உச்சநீதிமன்ற நீதிபதியாக மோகனா நியமனம்! தமிழகத்தின் கீர்த்திக்கு இன்னொரு கிரீடம்! வைரமுத்து புகழாரம்

  • சென்னை: தமிழகத்தின் கீர்த்திக்கு இன்னொரு கிரீடம் என உச்சநீதிமன்ற நீதிபதியாக மோகனா நியமனம் குறித்து கவிப்பேரரசு வைரமுத்து பெருமிதம் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் கீர்த்திக்கு
    இன்னொரு கிரீடம்
    கிட்டியிருக்கிறது

    Advertisement

    இந்திய உச்ச நீதிமன்றத்துக்கு
    முன்னாள் ஒரு பானுமதிபோல்
    இந்நாள் ஒரு பெண்ணாள்
    பெருமை சூடுகிறார்

    கோவையைச் சேர்ந்த
    மூத்த வழக்கறிஞர்
    மோகனா அவர்கள்
    உச்ச நீதிமன்றத்தின்
    மாண்பமை நீதிபதியாக
    இன்று பதவியேற்கிறார்

    ஆணும் பெண்ணும்
    நிகரெனக் கொண்டு
    அறிவில் ஓங்கி
    வையம் தழைக்கட்டும் என்று
    பெண்மை வாழ்கவென்று
    கூத்திடுகிறது நெஞ்சு

    தான் தமிழச்சி
    என்னும் உணர்வு
    அறத்தின் வட்டத்தில்
    அவருக்கு இருக்காது

    ஆனால்,
    இனத்தின் வட்டத்தில்
    எங்கள் தமிழச்சி
    என்ற பெருமிதம்
    எங்களுக்கிருப்பதைத்
    தடுக்க முடியாது

    மாண்பமை நீதிபதி அவர்களுக்கு
    எமது வணக்கமும் வாழ்த்தும்

    இவ்வாறு அவர் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையில் கடந்த 22 மற்றும் 27 ஆகிய தேதிகளில் கொலிஜியம் கூட்டம் நடைபெற்றது. இந்த கொலிஜியம் கூட்டத்தில் பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதி ஷீல் நாகு, மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சேகர், மத்திய பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் சச்தேவா, ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அருண் பாலி மற்றும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வி மோகனா ஆகிய 5 பேரை நீதிபதிகளாக நியமனம் செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    இதில் நீதிபதியாக பரிந்துரை செய்யப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர் வி மோகனா, தமிழகத்தின் கோவையை சேர்ந்தவர். கொலிஜியத்தின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால், உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்படுவார். வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்பார்.

    வி மோகனா நீதிபதியாக பொறுபேற்கும்பட்சத்தில் தமிழ்நாட்டில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் 2 வது நீதிபதி, தமிழகத்தை சேர்ந்த முதல் பெண் நீதிபதி என்ற பெருமையை பெறுவார். மோகனா தற்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி கே விஸ்வநாதனுடன் ஒரே கல்லூரியில் பயின்றவர்.

    கோவையை பூர்வீகமாகக் கொண்ட வழக்கறிஞர் வி. மோகனா, சட்டத் துறையில் நீண்ட கால அனுபவம் பெற்றவர். கோவை அரசு சட்டக்கல்லூரியில் கடந்த 1988-ம் ஆண்டு சட்டம் பயின்றார். நம் நாட்டின் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட 'ஐந்தாண்டு சட்டப் படிப்பின் முதல் பேட்ச் சட்டம் பயின்றார்.

    Advertisement

    உச்ச நீதிமன்றத்தில் பல முக்கிய மற்றும் சிக்கலான வழக்குகளில் திறம்பட வாதாடியுள்ளார். கபில் சிபல், கே.கே. வேணுகோபால் உள்ளிட்ட புகழ்பெற்ற மூத்த வழக்கறிஞர்களுடன் இணைந்து பல முக்கிய விவகாரங்களில் இணைந்து செயல்பட்டுள்ளார் மோகனா.

    கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி இவர் மூத்த வழக்கறிஞர் என்ற அந்தஸ்தை பெற்றார். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரிவில் இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட இவருடைய பெயரை கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.

    English Summary

    Poet and lyricist Vairamuthu has expressed pride over the appointment of Justice Mohana to the Supreme Court, describing it as “another crown for Tamil Nadu’s glory.” His remarks have drawn attention to the significance of the appointment and its importance for the state.