விசிக எம்பி ரவிக்குமார் - வன்னி அரசு இடையே கருத்து வேறுபாடு! அமைச்சரவை பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு

  • சென்னை: பழங்குடியினர் நலத்துறைக்கு சமூக நீதித்துறை என பெயர் மாற்றம் செய்ததை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ரவிக்குமார் கூறிய நிலையில் அமைச்சர் வன்னி அரசு இந்த பெயர் பொருத்தமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். சமூக நீதித்துறைக்குள்தான் ஆதிதிராவிடர் நலத்துறை, பழங்குடியின நலத்துறை உள்ளது என்றும், இந்த பெயர் மாற்றம் என்பது ஆதிதிராவிடர்கள் துறையையோ அல்லது பழங்குடியினத்தவர் துறையையோ எந்த விதத்திலும் மட்டுப்படுத்தாது என்று தெரிவித்தார்.

    Advertisement

    பழங்குடியினர் நலத்துறைக்கு சமூக நீதித்துறை என பெயர் மாற்றம் செய்து இருப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று விசிக பொதுச்செயலாளரும் லோக்சபா எம்பியுமான ரவிக்குமார் கோரிக்கை விடுத்து இருந்தார்.

    Advertisement

    ரவிக்குமார் சொன்னது என்ன?

    ஆதி திராவிடர் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் பெயர் இல்லை எனவும், 1922 ஆம் ஆண்டில் நீதிக்கட்சி ஆட்சியின் போது எம்.ஜி ராஜா, இரட்டை மலை சீனிவாசன் ஆகிய பட்டியல் சாதி தலைவர்கள் போராடி பெற்ற சாதி கடந்த சமயசார்பற்ற அடையாளம் என்றும் சமூக நீதித்துறை என பெயர் மாற்றும் போது பட்டியல் சாதி மக்களுக்கான தனித்துவமான கவனம் நிதி மற்றும் திட்டங்கள் பிற பிரிவினரோடு கலந்து நீர்த்து போகும் என்று தெரிவித்து இருந்தார்.

    இதற்கிடையே, அந்த துறையின் அமைச்சராக விசிகவை சேர்ந்த வன்னி அரசு உள்ளார். தனது கட்சியை சேர்ந்த வன்னி அரசு வகிக்கும் துறையின் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுவெளியில் விசிக எம்பி விமர்சனம் வைத்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சமூக நீதித்துறை அமைச்சரும் விசிக துணை பொதுச்செயலாளருமான வன்னி அரசுவிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.

    Advertisement

    வன்னி அரசு அளித்த பதில்

    இதற்கு பதிலளித்த வன்னி அரசு, முதல்வர் விஜய்யின் முடிவை பாராட்டி பேசினார். வன்னி அரசு கூறுகையில், சமூக நீதித்துறை என்பது சமூக நீதிக்கான விடுதலை. அவர்களுக்கான நீதியை பெற்றுத்தருவதுதான். எங்களுடைய கட்சியின் பொதுச்செயலாளர் அதுபோன்ற கருத்தை தெரிவித்துள்ளார். கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவிப்பார். இந்த பெயர் பொருத்தமாக இருக்கிறது என்பதே எனது கருத்து. சமூக நீதிக்காக போராடும் துறைதான் இது.

    சமூக நீதித்துறைக்குள்தான் அதற்கு ஆதிதிராவிடர் நலத்துறை, பழங்குடியின நலத்துறை உள்ளது. இந்த மக்களுக்கு அதிகாரமளிப்பதற்கும் சமூக நீதிக்காகவும் தான் இந்த துறை. பெயர் மாற்றம் என்பது ஆதிதிராவிடர்கள் துறையையோ அல்லது பழங்குடியினத்தவர் துறையையோ எந்த விதத்திலும் மட்டுப்படுத்தாது. அதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பெயர் மாற்றம் என்பது ஒரு தொலை நோக்கு பார்வையுடன் முதல்வர் அறிவித்து இருக்கிறார்கள். எனவே இதில் எந்த அரசியலும் இல்லை" என்றார்.

    Advertisement

    அமைச்சரவை பெயர் மாற்றம்

    முன்னதாக நேற்று, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் பெயரை சமூக நீதித்துறை என அதிகாரப்பூர்வமாக மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த துறையின் அமைச்சராக வன்னி அரசு பொறுப்பேற்கும் பொதே சமூக நீதித்துறை என பெயர் மாற்றம் செய்யபட்டு இருந்தது.

    முற்போக்கு சிந்தனையுடன் இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக பலரும் வரவேற்பு தெரிவித்து இருந்த நிலையில் தற்போது விசிகவில் இருந்தே எதிர்ப்பு கிளம்பியுள்ளதும், அதற்கு மாறாக, துறையின் அமைச்சரும் விசிக நிர்வாகியுமான வன்னி அரசு பேசியிருப்பதும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

    English Summary

    Vanniyarasu defended the renaming of the Tribal Welfare Department as the Social Justice Department, saying the new name is appropriate. He clarified that both the Adi Dravidar Welfare and Tribal Welfare departments remain under it and their identity is unchanged.