தனது பிறந்தநாள் அன்றே ‘ஞானபீட’ விருது பெறும் கவிஞர் வைரமுத்து.. உருக்கமான பதிவு!

  • சென்னை: கவிப்பேரரசு வைரமுத்து இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தனது பிறந்தநாளன்றே, 'ஞானபீட' விருதினை டெல்லியில் பெற இருக்கிறார் வைரமுத்து. இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    Advertisement

    கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக கோலோச்சி வருகிறார் கவிப்பேரரசு வைரமுத்து. அவர் இன்று தமது 73வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தனது வைர வரிகளால் திரைப் பாடல்களில் மாயம் செய்யும் வைரமுத்துவின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    Advertisement

    கவிஞர் வைரமுத்துவுக்கு 'ஞானபீட விருது' டெல்லியில் இன்று (ஜூலை 13) வழங்கப்பட உள்ளது. ஞானபீட விருது பெறுவதற்காக டெல்லி சென்றுள்ளார் வைரமுத்து. தனது பிறந்தநாள் அன்றே, இந்தியாவில் இலக்கியதற்கென வழங்கப்படும் மிக உயரிய விருதான ஞானபீட விருது பெறும் சிறப்பைப் பெறுகிறார் வைரமுத்து.

    இன்றைய தேனி மாவட்டத்தின் மெட்டூர் என்ற கிராமத்தில் 1953-ஆம் ஆண்டு பிறந்தவர் வைரமுத்து. தந்தை ராமசாமி - தாயார் அங்கம்மாள். வடுகபட்டியில் பள்ளிக்கல்வி முடித்து, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் உயர்கல்வி படித்தார்.

    1980ல் பாரதிராஜாவின் 'நிழல்கள்' படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகம் ஆனார். இது ஒரு பொன் மாலைப் பொழுது' என்ற பாடலே அவர் திரையுலகில் இயற்றிய முதல் பாடல். இதுவரை சுமார் 8,000 பாடல்கள் எழுதி இருக்கிறார்.

    Advertisement

    திரையிசைப் பாடல்கள், கவிதைகள் மட்டுமின்றி நாவல், சிறுகதை, கட்டுரை, வாழ்க்கை வரலாறு, மொழிபெயர்ப்பு, சுயசரிதை என்று எல்லா இலக்கிய வடிவங்களையும் எழுதிச் சாதனை படைத்திருக்கிறார் கவிஞர் வைரமுத்து. வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம் 2003-ல் சாகித்ய அகாடமி விருது பெற்றது.

    இந்நிலையில் தான் சென்னையில் இல்லை என்றும் ஞானபீட விருது பெறுவதற்காக டெல்லி சென்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் வைரமுத்து. கவிஞர் வைரமுத்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
    "தமிழ் உறவுகளே!
    வணக்கம்.

    நாளை (ஜூலை 13)
    என் பிறந்தநாளில்
    சென்னையில் இல்லை;
    டெல்லி செல்கிறேன்

    ஞானபீட விருதினைப்
    பிறந்தநாளில் பெறும்
    பெரும்பேறு வாய்த்திருக்கிறது

    எங்கிருந்தாலும்
    என்னை ஒருகணம்
    நினைவு கூருங்கள்;
    நாடும் மொழியும்
    நலமுற வாழ்த்துங்கள்

    Advertisement

    இந்த 73 வயதில்
    என்ன தோன்றுகிறது என்பதை
    உங்களுக்குச் சொல்ல வேண்டும்

    பொன்னும் பொருளும்
    மண்ணும் பதவியும்
    நிலைபெறுவதில்லை

    செலுத்தும் அன்பும்
    செய்யும் அறமுமே
    நிலைபெறுகின்றன

    என் வாழ்வு
    அன்பின் வழியது;
    எழுத்து
    அறத்தினும் வலியது.
    இரண்டையும் போற்றுகிறேன்

    அன்பு செலுத்துக;
    அறம் செய்க;
    வாழ்வாங்கு வாழ்க!" எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Poet Vairamuthu is celebrating his 73rd birthday today. On this very day, he is set to receive the Jnanpith Award in Delhi. He has shared a post regarding this on X.