சென்னை: ஒரு அரசியல் கட்சியினை சேர்ந்த நபரால் பாலியல் ரீதியாக அப்யூஸ் செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கதறி அழுத சம்பவம் நடந்துள்ளது.. வைஷாலி போன்ற பெண் பிரபலங்கள் இதுபோன்ற உண்மையான பாலியல் அத்துமீறல்களுக்கும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் துணிச்சலாக ஆதரவுக் குரல் கொடுக்க வேண்டியதுதானே? என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
Mancholai என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, "தமிழக அரசு மின் கட்டணத்தையும் சொத்து வரியையும் உயர்த்திவிட்டதாக பரவலாக ஒரு பேச்சு நிலவுகிறது. தேர்தல் காலத்தில் விஜய்க்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த வைஷாலி போன்ற சில இன்ஸ்டாகிராம் பிரபலங்கள், இத்தகைய செய்திகளை அவசரப்பட்டு பரப்புகிறார்கள்.
அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக ஏதாவது அரசாணையோ அல்லது செய்திக் குறிப்போ வெளியாகியுள்ளதா என்பதை ஆய்வு செய்யாமல், அவசர அவசரமாக வீடியோவை பதிவிடுகிறார்கள்.. உண்மை நிலவரம் அறியாமல் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், தங்களைப் பிரபலப்படுத்திக் கொண்டு வருமானம் ஈர்ப்பதற்காகவும் இவ்வாறு செய்வது முற்றிலும் தவறான செயலாகும். அரசையோ அல்லது அதன் குறைபாடுகளையோ விமர்சிப்பதற்கு எல்லாருக்குமே முழு உரிமை உள்ளது. அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், நாம் பேசும் செய்தி உண்மையானதா என்பதை முதலில் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். மின் கட்டணத்தை பொறுத்தவரை பருவ கால மாற்றங்கள், வெயில் காலத்தில் கரண்ட்டின் கூடுதல் பயன்பாடு, எலக்ட்ரிக் ஸ்டவ் அல்லது எலக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்துவது போன்ற காரணங்களால் கட்டணத்தில் சின்ன சின்ன ஏற்ற இறக்கங்கள் இயல்பாகவே ஏற்படும். கடந்த 6 முதல் 8 மாதங்களில் ரீடிங்கை எடுத்துப் பார்த்தால் அது சராசரியான அளவிலேயே இருக்கும். மின் கட்டணம் குறையும்போது அமைதியாக இருந்துவிட்டு, கொஞ்சம் அதிகரிக்கும்போது மட்டும் மின் கட்டணம் உயர்ந்துவிட்டது எனப் பரப்புவது சரியல்ல. உண்மை நிலைமை இப்படியிருக்கும்போது, அரசை தேவையின்றி குறை சொல்வதற்காகவும், குறிப்பிட்ட அரசியல் அசைன்மென்ட்களுக்காகவும் சில நபர்கள் இதனைப் பெரிய அளவில் மிகைப்படுத்தி பிரச்சாரமாகவும் மாற்றுகிறார்கள். சொத்து வரியும் உயர்த்தப்பட்டுவிட்டதாக பரப்பப்பட்ட வதந்திக்கு மாநகராட்சி ஆணையர் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார். புதிய அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பொதுவான சொத்து வரி உயர்வு எதுவும் செய்யப்படவில்லை. ஒரு சொத்தில் கூடுதல் தளங்கள் கட்டுதல், வீட்டை விரிவாக்கம் செய்தல் அல்லது பழைய கட்டடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டுதல் போன்ற கட்டமைப்பு மாற்றங்களை செய்தவர்களுக்கு மட்டுமே வரிக் கணக்கீடு மறு நிர்ணயம் அதாவது Re-assessment செய்யப்பட்டுள்ளது. இது எல்லாருக்குமே பொதுவான சொத்து வரி உயர்வு கிடையாது என்பதையும் சென்னை மாநகராட்சி ஆணையர் தெளிவுபடுத்தியுள்ளார். இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் எதையும் முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல் அவசரப்பட்டுப் பேசிவிட்டுப் பிறகு சங்கடப்படுவதை தவிர்க்க வேண்டும். ஒரு கமர்ஷியல் பொருளை விளம்பரப்படுத்துவதற்கும், அரசின் கொள்கை முடிவுகளை விமர்சிப்பதற்கும் பெரிய வேறுபாடு உள்ளது என்பதை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும். வைஷாலி போன்ற இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற நோக்கில் பொய் தகவல்களைப் பரப்புகிறார்களே தவிர, சமூகத்தில் உண்மையில் நடைபெறும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பதில்லை. சமீபத்தில் ஒரு அரசியல் கட்சியினை சேர்ந்த நபரால் பாலியல் ரீதியாக அப்யூஸ் செய்யப்பட்டதாகப் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கதறி அழுத சம்பவத்தைக் கண்டோம். வைஷாலி போன்ற பெண் பிரபலங்கள் இதுபோன்ற உண்மையான பாலியல் அத்துமீறல்களுக்கும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் துணிச்சலாக ஆதரவுக் குரல் கொடுக்க வேண்டியதுதானே? ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்த பாலியல் குற்றங்கள் உட்பட சமுதாயத்தில் உண்மையில் நடைபெறும் பிரச்சனைகளை பற்றி பேசாமல் கடந்துவிட்டு, உண்மை இல்லாத விஷயங்களைப் பேசிப் பரபரப்பை ஏற்படுத்துவது எந்தவிதத்தில் நியாயம்? இல்லாத வதந்திகளை பரப்புவது ஒரு வகையான மீடியா மோசடி என்றே பொருள் கொள்ளப்படும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.மின் கட்டணம் உயர்வு
எலக்ட்ரிக் பயன்பாடுகள்
வைஷாலி பிரபலங்கள்
சொத்து வரி உயர்வா
அவதூறுகள் பரப்பும் பிரபலங்கள்