வண்டலூருக்கு போறீங்களா? ஜூன் 21, 22 தேதியில் பூங்கா செல்வோர் இதை செய்யாவிட்டால் உள்ளே நுழைய முடியாது

  • சென்னை: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிலிருந்து முக்கிய தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்குச் செல்லத் திட்டமிட்டிருக்கும் பொதுமக்களுக்கு பூங்கா நிர்வாகம் மிக முக்கியமான அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த 2 நாட்களும் பூங்காவிற்குள் செல்ல சில புதிய கட்டுப்பாடுகளும், கட்டாய வழிமுறைகளும் திடீரென கொண்டு வரப்பட்டுள்ளன, அது என்ன தெரியுமா?

    Advertisement

    வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் குடும்பம் குடும்பமாக மக்கள் செல்வது வழக்கம். அதுவும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு விலங்குகளை வேடிக்கை பார்ப்பதற்காகவே ஏராளமான பெற்றோர் இந்த பூங்காவை தேர்ந்தெடுப்பார்கள்.

    Advertisement

    வண்டலூர் பூங்காவிற்கு போறீங்களா

    அப்படி இந்த ஜூன் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் வண்டலூர் பூங்காவிற்குச் செல்லத் திட்டமிட்டிருக்கும் பொதுமக்களுக்கு மிக முக்கியமான, அவசர அறிவிப்பு ஒன்றை பூங்கா நிர்வாகம் இப்போது வெளியிட்டுள்ளது. இதனைத் தெரிந்துகொள்ளாமல் பூங்காவிற்குச் சென்றால் நிச்சயம் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டியிருக்கும் என்பதால் எல்லாருமே இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    தமிழக முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, வருகிற 21ம் தேதி அதாவது, ஞாயிற்றுக்கிழமை மற்றும் 22ம் தேதி திங்கட்கிழமை ஆகிய இரண்டு நாட்களுக்கு வண்டலூர் உயிரியல் பூங்காவிற்குள் செல்ல பொதுமக்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

    Advertisement

    முதல்வர் விஜய் பிறந்தநாள்

    இந்த 2 நாட்களுக்கான நுழைவுக் கட்டணத் தொகையான சுமார் 70 லட்சம் ரூபாயை அமைச்சரின் குடும்ப அறக்கட்டளை செலுத்த உள்ளதாகவும் கூறப்பட்டது. முதலமைச்சரின் பிறந்தநாள் மற்றும் இலவச அனுமதி என்பதால் வண்டலூர் பூங்காவில் வழக்கத்தை விட கட்டுக்கடங்காத கூட்டம் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனைக் கருத்தில் கொண்டு, பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களின் பாதுகாப்பு, விலங்குகளின் நலன் மற்றும் கூட்ட நெரிசலை முறைப்படுத்துவது போன்ற காரணங்களுக்காக வண்டலூர் பூங்கா நிர்வாகம் சில அதிரடி கட்டுப்பாடுகளையும், புதிய வழிமுறைகளையும் அறிவித்துள்ளது.

    2 நாட்களும் அனுமதி உண்டா?

    அதன்படி, இந்த இரண்டு நாட்களும் நீங்கள் வண்டலூர் பூங்காவிற்குள் இலவசமாகச் செல்ல வேண்டும் என்றால் முன்கூட்டியே ஆன்லைன் மூலமாகப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் இலவச நுழைவுச் சீட்டு பெற்றவர்களுக்கு மட்டுமே பூங்காவிற்குள் அனுமதி வழங்கப்படும் என்றும், ஆன்லைன் டிக்கெட் இல்லாதவர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் பூங்கா நிர்வாகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

    Advertisement

    பொதுவாக பூங்காவிற்கு நேரில் சென்று நுழைவுச் சீட்டு வழங்கும் கவுண்டர்கள் செயல்படுவது வழக்கம். ஆனால், இந்த இரண்டு நாட்களிலும் பூங்கா நுழைவுச் சீட்டு கவுண்டர்களில் நேரடியாக டிக்கெட் வழங்கும் வசதி முழுமையாக நிறுத்தப்படுகிறது. எனவே, மக்கள் நேரில் சென்று டிக்கெட் வாங்கலாம் என்று நினைத்து ஏமாற வேண்டாம். பார்வையாளர்கள் தங்களது இலவச நுழைவுச் சீட்டுகளை tickets.aazp.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரிக்குச் சென்று முன்கூட்டியே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    டிக்கெட்டுகள், பூங்கா திறந்திருக்கும் நேரம்

    கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக இந்த இலவச அனுமதி இரண்டு தனித்தனி நேரப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை நேரப் பிரிவிற்கு 10,000 ஆன்லைன் டிக்கெட்டுகளும், பிற்பகல் நேரப் பிரிவிற்கு 10,000 ஆன்லைன் டிக்கெட்டுகளும் என ஒரு நாளைக்கு மொத்தம் 20,000 டிக்கெட்டுகள் மட்டுமே ஆன்லைனில் வழங்கப்படும். இந்த இரண்டு நாட்களிலும் பூங்காவானது காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை திறந்திருக்கும். எனினும், மாலை 4.30 மணி வரை மட்டுமே பார்வையாளர்கள் பூங்காவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

    Advertisement

    மேலும் முக்கியமாக, நுழைவுக் கட்டணம் மட்டும்தான் இலவசமே தவிர, பூங்காவிற்குள் இருக்கும் பிற சேவைகளுக்கான கட்டணங்கள் வழக்கம்போல் வசூலிக்கப்படும்.

    பூங்கா நிர்வாகம் அறிவிப்பு

    இந்த இரண்டு நாட்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், பூங்காவைச் சுற்றிப் பார்ப்பதற்கான மின்கல (பேட்டரி) வாகன சேவைகளும், சிங்கம் மற்றும் மான் சஃபாரி சேவைகளும் முற்றிலும் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்புத் தேவையுடைய நபர்களின் வசதிக்காக மட்டும் மின்கல வாகன வசதி இந்த இரண்டு நாட்களிலும் கட்டணமின்றி இலவசமாக வழங்கப்படும் என்று பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் வண்டலூர் பூங்காவிற்குப் புறப்படும் முன் இணையதளத்தில் முன்பதிவு செய்ய மறந்துவிடாதீர்கள்.

    English Summary

    Vandalur Zoo Tourists and Visitors on June 21 & 22 Must Do This.. Entry Won’t Be Allowed Otherwise