“40 நாள் ஆட்சியில் தவெக அரசு குதிரை பேரத்தில்தான் வேகமாக செயல்பட்டுள்ளது”.. வானதி சீனிவாசன் காட்டம்

  • சென்னை: "40 நாள் ஆட்சியில் தவெக அரசு குதிரை பேரத்தில்தான் வேகமாகச் செயல்பட்டுள்ளது. டெல்லி சிறப்புப் பிரதிநிதியாகக் கர்நாடகாவைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டது குறித்து முதல்வர் விஜய் பதில் சொல்ல வேண்டும். அனுபவம் மிக்கவரை நியமிக்கவில்லை எனில் மக்கள் கேள்வி கேட்பார்கள்" என்று பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

    Advertisement

    பாஜக தேசிய மகளிரணி தலைவியும், முன்னாள் எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "தமிழக அரசு சார்பாக, டெல்லிக்குச் சிறப்புப் பிரதிநிதியாகச் செல்பவர்கள், அங்குள்ள பல்வேறு மத்திய அமைச்சர்களுடன் பேசி, தமிழகத்திற்கு என்ன உதவி தேவை, தமிழகத்தின் பிரச்சனைகள் என்ன என்பதை மத்திய அரசாங்கத்திடம் எடுத்துச் சொல்லி, அதை அரசியல் பூர்வமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் செய்ய வேண்டியது மிக முக்கியமான பணியாகும்.

    Advertisement

    அதாவது ஒரு அதிகாரியை நியமிப்பது என்பது முதலமைச்சருடைய தனிப்பட்ட விருப்பம்; அதை நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். அவர்களுக்கென்று ஒரு தனி உரிமை இருக்கிறது, அவர்கள் யாரை வேண்டுமானாலும் நியமிக்கலாம். ஆனால், நியமிக்கப்பட்ட நபரைப் பற்றி சர்ச்சைகள் எழும்போது, அதற்குப் பதிலளிக்க வேண்டியது முதலமைச்சருடைய கடமை என்றுதான் நான் பார்க்கிறேன்.

    அவரைப் பற்றி என்னென்னவோ பல விஷயங்கள் சொல்கிறார்கள். அவர் தமிழகத்தைச் சாராதவர் என்றெல்லாம் கூறுகிறார்கள்; அதுகூட பெரிய விஷயம் இல்லை. தமிழகத்தின் உணர்வோடு ஒன்றி, தமிழகத்தின் நலனுக்காக வேலை பார்த்தால் கூட போதும். ஆனால், எந்த அளவிற்கு அவர் தமிழகத்தின் பிரச்சனைகளைப் பற்றிப் புரிந்தவர்? மத்திய அரசாங்கத்தின் செயல்பாடுகள் என்ன, அவர்களுடைய திட்டம் என்ன, அதை எப்படி நாம் இங்கே கொண்டுவர முடியும் என்பதிலெல்லாம் எந்த அனுபவமும் இல்லாத ஒருவராக அவர் இருக்கிறார். அப்படி இருக்கும்போது அவர் எதன் அடிப்படையில் மற்றவர்களைச் சந்திப்பார்? அதற்கும் முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    Advertisement

    அதாவது மாநிலத்தில், நீங்கள் கர்நாடக மாநிலத்தில் இன்று தமிழக அரசில் அங்கம் வகிக்கின்ற காங்கிரஸ் கட்சியினுடைய முதலமைச்சர்தான் இருக்கிறார். அங்குள்ள கோயில்களுக்கெல்லாம் செல்லக்கூடிய நம்முடைய முதலமைச்சர், இந்தப் பிரச்சனைக்காக நேரடியாகக் கர்நாடக முதலமைச்சரைச் சந்தித்துப் பேச வேண்டும்.

    ஏனென்றால், எந்தக் காரணத்தைக் கொண்டும் மத்திய அரசாங்கம் இதில் உறுதியாக இருக்கிறது. மேகதாது அணைப் பிரச்சனையைப் பொறுத்தவரை, தமிழகத்தினுடைய அனுமதி இல்லாமல் கட்டக்கூடாது என்பதுதான் மத்திய அரசாங்கத்தினுடைய நிலைப்பாடு. அதை ஒரு காங்கிரஸ் கட்சியினுடைய முதலமைச்சர் மீறுகிறார் என்றால், இங்கிருக்கக்கூடிய அரசாங்கத்தின் ஒரு கூட்டணிக் கட்சியின் தலைவர் என்கின்ற முறையிலே நிச்சயமாக முதலமைச்சர் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும்.

    Advertisement

    ஏனென்றால், இது மத்திய அரசாங்கத்தினுடைய பிரச்சனை அல்ல; இது கர்நாடக மாநிலம் மற்றும் அந்த முதலமைச்சர் ஏற்படுத்துகின்ற பிரச்சனை. அதனால், தங்களுடைய கூட்டணி மற்றும் நல்லுறவின் அடிப்படையில் இந்தப் பிரச்சனையைச் சுமுகமாகத் தீர்ப்பதற்கு முதலமைச்சருக்கு வாய்ப்பு இருக்கிறது. அதைப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை." எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    “In its 40 days of governance, TVK government has acted swiftly only when it comes to horse-trading. Chief Minister Vijay must provide an explanation regarding the appointment of a person from Karnataka as the Special Representative in Delhi. People will question the move if an experienced individual is not appointed,” criticized senior BJP leader Vanathi Srinivasan.