Summary

    AIADMK leader RB Udhayakumar alleged that Vaiko had ended Vijayakanth's political career and claimed he would similarly bring an end to Chief Minister Vijay's political journey.