திமுக தோல்வி.. எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது? வைரமுத்து சொன்ன காரணம்!

  • சென்னை: திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கவிஞர் வைரமுத்து, கொளத்தூர் தொகுதியை சிங்கப்பூர் போல மாற்றி வைத்திருந்த ஸ்டாலின் தோற்றிருக்கக்கூடாது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்தார். மேலும், தவறு செய்தோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    Advertisement

    தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்தாலும் திமுக தொடர்ச்சியாக மக்களை சந்திக்கும வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன்படி சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு பேசினார். அப்போது திமுக தேர்தல் தோல்வி தொடர்பாக சில முக்கிய கருத்துகளை கூறினார்.

    Advertisement

    வைரமுத்து

    இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து மேலும் கூறுகையில், "நன்மை செய்து, தீமை வாங்கும் இதயம் கேட்பேன் என்று கண்ணதாசன் ஒரு பாடலில் எழுதி இருக்கிறார். அந்த இதயம் எதைக் கேட்கிறது? ஒரு இதயத்தைக் கேட்கிறது. அது இதயத்தைத் தாங்குகிற இதயம், தீமையைத் தாங்குகிற இதயம். தீமை செய்து தீமை தாங்குகிற இதயத்தைக் கவிஞன் கேட்கவில்லை. நன்மை செய்து தீமை வாங்கும் இதயத்தைக் கவிஞன் கேட்கிறான்.

    நன்மை செய்தார், தமிழ்நாட்டுக்கு நன்மை செய்தார், தொண்டு செய்தார், இரவு பகலாக உழைத்தார் கொளத்தூர் தொகுதியை. இது தமிழ்நாட்டின் ஒரு தொகுதியா? சிங்கப்பூரின் ஒரு பகுதியா? என்று கேட்கும் அளவுக்கு மாற்றி வைத்தார். அவர் தோற்கடிக்கப்பட்டார் என்றால் தமிழச் சாதியின் நன்றி உணர்ச்சியின் மீது நமக்கெல்லாம் சந்தேகம் வருகிறது.

    Advertisement

    மக்கள் தான் அதிகம் வருந்துகின்றனர்

    அந்தத் தோல்வி ஒரு தோல்வி அல்ல. மே 4 ஒரு நாள் மட்டும்தான் ஸ்டாலின் தோற்றிருக்கிறார், அந்தத் தொகுதி மக்கள் 365 நாளும் தோற்கடிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். நான் ஸ்டாலினுக்காக வருந்துவதை விட, அந்தத் தொகுதி மக்களுக்காக அதிகம் வருந்துகிறேன். ஆனாலும் அந்தத் தொகுதி மக்கள் தமிழர்கள் என்பதனாலும், தமிழ்நாட்டு எல்லைக்குள் குடியிருக்கிற வாக்காளர்கள் என்பதனாலும், தமிழ்நாட்டின் சகல உரிமைகளையும் அனுபவிக்க உரிமை பெற்றவர்கள் என்பதனாலும், அவர்கள் அப்படி வாடிவிடக்கூடாது என்று ஒரு கவிஞனாக, எழுத்தாளனாக, சக குடிமகனாக அந்த மக்கள் துன்பப்படக்கூடாது என்றும் நான் விரும்புகிறேன்.

    Advertisement

    செயற்குழு கூட்டத்தில் ஸ்டாலின் பேசிய பேச்சு என் இதயத்தில் ஒரு அதிர்வை ஏற்படுத்தியது. அவர் சொன்னார், 'யாரும் யாரையும் குறை சொல்லாதீர்கள். தோல்வியின் முழுப் பொறுப்பையும் நான் ஒருவன் மட்டுமே ஏற்றுக் கொள்கிறேன்' என்று சொன்ன திராணி அவருக்கு அல்லவா தெரியும். ஒரு உண்மையைச் சொல்லுகிறேன், இந்தத் தோல்விக்கு பிறகு புலம்பிக் கொண்டிருக்கக் கூடாது. இந்தத் தோல்விக்கு பிறகு இயக்கத்தை நாம் செம்மைப்படுத்த வேண்டும். என்ன நிகழ்ந்தது என்பதை நமக்க நாமே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    தோல்விக்கு காரணம்

    நான் ஒன்றை ஒன்றைச் சொல்லிக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நான் எளியவன், அரசியல் அறியாதவன், உங்களோடு பயணிக்க வாய்ப்பற்றவன், அல்லது தகுதி கூட இல்லாதவன். ஆனாலும் நான் சொல்லுகிறேன். இந்தத் தோல்விக்கு காரணமான ஆட்கள் என்று நீங்கள் கருதுகிற ஆட்கள் யார் மீதும் நடவடிக்கை எடுப்பதற்குரிய காலம் இது அல்ல. யார் மீதும் நடவடிக்கை எடுக்கும் காலம் இது அல்ல என்று நான் சொல்வதற்குக் காரணமே, எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது? இது நம்மை நாமே தேற்றிக் கொள்ள வேண்டிய காலம்.

    Advertisement

    ஜப்பான் கதை

    ஜப்பானில் ஒரு கதையைச் சொல்வார்கள், இந்தத் தோல்வியை நாம் ஓரமாக இட்டுக் கொள்ள வேண்டும். ஜப்பானிய எரிமலை வெடிக்கும், எரிமலை குழம்புகள் விசிறிப் பரவும். பல ஊர்களையெல்லாம் அக்னிக் குழம்பு நனைக்கும். எரிமலை குழம்பு வந்து விழுந்த கிராமத்து மக்கள் ஊரை விட்டு ஓடி விடுவார்கள். சில மாதங்கள் கழித்து ஊருக்குத் திரும்புவார்கள். எரிமலை குழம்புகள் ஆறிக் கிடக்கும் சாம்பலாக. அந்தச் சாம்பலை நிலத்திலே விதைப்பார்கள். அந்தச் சாம்பலைப் போன்ற உயர்ந்த உரம் உலகத்தில் இல்லை என்பதை ஜப்பானியன் அறிவான்.

    அந்தச் சாம்பல் நிலத்தில் விதைத்தப் பிறகு சாகுபடி செய்வான். ஒரே ஒரு விளைச்சலில் மூன்று மடங்கு சாகுபடி காணக்கூடிய வலிமை அந்தச் சாம்பலுக்கு உண்டு. அந்தச் சாம்பல் தான் இந்தத் தோல்வி. அந்த விவசாயி தான் நீங்கள். அந்த விளைச்சல் தான் எதிர்காலத்தில் நீங்கள் காணப்போகிற வெற்றி என்று நீங்கள் கருதிக் கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

    English Summary

    Renowned Tamil poet Vairamuthu addressed a DMK event in Chennai, expressing sadness over MK Stalin's defeat in Kolathur despite its transforming development(ஸ்டாலின் தேர்தல் தோல்வி குறித்து வைரமுத்து): Vairamuthu on Stalin defeat latest news in tamil.