சென்னை: பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வதார திட்டத்தின் (VB GRAM G) கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகளை வழங்கும் விதமாக சில வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதாவது மாற்றுத்திறனாளிகள் 50 சதவீத பணி செய்தாலும் முழு சம்பளம் வழங்கப்படும். 4 மணி நேரம் பணி செய்தால் போதும், 15 நாட்களுக்குள் வேலை அட்டை வழங்கப்படுதல் உள்ளிட்ட சலுகைகள் வழங்க மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் படி ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தில் கடந்த ஆண்டு மத்திய பாஜக அரசு அதிரடி மாற்றங்களை செய்தது.
திட்டத்தின் பெயரை பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வதார திட்டம் (விபிஜி ராம்) என மாற்றியது. அதோடு வேலை நாட்களின் எண்ணிக்கையை 125 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்கும் போது கடை பிடிக்க வேண்டிய வழிமுறைகள் தொடர்பாக புதிய அறிவிப்பு ஒன்றை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கம் வெளியிட்டுள்ளது. இது குறித்து இயக்கத்தின் ஆணையர் மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:- மாற்றுத்திறனாளிகளுக்கு முந்தைய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள எல்லாவித சலுகைகளும் இந்த திட்டத்தில் தொடரும். இந்த புதிய திட்டத்திலும் வேலை கோரும் அனைவருக்கும் வேலை கொடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் 50 சதவீதம் வேலை செய்தாலே முழு ஊதியம் வழங்க வழிவகை செய்யபட்டுள்ளது. எனவே, பணி செய்யும் இடத்தில் தொழிலாளர்களுக்கு குடீநீர் வழங்குதல், அவர்களுடைய குழந்தைகளை பராமரித்தல் உள்ளிட்ட 9 வகையான சிறப்பு பணிகளில் ஈடுபடும் மாற்றுத்திறனாளிக்ளுக்கு முழு சம்பளம் வழங்க வேண்டும். மண் வேலைகள் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் 4 மணி நேரம் வேலை செய்தாலே போதும். அவர்கள் மேற்கொள்ள வேண்டிய வேலை முன் கூட்டியே அளவீடு செய்து கொடுக்க வேண்டும். 50 சதவீதம் முடித்தாலே முழு ஊதியம் வழங்க வேண்டும். இந்த நடைமுறைகளை தொய்வு இன்றி பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். பணிதளங்களில் மாற்றுத்திறனாளிக்ளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே மண் தொடர்பான பணிகளுக்கு பயன்படுத்தலாம். அப்படி பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால், 5 முதல் 10 பேர் கொண்ட குழுவாக பிரித்து 50 சதவீதம் அளவுக்கு பணிகளை வழங்க அனுமதிக்க வேண்டும். இந்த நடைமுறைகளை ஊராட்சி அளவில் பணித்தளப்பொறுப்பாளர் மற்றும் ஊராட்சி செயலாளரும், ஊராட்சி தலைவரும், வட்டார அளவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஆகியோர் உறுதி செய்ய வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.