வன்னி அரசு வந்ததும் வராததுமா செய்த வேலை.. அரசு அதிகாரிகள் பங்கேற்ற தாட்கோ கூட்டத்தில் என்ன நடந்தது

  • சென்னை: வன்னி அரசு பொறுப்பேற்ற அடுத்த சில நாளிலேயே சர்ச்சையில் சிக்கி உள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன.. புதிதாகப் பொறுப்பேற்ற தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு நடத்திய முதல் அதிகாரப்பூர்வ 'தாட்கோ' கூட்டத்திலேயே, அரசு விதிகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்ட சம்பவம் தலைமைச் செயலக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த உள் ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட அந்த ஒரு முடிவுதான், இப்போது ஒட்டுமொத்த அரசு அதிகாரிகளையும் முகம் சுளிக்க வைத்து சர்ச்சையாக வெடித்துள்ளது.

    Advertisement

    தமிழக அமைச்சரவையில் சமீபத்தில் நடைபெற்ற மாற்றங்க ளை தொடர்ந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையை உள்ளடக்கிய சமூக நீதித்துறை அமைச்சராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு பொறுப்பேற்றுக்கொண்டார்.

    Advertisement

    தாட்கோ ஆய்வு கூட்டம்

    அமைச்சராக பதவியேற்றதைத் தொடர்ந்து, பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து அவர் அதிகாரிகளுடன் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, கடந்த 26ம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள தாட்கோ தலைமை அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

    தாட்கோ மேலாண் இயக்குநர் கந்தசாமி தலைமையிலான துறை சார்ந்த அரசு அதிகாரிகள் மட்டுமே பங்கேற்க வேண்டிய இந்த முக்கியத்துவம் வாய்ந்த உள் ஆய்வுக் கூட்டத்தில், விசிக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் மற்றும் விசிக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

    Advertisement


    வன்னி அரசு பங்கேற்றாரா

    அரசு விதிகளின்படி, குறிப்பிட்ட ஒரு துறையின் அதிகாரப்பூர்வ உள் ஆய்வுக் கூட்டங்களில் அந்தந்த துறையின் அமைச்சர்கள் மற்றும் அதற்குரிய தகுதி வாய்ந்த அரசு அதிகாரிகள் மட்டுமே பங்கேற்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகளாக இருந்தாலும், துறை சாராத நபர்களோ அல்லது முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்களோ இதுபோன்ற உத்தியோகபூர்வ கூட்டங்களில் அமர்ந்து துறை சார்ந்த கோப்புகளை ஆய்வு செய்ய எந்தவிதமான அனுமதியும் இல்லை.

    ஆனால் இந்த விதிகளை முற்றிலும் புறந்தள்ளிவிட்டு, அமைச்சர் வன்னி அரசின் முன்னிலையிலேயே விசிக அரசியல் பிரமுகர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றதுதான் தற்போது விவாதப் பொருளாக மாறியிருக்கிறதாம்.

    Advertisement

    விதிமீறல்கள் உண்மையா

    இத்தகைய விதிமீறல்கள், அரசுத் துறையின் ரகசியத்தன்மை, கோப்புகளின் பாதுகாப்பு மற்றும் ஒட்டுமொத்த நிர்வாகச் செயல்பாடுகளின் நம்பகத்தன்மை போன்றவற்றை கேள்விக்குறியாக்கியுள்ளதாகத் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறார்களாம்.

    அதுமட்டுமல்ல, இந்த விவகாரத்தில் விதிகளுக்கு முரணாக செயல்பட்ட அமைச்சர் வன்னி அரசு மற்றும் அதற்குத் துணை நின்ற தாட்கோ மேலாண் இயக்குநர் கந்தசாமி ஆகியோர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பலரும் வலியுறுத்த துவங்கி உள்ளனர்.

    சென்னை மாநகராட்சி கூட்டம்

    ஏற்கனவே கடந்த வாரம் இப்படித்தான் ஒரு சலசலப்பு சென்னை மாநகராட்சி கூட்டத்தில் நடந்தது.. சென்னை ஓஎம்ஆர் சாலை சோழிங்கநல்லூரில் உள்ள சென்னை மாநகராட்சி 15 வது மண்டலக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில், அரசியல் கட்சியினருக்கு அனுமதி இல்லாத நிலையிலும், சோழிங்கநல்லூர் தவெக எம்எல்ஏ பி.சரவண மூர்த்தி தனது ஆதரவாளர்களான 20-க்கும் மேற்பட்ட தவெக கட்சியினருடன் உள்ளே புகுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    கூட்டம் நடைபெற்ற அரங்கிற்குள் நுழைந்த அக்கட்சியினர் ரீல்ஸ் எடுக்கும் பணியில் ஈடுபட்டதுடன், அரசு அதிகாரிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் அமரும் நாற்காலிகளில் அமர்ந்துகொண்டு அதிகாரிகள் போல அதிகாரம் செய்துள்ளனர்.. மேலும், தவெகவைச் சேர்ந்த ஒருவர் மைக்கை பிடித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கிய சம்பவமும் அரங்கேறியுள்ளது.

    தவெக ஆட்சி சலசலப்புகள்

    மக்கள் பிரதிநிதிகள் அல்லாதோர் அரசு சார்ந்த விவகாரங்களில் தலையிடவோ, ஆய்வுகளை மேற்கொள்ளவோ கூடாது என்றும், தவெகவினர் தங்களுடைய எல்லை என்ன என்பதை அறிந்து செயல்பட வேண்டும் என்றும் ஆளும்கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்த் ஏற்கனவே அறிக்கை மூலம் எச்சரிக்கை விடுத்திருந்தார்..

    Advertisement

    அப்படியிருந்தும்கூட, அதனை மீறி தவெக எம்எல்ஏ பி. சரவண மூர்த்தி தனது ஆதரவாளர்களை மண்டலக் குழு கூட்டத்திற்குள் அழைத்துச் சென்று இத்தகைய அத்துமீறலில் ஈடுபட்டது அங்கிருந்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பலத்த அதிருப்தியையும் முகம் சுளிப்பையும் ஏற்படுத்தியிருந்தது..

    அதேபோல இப்போது வன்னி அரசும் சர்ச்சையில் சிக்கி உள்ளதாகவும், இப்படி தொடர்ந்து விதிமீறல்களில் சிக்கி வருவது பரபரப்பை தந்து வருவதாகவும் சோஷியல் மீடியாவில் செய்திகள் பரவி வருகின்றன...!!

    English Summary

    Vanni Arasu’s shocking move right after taking charge: What really happened in the official TAHDCO meet?