தவெக கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்.. பாமக உள்ளே வந்தால் விலகிவிடுவோம்.. வன்னி அரசு திட்டவட்டம்

  • சென்னை: தவெக கூட்டணிக்குள் பாமக வரவாய்ப்புள்ளதாக தகவல் பரவும் நிலையில், தவெக கூட்டணிக்குள் பாமக வந்தால்.. நாங்கள் வெளியே செல்வோம் என்று விசிக முக்கிய தலைவரும் அமைச்சருமான வன்னிஅரசு தெரிவித்துள்ளார். அமைச்சர் பதவியை விட விசிக தலைவர் திருமாவளவன் தான் முக்கியம் என்றும் திமுக, அதிமுக போல விசிக ஒரு சராசரி கட்சி இல்லை என்றும் வன்னிஅரசு தெரிவித்தார்.

    Advertisement

    தமிழ்நாட்டில் இப்போது விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அரசு நடந்து வருகிறது. இதில் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. விசிக சார்பில் அமைச்சர் வன்னிஅரசு சமூக நீதித்துறை அமைச்சராக இருக்கிறார். இதற்கிடையே கடந்த சில காலமாகவே தவெக கூட்டணிக்குள் பாமக வரலாம் என்ற பேச்சு எழுந்தது.

    Advertisement

    தவெக- பாமக?

    சட்டசபையிலும் கூட பாமகவின் சவுமியா அன்புமணி பெரியளவில் தவெக அரசை விமர்சிக்கவில்லை. மேலும், இடைத்தேர்தலிலும் அதிமுகவை ஆதரிக்காமல் பாமக நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்தது. அது தவெகவுக்கு சாதகமாக அமைந்ததாக கூறப்படுகிறது. மேலும், தவெக வெற்றிக்கும் கூட பாமக தலைவர் அன்புமணி வாழ்த்து தெரிவித்திருந்தார்.

    இதற்கு நடுவே தவெக கூட்டணிக்குள் பாமக வரலாம் எனவும் சவுமியா அன்புமணிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் எனவும் கூறப்பட்டது. இருப்பினும், பாமக தவெகவுடன் இணைந்தால் விசிக என்ன நிலைப்பாட்டை எடுக்கும் என்பதில் கேள்வி எழுந்தது. ஏனென்றால் கடந்த 15 ஆண்டுகளாக பாமக- விசிக ஒரே கூட்டணியில் இடம்பெறவில்லை. மேலும், பாமக- பாஜக இருக்கும் கூட்டணியில் விசிக இருக்காது என்பதை திருமாவளவன் தொடர்ந்து கூறி வருகிறார்.

    Advertisement

    அமைச்சர் வன்னிஅரசு

    இதற்கிடையே திண்டிவனத்தில் நடந்த மாநாட்டில் பேசிய அமைச்சர் வன்னிஅரசு,தவெக கூட்டணிக்குள் பாமக வந்தால் விசிக வெளியேறிவிடும் என திட்டவட்டமாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "பாமகவுடன் ஒரே கூட்டணியில் இருப்பீர்களா என கேட்கிறார்கள்.. ஒருபோதும் அதற்கான வாய்ப்பில்லை, அவர்கள் உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம்!

    இந்த அமைச்சர் பதவி இருக்கும்.. இல்லாமலும் போகும். எனக்கு அமைச்சரை விட தலைவர் திருமாவளவன் முக்கியம், விடுதலை சிறுத்தைகள் கட்சிதான் முக்கியம்.. நம்முடைய போராட்டம் தான் முக்கியம் என்று பலமுறை சொல்லியிருக்கின்றேன்; இப்போதும் அதான் சொல்லுகின்றேன்.

    Advertisement

    பாமக- பாஜகவுடன் கூட்டணி இல்லை

    பாமக உள்ளே வந்தால் உங்களுடைய நிலை என்ன, நிலை என்ன? என்று பலர் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக அதற்கு பதில் சொல்லி பதில் சொல்லி வாயும் வலித்துவிட்டது, கேட்டு கேட்டு காதும் வலிக்கிறது. ஒரே வழிதான். 'சாதியவாத பாமக, மதவாத பாஜகவோடு விடுதலை சிறுத்தைகள் ஒருபோதும் கூட்டணி இல்லை' என்று சொல்லி முழங்கிய நம்முடைய தலைவர் திருமாவளவன்!

    வெளியேறுவோம்

    இப்பொழுதும் சொல்லுகின்றேன், இந்த இடத்திலிருந்தும் சொல்கிறேன். ஒருபோதும் அதற்கான வாய்ப்பில்லை, பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம். எங்களுக்குப் பதவி முக்கியமல்ல. எங்களுடைய தலைவர் தலைவர் திருமா என்ன கட்டளையிடுகிறாரோ, அந்த வேலையை செய்வதற்குத்தான் ஒரு அடிமட்டத் தொண்டராகவே இப்போதும் இருக்கிறேன்.

    Advertisement

    சிலர் சொல்லுகிறார்கள், பதவிக்காக நம்முடைய தலைவர் வாய்க்கு வந்தபடி பேசி கொண்டு இருக்கிறார் என்கிறார்கள். அவர்களுக்குச் சொல்லுவேன், மூடர்களே! விடுதலை சிறுத்தைகள் தேர்தல் புறக்கணிப்பு பாதையிலே நின்ற இயக்கம். எங்களுக்கு இந்த தேர்தல் பாதை முக்கியமல்ல. விடுதலை சிறுத்தைகள் கட்சியானது அதிமுக, திமுக போன்ற சராசரி கட்சியல்ல; இது ஒரு விடுதலை இயக்கம்!" என்றார்.

    English Summary

    VCK leader and Tamil Nadu Minister Vanni Arasu has said his party will leave the TVK alliance(தவெக கூட்டணி குறித்து விசிக தலைவர் திருமாவளவன்): VCK Will Exit TVK Alliance says Vanni Arasu.