சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பேத்தி திருமணத்தில் வேத மந்திரங்கள் முழங்க வைதீக முறைப்படி திருமணம் நடைபெற்றதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கு பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தற்போது கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். துரைமுருகனை அவமதித்த கி.வீரமணியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என்றும், இனியும் இந்து மதத்தை கேலி செய்தால் திமுக என்ற கட்சியே இருக்காது என்றும் வானதி தெரிவித்துள்ளார்.
திமுக பொதுச்செயலாளரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான துரைமுருகனின் பேத்தி செந்தாமரைக்கும், சினிமா தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் மகன் தீபக்குக்கும் நவம்பர் 1-ம் தேதி திருமணம் நடைபெற்றது.
வேலூர் மக்களவைத் தொகுதி எம்பி கதிர் ஆனந்தின் மகளான செந்தாமரையின் திருமணம் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது. இந்த திருமணத்தில் திமுக தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
சனாதனத்துக்கு எதிராகவும், இந்து மதத்துக்கு எதிராகவும் திமுக தலைவர்கள் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், திமுகவின் மூத்த தலைவரான துரைமுருகன் குடும்பத்தில் வைதீக முறைப்படி திருமணம் நடைபெற்றது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தி விட்டது.. இந்த திருமணம் தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், "திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இல்லத் திருமணம் புரோகித முறையில் நடந்திருப்பது தலைமைக்கும், கட்சிக்கும் இழுக்கைத் தேடித் தருவதாகும். இத்தகைய இரட்டை நிலை இனி தொடராமல் கட்சியின் தலைவர் தடுத்திட வேண்டும். புரோகித முறையில்தான் தங்கள் வீட்டுத் திருமணம் நடைபெறும் நிலை உள்ளது என்றால், அதற்கேன் திமுக தலைவர் தலைமையில் அவர் நடத்தி வைப்பதுபோல், திராவிட இயக்கத் தலைவர்கள் படமும் போட்ட அழைப்பிதழ் எதற்காக? அதுவும், திமுகவில் இரண்டாவது பொறுப்பில் பொதுச்செயலாளர் இல்ல நிகழ்வில், திமுக தலைவருக்கும், இயக்கத்திற்கு இந்த இரட்டை செயல்முறை மூலம் இழுக்கைத் தேடித் தரலாமா? துரைமுருகன் சுமார் 45 ஆண்டுகளுக்குமேல் திமுகவில் உள்ளவர். நாடறிந்தவர். அவரது பொது வாழ்க்கைக்கே இது ஒரு தீராத களங்கம் அல்லவா? ஒரு குடம் பாலானால் என்ன? ஒரு துளி விஷம் பட்டால்! 'பாலின் வெண்மையா பேசப்படும்! சற்று சிந்தித்திருக்க வேண்டாமா? தி.மு.க. தலைவரும், இயக்கமும் இதுபோன்ற இரட்டை நிலை நடவடிக்கைகள் இனி தொடரா வண்ணம் கவனத்துடன் பார்ப்பது - தடுப்பது மிகவும் அவசியம், அவசரம் என்றெல்லாம் கி.வீரமணி தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில், மூத்த தலைவர் கி.வீரமணியின் அறிக்கைக்கு பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வானதி சீனிவாசன், தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளதாவது: "திமுக பொதுச்செயலாளர், தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர் துரைமுருகனை அவமதித்த கி.வீரமணியை, மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும்.. இனியும் இந்து மதத்தை கேலி செய்தால் திமுக என்ற கட்சியே இருக்காது. திமுக பொதுச்செயலாளர் திரு. துரைமுருகன் அவர்களின் பேத்தியும், வேலூர் மக்களவைத் தொகுதி எம்பியுமான திரு. கதிர் ஆனந்த் அவர்களின் மகளுமான செந்தாமரையின் திருமணம் நவம்பர் 1ம் தேதி நடந்து முடிந்துள்ளது. இல்வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ள மணமக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வேத மந்திரங்கள் முழங்க செந்தாமரையின் திருமணம் நடைபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், இதை திராவிடர் கழகத் தலைவர் திரு. கி.வீரமணி அவர்கள் விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்ல திருமணம், சமஸ்கிருத சமஸ்கிருத வேத மந்திரம் முழங்க புரோகிதத் திருமணமாக நடந்துள்ளது. இதையறிந்து, பெரிதும் வேதனையும், வெட்கமும் அடைகிறோம். இது 45 ஆண்டுகளாக பொதுவாழ்க்கையில் உள்ள துரைமுருகனுக்கு தீராத களங்கம்" என்றெல்லாம் தனது இந்து மத வெறுப்பை கக்கியிருக்கிறார். இந்து அதாவது தமிழர் முறைப்படி திருமணம் செய்ததை கண்டு கொந்தளித்து, பொதுவாழ்க்கைக்கே அவமானம் என்றெல்லாம் பேசும் வீரமணி, திமுகவில் உள்ள, மாற்று மதத்தினர் அவரவர் மதச் சடங்குகளின்படி, மத போதகர்களை வைத்து திருமணங்களை நடத்தும்போது மட்டும் வாய்மூடி மவுனமாக இருக்கிறார். அந்த ரகசியம் அனைவரும் அறிந்ததுதான். திராவிடர் கழகம் என்பதே, மதம் மாற்ற வந்த, ராபர்ட் கால்டுவெல், ஆரிய - திராவிட கட்டுக்கதைகளின் அடிப்படையில் உருவான இயக்கம். இந்து மதத்திற்கு, இந்து அதாவது தமிழர் திருமண முறைக்கு மட்டும் எதிரான கட்சி என்பது வீரமணி அறிக்கையிலிருந்து தெரிய வருகிறது. அதனால், திமுகவில் உள்ள இந்து அல்லாத மதத்தினர் அவரவர் மத முறைப்படி திருமணம் நடத்தும்போது வீரமணி உள்ளிட்டோர் மவுனமாக கடந்து செல்கின்றனர். இந்து மத முறைப்படி நடந்தால் கேலியும், கிண்டலும் செய்கின்றனர். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்ல திருமணத்தை கேலியும், கிண்டலும் செய்த வீரமணியின் அறிக்கை குறித்து, திமுக தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும். வீரமணியின் அறிக்கை சரிதான். திமுக இந்து விரோத கட்சிதான் என்பதை ஸ்டாலின் ஒப்புக் கொள்ள வேண்டும். அல்லது தனது கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவருமான துரைமுருகனை அவமதித்த வீரமணியை, ஸ்டாலின் கண்டிக்க வேண்டும். இல்லையெனில், துரைமுருகனை அவமதித்ததை, ஸ்டாலின் ஏற்றுக் கொண்டதாகவே வரலாறு பதிவு செய்யும். இந்து திருமண முறையை அவமதித்த வீரமணிக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மற்ற மதங்களை விமர்சிக்காமல், இந்து மதத்தை மட்டும் விமர்சிக்கும் திராவிடர் கழகம், நாத்திக இயக்கம் அல்ல; இந்து விரோத இயக்கம் மட்டுமே. இதை தமிழர்கள் புரிந்து கொண்டு விட்டார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஸ்டாலினுக்கு 90 சதவீதம் புரிந்திருக்கும். இனியும் இந்து மதத்தை கேலி செய்தால், அவமதித்தால் திமுக என்ற கட்சியே இருக்காது. இனி வரும் காலம் அதை உணர்த்தும்" என்று வானதி சீனிவாசன் பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் இப்போது திமுகவுக்கு அரசியல் ரீதியாக புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்து மதம் தொடர்பான விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் திமுகவுக்கு, கட்சியின் மூத்த தலைவரான துரைமுருகன் குடும்பத் திருமணத்தை முன்வைத்து வீரமணி தெரிவித்துள்ள கருத்தும், அதற்கு வானதி சீனிவாசன் கொடுத்துள்ள பதிலடியும் புதிய நெருக்கடியை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக, திமுகவின் கூட்டணி மற்றும் அரசியல் வட்டாரங்களிலும் இந்த விவகாரம் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது..!!!கி,வீரமணி கண்டனம்
துரைமுருகன் இப்படி செய்யலாமா
வானதி சீனிவாசன் பதிலடி
விஜய் எதிர்ப்பு.. நாதக வாக்காளர்களை நகர்த்தும் ஸ்டாலின்.. ரவீந்திரன் துரைசாமி சொன்ன பாய்ண்ட்
ஆரிய - திராவிட கட்டுக்கதைகள்
ஸ்டாலின் விளக்கம் தர வேண்டும்
கனிமொழிக்கு ப்ரொமோஷன்? நவம்பர் 15க்குள் திமுகவில் நடக்கும் அதிரடி.. மும்முரமாக இருக்கும் ஸ்டாலின்!
புதிய நெருக்கடி?