2 மதிமுக எம்எல்ஏ ராஜினாமா செய்தால்.. வெல்ல வைப்பது என் பொறுப்பு! வைகோவிடம் உத்தரவாதம் கொடுத்த விஜய்!

  • சென்னை: மதிமுகவின் 2 எம்எல்ஏ-க்களும் ராஜினாமா செய்தால், அவர்களை வெல்ல வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என்ரு முதல்வர் விஜய் உத்தரவாதம் அளித்ததாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

    Advertisement

    சென்னையில் மதிமுகவின் பொதுக்குழு மற்றும் உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்கால தேர்தல் கூட்டணி தொடர்பான முடிவை தேர்தல் நேரத்தில் மதிமுக வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    ஏற்கனவே விசிக, சிபிஎம், சிபிஐ, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டன. தற்போது மதிமுகவும் வெளியேறி இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே திமுக மற்றும் மதிமுக நிர்வாகிகள் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. இதன் முடிவாக திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறி இருக்கிறது.

    இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், திமுக எம்பி ஆ.ராசா 2 நாட்களுக்கு முன்பே மதிமுகவை கொச்சையாக விமர்சித்தார். மதிமுக எம்எல்ஏ-க்களான செந்தில் செல்வன், ராஜேந்திரன் இருவருமே பொதுக்குழுவில் பங்கேற்கவில்லை. அதில் ராஜேந்திரன் ஏன் பங்கேற்கவில்லை என்ற விளக்கம் கொடுத்துள்ளார்.

    Advertisement

    மதிமுகவில் இருந்து விலகவில்லை என்றும் கூறி இருக்கிறார். திமுக உடனான கூட்டணியில் விலகி கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாஜக தமிழ்நாட்டில் ஊடுருவி விடக் கூடாது என்பதாலேயே, திமுகவுடன் கூட்டணியில் இருந்தோம். திமுக ஆட்சியை ஒரு வார்த்தை கூட விமர்சித்ததே இல்லை. 9 ஆண்டுகளில் ஒரு சொல் கூட மதிமுக விமர்சனமாக வைத்ததே இல்லை.

    ஆனால் தேர்தல் முடிவுக்கு பின், செய்திகளில் அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு என்ற நிலைப்பாடு மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படுகிறது. அது உண்மையென்றால், இதனைவிட அரசியல் மோசடி எதுவும் இருக்காது. நான் விஜய்யிடம் ரூ.50 கோடி வாங்கிவிட்டோம் என்றெல்லாம் பழி போடுகின்றனர். என் மீது பழிசுமத்தியவர்கள் மீது வழக்கு போடுவேன்.

    Advertisement

    சில நாட்களுக்கு முன் திருமணம் நிகழ்சியில் ஸ்டாலினை சந்தித்தேன். பேசுவார் என்று நினைத்தேன். ஆனால் பேசவில்லை. அவர் மனதில் கோபம் இருந்தது தெரிந்தது. இனி தவெக ஆட்சிக்கு ஆதரவாக இருப்போம். இடைத்தேர்தலில் தவெகவை ஆதரிப்போம். உள்ளாட்சித் தேர்தலில் தவெக உடன் மதிமுக தோழமை சக்தியாக இருக்கும்.

    மதிமுகவின் 2 எம்எல்ஏ-க்களும் ராஜினாமா செய்யலாமே என்று தவெக தரப்பில் பேசினர். ஆனால் நான் வாய்ப்பு இல்லை என்று கூறினேன். 2 உறுப்பினர்களை வெல்ல வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என்று விஜய் என்னிடம் உத்தரவாதம் அளித்தார் என்று தெரிவித்துள்ளார். மதிமுகவின் 2 எம்எல்ஏ-க்களும் உதயசூரியன் சின்னத்தில் நின்று வென்றவர்கள். இதனால் அவர்கள் திமுக எம்எல்ஏ-க்களாகவே கருதப்படுவர்.

    English Summary

    Vaiko: I Will Ensure Their Victory If MDMK MLAs Resign, Vaiko Reveals CM Vijay’s Big Political Assurance