வண்டலூர் அருகே அரசு பள்ளி மாணவி மீது பாலியல் அத்துமீறலுக்கு ஆதாரம் இல்லை! தாம்பரம் போலீஸ் விளக்கம்

  • சென்னை: சென்னை வண்டலூர் அருகே அரசு பள்ளி கழிப்பறையில் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு 4 பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் சம்பவத்தை உறுதிப்படுத்தும் விதமாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்பதால் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பரப்ப வேண்டாம் என தாம்பரம் போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    இதுகுறித்து தாம்பரம் போலீஸார் 24.09.2026 அன்று, தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட கண்டிகை கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் குழந்தை பாலியல் துன்புறுத்தல் தொடர்பானதாகக் கூறப்படும் ஒரு சம்பவம் குறித்து புகார் பெறப்பட்டது. புகார் கிடைத்த உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டு, மூத்த பெண் காவல் அதிகாரிகளின் மேற்பார்வையில், பெண் காவல் ஆய்வாளர் மூலம் துரிதமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    விசாரணையின் போது, தொடர்புடைய அனைத்து ஆதாரங்களும் உடனடியாக சேகரிக்கப்பட்டு, கவனமாக சரிபார்க்கப்பட்டன. பள்ளி வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிடைக்கப்பெற்ற கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. மேலும், இவ்விவகாரத்துடன் தொடர்புடைய சாட்சிகளிடம் விரிவாக விசாரணை நடத்தப்பட்டது. கிடைக்கப்பெற்ற பிற அறிவியல் மற்றும் உறுதிப்படுத்தும் ஆதாரங்களும் கவனமாக ஆய்வு செய்யப்பட்டன.

    இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையிலும், சம்பந்தப்பட்ட குழந்தையின் வாக்குமூலம் மற்றும் சேகரிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையிலும், புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி அரசு பள்ளியில் அத்தகைய சம்பவம் நடைபெற்றது என்பதை உறுதிப்படுத்தும் எந்தவொரு ஆதாரமும் இந்நிலையில் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. எனினும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    மேற்கண்ட தகவல்களை கருத்தில் கொண்டு, குழந்தையின் நலன் கருதி, சரிபார்க்கப்படாத தகவல்களைப் வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு தாம்பரம் போலீஸார் விளக்கமளித்துள்ளனர்.

    செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரை அடுத்த கண்டிகையில் உள்ள அரசு பள்ளியில் மர்ம நபர்கள் சிலர் பள்ளிக்குள் நுழைந்து 10 ஆம் வகுப்பு மாணவிக்கு கூட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

    பள்ளியின் சுற்றுச்சுவர் வழியாக ஏறி குதித்த 4 பேர் கொண்ட கும்பல், கழிப்பறைக்கு வந்த மாணவியை கைக்குட்டையில் மயக்க மருந்து போட்டு மயக்கமடைந்த செய்து கூட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

    இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். சம்பவத்தை தொடர்ந்து மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில் மாணவிக்கு எதிரான பாலியல் அத்துமீறல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஆனால் இந்த சம்பவத்திற்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்பதால் அது போன்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பரப்ப வேண்டாம் என போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    English Summary

    Vandalur school girl abuse incident: Tambaram police gave explanation that no evidence found so far as per her allegations, Medical examination also done for victim.