சென்னை: எந்த நேரத்திலும் தவெக அமைச்சரவையில் இருந்து நாங்கள் வெளியேறலாம் என்றும், அப்படி ஒரு நிலைப்பாட்டை எங்களால் எடுக்க முடியும் என்றும் தொல் திருமாவளவன் கூறியிருந்தது தவெகவினர் மத்தியில் மட்டுமின்றி தமிழக அரசியலிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமைச்சர் வன்னியரசு திருமாவளவன் பேசியது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
தவெக அரசு ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகள் அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளன. கம்யூனிஸ்ட்கள் மட்டும் வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளித்து வருகின்றன. காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் விஜய் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள நிலையில், திமுக கூட்டணியில் வென்று விட்டு தவெக அமைச்சரவையில் இடம்பெற்று இருப்பதற்கு விமர்சனங்களும் கிளம்பி வருகின்றன.
திமுகவில் இரண்டாம் கட்ட தலைவர்கள், நிர்வாகிகள் சமூக வலைத்தளங்களில் விசிக, காங்கிரஸ் கட்சிகளின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இதற்கிடையே, நேற்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திருமாவளவன், தவெக அமைச்சரவையில் இடம் பெற்றுவிட்டோம் என்ற காரணத்தினாலேயே அக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்துவிட்டோம் என்று அர்த்தம் இல்லை. நாங்கள் இன்னும் தவெகவுடன் கூட்டணி அமைக்கவில்லை. எந்த நேரத்திலும் தவெக அமைச்சரவையில் இருந்து நாங்கள் வெளியேறலாம். வர முடியாது என்பதற்கு என்ன இருக்கிறது. அப்படி அரசியல் செய்ய முடியும். அப்படி ஒரு நிலைப்பாட்டையும் எங்களால் எடுக்க முடியும்" என்று கூறினார். திருமாவளவனின் இந்த கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது. திருமாவளவன் கருத்து குறித்து விளக்கமளித்துள்ள சமூக நீதித்துறை வன்னியரசு தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- "ஆட்சிக்கு ஆதரவு அளிப்பது என்பது வேறு; அமைச்சரவையிலிருந்து வெளியேறுவது என்பது வேறு. அமைச்சரவையிலிருந்து வெளியேறினாலும் ஆட்சிக்கு அளிக்கும் ஆதரவு நீடிக்கும் என்பது தான் திருமாவளவன் அவர்களின் கருத்து. இதில் உள்நோக்கம் கற்பிப்பது திரிபுவாதமாகும்" என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, நேற்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் தலைமையில் மாற்று கட்சியினர் தவெகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா , திருமாவளவன் கருத்து தொடர்பாக விளக்கமளித்தார். ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:- திருமாவளவனின் கருத்து திமுகவினரால் சமூக வலைத்தளங்களில் வேறு மாதிரியாக பரப்பப்படுகிறது. தவெகவுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இடையே சண்டை மாதிரி கூறி வருகிறார்கள். நான் திருமாவளவனிடம் பேசினேன். விசிகவால் என்றைக்கும் தவெகவிற்கு எந்த விதமான ஆபத்தும் வராது என்றார். எங்கள் ஆதரவு முழுமையாக இருக்கும். திமுகவின் சதி செயல்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் தான் நான் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்றார். ஆட்சிக்கு ஆபத்து வரும் என்று இந்த அமைச்சரவையை விஜய் உருவாக்கவில்லை. அமைச்சரவையில் சேர்ப்பது ஆட்சி அதிகாரத்திற்கான பாதுகாப்புக்கு இல்லை நாளை தேர்தல் நடந்தாலும் விஜய் தனியாக நிற்பார். நான் உண்மையாக 30 நாள் ஆட்சி செய்தேன். 30 ஆண்டுகள் திமுக செய்யாததை விஜய் செய்துள்ளார்" என்று கூறினார்.எந்த நேரத்திலும் வெளியேறுவோம் - திருமாவளவன்
திருமாவளவன் கூறியது இதுதான் - வன்னியரசு
நான் திருமாவளவனிடம் பேசினேன் - ஆதவ் அர்ஜுனா