சென்னை: இடதுசாரிகளுக்கு ஆதரவு அளிப்பதாக இருந்தால் நாம் தமிழர் கட்சியினர் வேட்புமனுவை வாபஸ் பெற வேண்டும் என்று அமைச்சர் வன்னி அரசு கூறியுள்ளார். அவர் பல பொய்களை சொல்லி இருக்கிறார். அதில் இது ஒரு பொய் எனவும், உண்மையிலேயே இடதுசாரிகளுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று அவர் நினைத்தால், இன்றே வேட்பு மனுக்களை வாபஸ் பெற வேண்டும் என வன்னி அரசு பேசியுள்ளார்.
தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்த இடதுசாரிகள் கட்சிகள் (சிபிஎம், சிபிஐ) மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. வேட்பாளர்களை அறிவித்து வேட்புமனுக்களையும் தாக்கல் செய்துள்ளது. இதனால் திமுக, தவெக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட்கள் என 5 முனை போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் வேட்பாளர்களை அறிவிப்பது தெரிந்து இருந்தால் நாங்கள் அவர்களுக்கே ஆதரவு தெரிவித்து இருப்போம், வேட்பாளர்களை போட்டிருக்க மாட்டோம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருந்தார். சீமானின் இந்த பேச்சு குறித்து அமைச்சர் வன்னி அரசுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த வன்னி அரசு கூறியதாவது:- அவர் பல பொய்களை சொல்லி இருக்கிறார். அதில் இது ஒரு பொய். அண்டப் புழுகு.. ஆபாச புழுகு என்று சொல்வாங்க. அத மாதிரி ஒரு புழுகர் தான் சீமான் என்பது உலகத்திற்கே தெரியும். அதுல ஒன்றும் சொல்லத் தேவையில்லை. உண்மையிலேயே அவர் இடதுசாரிகளுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று நினைத்தால், இடதுசாரிகளோடு நிற்க வேண்டும் என்று நினைத்து இருந்தால் இன்றே அவர் வேட்புமனுக்களை திரும்பப் பெற வேண்டும். இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் சொன்னார், இடதுசாரிகள் தனியாக போட்டியிடுவார்கள் என்றால் நான் அங்கு வேட்பாளர்களையே நிறுத்தியிருக்க மாட்டோம். இடதுசாரிகளுக்கு ஆதரவு அளிப்போம் என்று சொல்லியிருக்கிறார். இப்போதும் அவர் இடதுசாரிகளுகு ஆதரவு அளிக்க நினைத்தால் இன்றைக்கு வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாள் தான்.. எனவே இன்றைக்கு அவர் திரும்பப் பெற வேண்டும். அப்படி திரும்ப பெற்றுக்கொண்டால் அவர் சொன்ன செய்தி உண்மை என்று சொல்லப்படும். அல்லது சொன்ன பொய்களில் இதுவும் ஒன்று என உலகம் சொல்லும்.." என்று கூறினார்.