இடைத்தேர்தலில் யாருடன் கூட்டணி? முதல்வர் விஜய்யை சந்தித்த பிறகு வைகோ கொடுத்த பதில்

  • சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தமிழக முதல்வர் விஜய்யை சந்தித்து பேசினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது வரவிருக்கும் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் தவெகவுடன் கூட்டணி அமைக்கப்படும் அல்லது திமுகவுடன் தான் கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு வைகோ விளக்கம் அளித்தார்.

    Advertisement

    மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று முதல்வர் விஜய்யை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார். சுமார் 1 மணி நேரம் முதல்வர் விஜய் - வைகோ சந்திப்பு நடைபெற்றது. சந்திப்புக்கு பிறகு தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு வைகோ பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    Advertisement

    விஜய்யிடம் பேசியது என்ன?

    ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் அமைவதற்கு தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்று முதல்வர் விஜய்யிடம் கூறினேன். ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடையில்லா சான்றிதழ் வழங்கக் கூடாது என்று விஜய்யிடம் வலியுறுத்தியுள்ளேன். இடதுசாரிகள், விசிக, விவசாய அமைப்புகள் இணைந்து ஜூலை 2 ஆம் தேதி தூத்துக்குடியில் பொதுக்கூட்டம் நடைபெறும். 30 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளை 6 பகுதிகளாக தொகுத்திருக்கிறேன்.

    முதலமைச்சர் விஜய் முதல் பிரதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்திருக்கிறேன். குடியரசு துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் புத்தகத்தை வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறேன். முதல்வர் விஜய் முதல் பிரதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்து இருக்கிறேன். அதற்கு ஒப்புதல் தந்து இருக்கிறார்" என்றார்.

    Advertisement

    மதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்கிறார்களா?

    மதிமுகவின் இரண்டு எம்.எல்.ஏக்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று வைகோவிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த வைகோ, அது நாளைக்கு தெரிந்துவிடும் என்றார். தொடர்ந்து வைகோ கூறியதாவது:- தவெக அரசு அமைந்ததில் இருந்து கமிஷன் என்ற பேச்சுக்கே இங்கே இடமில்லை. அது மக்களுக்கு மனதை குளிர்விக்கக் கூடிய ஆரோக்கியமான நிர்வாகம். கமிஷன், கரப்ஷன் என்ற சொற்களுக்கு இடமில்லாமல் விஜய் அரசு இயங்குகிறது என்பது என்னுடைய கருத்து.

    மதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்யப்போவதாக யூகங்களை நீங்கள்தான் பேசுகிறீர்கள். சில பத்திரிகைகள், விவாதங்களில் கடுமையாக பேசுகிறார்கள். யூகங்களுக்கு நான் பதில் சொல்ல முடியாது. இரண்டு பேர் ராஜினாமா செய்ய மாட்டார்களா? என்று கேட்கிறீர்கள். யூகங்களுக்கு பதில் சொல்ல இயலாது. அது பற்றி இப்போது எதுவும் சொல்ல இயலாது. மனதில் தோன்றுவதை எல்லாம் சொல்ல முடியாது.

    Advertisement

    விஜய் எளிமையாக, இயல்பாக இருக்கிறார்

    நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுகவுடன் பயணிப்பீர்களா? அல்லது தவெகவுடன் இணைவீர்களா? என்று கேட்கிறீர்கள். பொதுக்குழு சகல கோணத்திலும் இதுபற்றி கருத்துகள் பரிமாறப்பட்டு அங்கு என்ன நிலைப்பாடு என்று அங்குதான் முடிவு தெரியும்" என்றார். ஸ்டெர்லைட் தொடர்பாக நான் பேசிய போது, விஜய் நல்ல முறையில் உற்று கவனித்தார். அவர் ஸ்டெர்லைட்டிற்கு அனுமதி தர மாட்டார் என்று நம்பிக்கை உள்ளது. தமிழக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கை வெள்ளையாக உள்ளது.

    முதல்வர் விஜய் எளிமையாக இருக்கிறார். இயல்பாக இருக்கிறார். வெளிப்படைத் தன்மையோடு இருக்கிறார். நல்லது நடந்தால் வரவேற்பேன். அல்லது நடந்தால் எதிர்ப்பேன் இதுதான் வைகோ. திமுக கூட்டணியில் இருக்கிறோமோ என்பது பற்றி பொதுக்குழுவில்தான் முடிவு செய்வோம்" என்றார்.

    English Summary

    Vaiko: MDMK General Secretary Vaiko met Tamil Nadu Chief Minister Vijay at the Secretariat in Chennai. Speaking to reporters later, he responded to questions regarding a possible alliance with TVK or DMK for the upcoming bypolls and local body elections.