எஸ்பிபி.. பாட்டுச் சுந்தரா! என் முதல் பாட்டின் முதல் குரல் நீ.. வைரமுத்து கவிதாஞ்சலி


  • சென்னை: மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியமின் பிறந்தநாளான இன்று அவரது நினைவலைகளை கவிதையாக பகிர்ந்து கொண்டுள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து.

    Advertisement

    இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

    Advertisement

    பாட்டுச் சுந்தரா!

    என் முதல் பாட்டின்
    முதல் குரல் நீ

    பொன்மாலைப் பொழுதில்
    பதிவாகாத
    மூன்றாம் சரணத்தையும்
    உலக மேடைகளில்
    பாடிப் பாடித்
    தமிழுக்கு உயரம் தந்தவன் நீ

    'காமன் கோயில் சிறைவாசம்
    காலை எழுந்தால் பரிகாசம்'
    என்ற வரிகளில்
    பரிகாசத்திற்கு முன்னே
    சிருங்காரமாய்ச் சிரித்து
    நான் எழுதாத
    வார்த்தைகளையும்
    எழுதிப் போனவன் நீ

    'சங்கீத ஜாதி முல்லை'
    ஒலிப்பதிவில்
    பாடிக்கொண்டிருந்தது நீ;
    என் கன்னத்தில்
    ஓடிக்கொண்டிருந்தது கண்ணீர்

    'காதலே என் காதலே
    என்னை என்ன செய்யப்
    போகிறாய்' பாடலில்
    இசையமைப்பாளன்
    இசைக்காத கதறலுக்கு
    இசை கூட்டியவன் நீ

    'சத்தம் இல்லாத
    தனிமை கேட்டேன்' பாடலில்
    'வாழ்வே வாழ்வே வேண்டாமென்று
    மரணம் மரணம்
    மரணம் கேட்டேன்'
    என்று நானெழுத
    மேடைகளில் பாடும்போது
    மரணம் அமங்கலம் என்று
    சரணம் சரணம்
    சரணம் கேட்பேன்
    என்று பாடியவன் நீ

    ஆனால்,
    நீ தவிர்த்த மரணம்
    உன்னைத் தவிர்க்கத்
    தவறிவிட்டதே

    Advertisement

    நீ மரிக்கவில்லை

    என் வீட்டுக்கும்
    தோட்டத்துக்குமான
    474 கிலோ மீட்டர் பயணத்திலும்
    என் பின்னிருக்கையில் அமர்ந்து
    இன்னிசை பாடிக்கொண்டே
    வருகிறாய்

    கொரோனா நோயின்
    கொடும் விதிகளால்
    உன் மலைபோன்ற உடலுக்கு
    மாலை வைக்க முடியவில்லை

    அதனால்
    இப்போது நான் தூவும்
    ஆயிரம் மலர்களும் அழுகின்றன

    நீ இறந்தும் இருப்பவன்;
    சரீரமாக அல்ல சாரீரமாக

    இவ்வாறு வைரமுத்து தெரிவித்துள்ளார்.

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் 40 ஆயிரம் பாடலுக்கு மேல் பாடி மத்திய, மாநில அரசு விருதுகள் உள்பட ஏராளமான விருதுகளை பெற்ற பின்னணி பாடகர் எஸ்பிபி.

    கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற எஸ்பிபி, தனது 74 வயதில் காலமானார். பாடும் நிலா என அழைக்கப்பட்டு வந்தவர் எஸ்பிபி.

    Advertisement

    வைரமுத்து எழுதிய பாடல்களுக்கு உயிர் கொடுத்தவர் எஸ்பிபி! அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையில் வைரமுத்து உருக்கமான ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் தான் எழுதிய முதல் முதல் பாடலை பாடிய எஸ்.பி.பி-தான் தனது கடைசி பாடலையும் பாட வேண்டும் என்று கூறி உருக்கமாக தெரிவித்திருந்தார்.

    "எஸ்.பி.பி அவர்களே, எங்கள் வாழ்வின் அன்றாடமே... எங்கள் மூளையில் ஒரு மூலையில் கூடுகட்டிப் பாடும் குயிலே... மீண்டு வரவேண்டும். இசை உலகை நீங்கள் ஆண்டு வர வேண்டும். என் முதல் பாடல் பாடியவன் நீ. என் கடைசி பாடலையும் நீதான் பாட வேண்டும். மேகங்கள் வந்து வந்து போகும். வானம்தான் நிரந்தரம். இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என மாறி மாறி நிகழ்ந்த என் கலை வாழ்வில், மாறாத மகா கலைஞன் நீ!

    Advertisement

    நீ மீண்டு வருவாய்... இசை உலகை ஆண்டு வருவாய்... இந்த உலகமே உனக்காக வேண்டி நிற்கிறது. இந்த உலகத்துக்கு இன்பம் மட்டுமே கொடுத்து பழகியவன் நீ. துன்பம் கொடுக்க மாட்டாய் என்று எனக்குத் தெரியும்.

    பாட்டுக் குயிலே சிறகை விரி, கூண்டை உடை... மீண்டு வா... இசை உலகை ஆண்டு வா... பாட வா...." என்று கூறியுள்ளார்.

    மேலும், கவிஞர் வைரமுத்து, பாடல் ராஜாவே என்று எஸ்.பி.பி குணமடைய வேண்டும் என்று உருக்கமாக பாடல் பாடியிருந்தார்.

    English Summary

    On the birth anniversary of legendary playback singer SP Balasubrahmanyam, celebrated lyricist Vairamuthu shared a heartfelt poem reminiscing about the singer’s unforgettable voice, musical legacy, and the memories he left behind. The tribute has touched fans and music lovers, highlighting the enduring impact of SPB’s contribution to Indian music.