அன்று RSSன் பிள்ளை விஜய்.. இன்று வன்னியரசு அமைச்சர்.. திருமாவின் பழைய பேச்சை தோண்டும் நெட்டிசன்கள்!

  • சென்னை: விஜய் தலைமையிலான புதிய அரசு இப்போது பொறுப்பேற்றுள்ள நிலையில், தமிழகத்தில் முதல்முறையாகக் கூட்டணி அமைச்சரவை உருவாகியுள்ளது. இதில் இப்போது விசிகவும் இடம்பெற்று இருக்கும் சூழலில், தவெக ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிள்ளைகள் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியது இப்போது இணையத்தில் மீண்டும் பரவி வருகிறது.

    Advertisement

    சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழ்நாட்டில் யார் ஆட்சியை அமைப்பார் என்பதில் ஒரு மிகப் பெரிய குழப்பம் நீடித்தது. சில நாட்கள் வரையிலும் இந்தக் குழப்பம் தொடர்ந்தது. விஜய்யின் தவெக தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களைப் பிடித்த போதிலும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை 118 இடங்களை அவர்களால் பெற முடியவில்லை. இதனால் விஜய் திணறிக் கொண்டிருந்தார். குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற பேச்சும் கூட எழுந்தது.

    Advertisement

    விசிக

    அப்போது தான் விசிக மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் தவெகவிற்கு தங்களின் ஆதரவை வழங்குவதாக அறிவித்தனர். தவெக ஆதரவு என்று சொன்னவுடனேயே விசிக தலைவர் திருமாவளவனிடம் பத்திரிகையாளர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். "பிரச்சாரத்தின் போது தவெகவை ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிள்ளைகள் என்று விமர்சித்துவிட்டு, இப்போது ஆதரவு தருவது சரியா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

    ஆர்எஸ்எஸ் பிள்ளைகள்

    இருப்பினும் அப்போது திருமா, "நாங்கள் திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்று சொல்லி பிரச்சாரம் செய்தே 1.5 கோடி வாக்குகளைப் பெற்றுள்ளோம். தவெகவிற்கு எதிராக 60 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் விழுந்தாலும் 108 இடங்களுடன் ஆட்சி அமைக்க முடியாமல் திணறுகிறது. இந்த நிலை நீடித்தால் குடியரசுத் தலைவர் ஆட்சி.. ஜனாதிபதி ஆட்சி என்பது மறைமுகமாக பாஜகவின் ஆட்சிதான். அதைத் தடுக்கவே நாங்கள் தவெகவுக்கு ஆதரவு தருகிறோம். ஆதரவு' மட்டும் தானே தவிர, தவெக மீதான எங்கள் சித்தாந்த விமர்சனங்களை மாறவில்லை எனக் கூறியிருந்தார்.

    Advertisement

    மாறியது அரசியல்

    ஆனால், வெறும் இரு வாரங்களில் தமிழக அரசியல் களம் மாறிவிட்டது. அன்று ஆட்சி அமைக்க ஆதரவு மட்டும்தான், உறவாட மாட்டோம் என்று பேசிய விசிக, இப்போது அமைச்சரவையில் இணைந்துள்ளது. விசிகவின் முக்கிய முகமான வன்னியரசு, சமூக நீதித்துறை அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். விஜய் அமைச்சரவையில் இணைவது குறித்து திருமா நேற்று அறிவித்தபோதே, இப்போதும் நீங்கள் திமுக கூட்டணியில்தான் தொடர்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இருப்பினும், அதற்கு பதிலளிக்காத திருமா, "இதைப் பற்றி சில நாட்கள் கழித்துப் பேசுவோம்" எனச் சொல்லி முடித்துக் கொண்டார்.

    நெட்டிசன்கள் கேள்வி

    இதற்கிடையே சமூக வலைத்தளங்களில் இப்போது இது தொடர்பாகப் பல்வேறு கேள்விகள் வந்துள்ளன. திருமாவளவனின் அந்தப் பழைய பேட்டியைக் குறிப்பிட்டு நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். விஜய் அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும்போது கூட தவெக ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் பிள்ளைகள் என்று விமர்சித்துவிட்டு, இப்போது அதே அமைச்சரவையில், வன்னியரசு எப்படி அமைச்சராக அமர முடியும்?" என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

    Advertisement

    மேலும், ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என்று பெற்ற வாக்குகள்தான் இது எனச் சொல்லிக் கொண்டு, எப்படி தவெக அமைச்சரவையில் சேரலாம் என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். எது எப்படியோ.. "அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை" என்பார்கள். அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இந்த அரசியல் நகர்வு இருக்கிறது.!

    English Summary

    Following VCK leader Vanni Arasu induction as Social Justice Minister in CM Vijay's cabinet(அமைச்சராக பதவியேற்ற விசிகவின் வன்னியரசு): VCK Joins TVK Cabinet as Vanni Arasu got minister post.