புன்முறுவலோடு ரசித்து பார்த்த வன்னி அரசு.. விஜய் பேச்சை கண்டித்த திருமா! விசிகவை பதறவைத்த 'விஜய் ஷோ'


  • சென்னை: தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான ஜோசப் விஜய் ஆற்றிய உரை, அதன் கூட்டணிக் கட்சியான விசிகவுக்குள்ளேயே ஒரு தர்மசங்கடமான விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சட்டசபையில் விஜய்யின் பேச்சை விசிக அமைச்சர் வன்னி அரசு புன்முறுவலோடு ரசித்துப் பார்த்த நிலையில், விஜய்யின் பேச்சை கண்டித்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.

    Advertisement

    தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பாக முதல்வர் ஜோசப் விஜய் நேற்று உரையாற்றினார். அப்போது திமுக குறித்து கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக, திமுக தலைவர் ஸ்டாலின் குறித்தும், அவரது கொளத்தூர் தொகுதி தோல்வி குறித்தும் கிண்டல் செய்து விமர்சித்திருந்தார்.

    Advertisement

    விஜய்யின் செய்கை

    முதல்வர் விஜய்யின் உரையின்போது திமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்திருந்தனர். எனினும் தொடர்ந்து பேசிய முதல்வர் தனது உரையை முடிப்பதற்கு முன்பாக, பிரபலமான செய்கையைச் செய்து காட்டினார். அதைப் பார்த்து அவையில் இருந்த அனைவரும் சிரித்தனர்.

    முன்னதாக, திமுக - காங்கிரஸ் பேச்சுவார்த்தை நிறைவுற்றபோது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதேபோன்று ஒரு செய்கையைச் செய்திருந்தார். அது இணையத்தில் வைரலானது. தொடர்ந்து, கொளத்தூர் தொகுதியில் வெற்றிபெற்ற தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவும் இதே செய்கையைச் செய்துகாட்டினார். தற்போதும் முதல்வர் விஜயும் செய்தது சலசலப்பை ஏற்படுத்தியது.

    Advertisement

    விஜய் சொன்ன குட்டிக் கதை

    மேலும் பேசிய விஜய், "எனக்கு ஒரு குட்டி கதை ஒன்னு ஞாபகம் வருது, சொல்லலாமா? ஒரு ஊர்ல ஒரு பெரியவர், வெயில் ரொம்ப ஜாஸ்தியா இருக்குன்னு சொல்லிட்டு கண்ணுக்கு மேல கை வச்சுக்கிட்டு இப்படி சுத்தி முத்தி தேடிட்டு இருந்தாராம். அப்ப கூட இருந்த ஒரு சின்ன பையன், 'என்ன தேடுறீங்க?' அப்படின்னு கேட்டானாம் அதுக்கு அந்த பெரியவர் சொன்னாராம், 'அது ஒன்னும் இல்ல தம்பி, உங்க அப்பா இங்கதான் இருப்பாருன்னு சொன்னாங்க. அதான் தேடிக்கிட்டு இருக்கேன். எங்க... உங்க அப்பாவைக் காணோம்?" எனப் பேசினார்.

    Advertisement

    திருமாவளவன் கண்டனம்

    இந்நிலையில் விஜய்யின் பேச்சுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். "ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு இழந்ததை ஏளனம் செய்யும் வகையில் பேசியிருப்பது 'முதலமைச்சர்' என்னும் பொறுப்புக்குரிய மாண்புக்கு உகந்தது அல்ல என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

    கட்சி மேடைகளில் பேசும்போதுகூட தவிர்க்க வேண்டிய ஒன்றை, சட்டப்பேரவையில் பேசாமல் தவிர்த்திருக்க வேண்டும். இனிவரும் காலங்களில் சட்டப்பேரவைக்கான மரபையும் முதலமைச்சர் என்னும் மகத்தான பதவிக்குரிய உயரிய மாண்பையும் பேணிப் பாதுகாத்திட வேண்டுமென முதலமைச்சரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

    Advertisement

    ரசித்துப் பார்த்த வன்னி அரசு

    எனினும், சட்டசபையில் முதல்வர் விஜய்யின் இந்தப் பேச்சையும், விஜய் நக்கல் தொனியில் சொன்ன குட்டிக் கதையையும் தவெக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மேசையைத் தட்டி வரவேற்றனர். தவெக உறுப்பினர்கள் மட்டுமல்லாது கூட்டணி கட்சி உறுப்பினர்களும், அதிமுக உறுப்பினர்களும் ரசித்துப் பார்த்தனர்.

    விசிக அமைச்சர் வன்னி அரசுவும், விஜய்யின் பேச்சை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார். விசிகவைச் சேர்ந்த வன்னி அரசு, விஜய் பேச்சை புன்முறுவலோடு பார்த்துக் கொண்டிருந்த வீடியோ வைரலான நிலையில், திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    The speech delivered by Tamil Nadu Chief Minister Joseph Vijay has sparked an awkward debate within its alliance partner, the VCK. While VCK functionary Vanni Arasu enjoyed Vijay's speech in the Assembly with a smile, VCK leader Thirumavalavan has condemned it.