சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா

  • சென்னை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள்ளும் அதிர்வுகளை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழக அரசில் விசிக இடம்பெற்றதை அடுத்து, கட்சிக்குள் அதிருப்தி அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த சூழலில், சில முக்கிய நிர்வாகிகள் திமுகவுக்கு செல்லத் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால், மேயர், நகராட்சி பதவி பெற்றுத் தருவதாகக் கூறி அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    Advertisement

    2026 தேர்தலுக்கு முன்பு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தனியாக தேர்தலை சந்திக்கலாம் என்ற எதிர்பார்ப்பு கட்சிக்குள் உருவாகியிருந்தது. சட்டப்பேரவைத் தேர்தலில் நேரடியாக களமிறங்கும் வகையில் திருமாவளவன் பல்வேறு ஆலோசனைகளையும் நடத்தினார்.

    Advertisement

    ஆனால் பின்னர், கூட்டணி அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அந்த முடிவில் மாற்றம் ஏற்பட்டது.
    தேர்தலுக்கு பிறகு தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்த நிலையில், விசிகவும் அந்த அரசுக்கு ஆதரவு அளித்தது.

    விசிக உட்கட்சி பிரச்சனை

    அதன் பின்னர் நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில், விசிக சார்பில் வன்னியரசு அமைச்சராக பதவியேற்றார். இதுவே தற்போது கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. கட்சியின் சில முன்னணி நிர்வாகிகள், திருமாவளவனே அமைச்சராக வேண்டும் என்று விரும்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், திருமாவளவன் தன்னை விட வன்னியரசுவை அமைச்சராக்கிய முடிவு பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

    Advertisement

    திருமாவளவன்

    இதற்கிடையில், தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாத முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் அதிருப்தியும் தொடர்ந்து நீடித்து வருகிறது. குறிப்பாக, ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ்.பாலாஜி, பனையூர் பாபு ஆகியோருக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதன் காரணமாக, மூவரும் கட்சி தலைமைக்கு எதிராக அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. பின்னர், சமாதான முயற்சியாக எஸ்.எஸ்.பாலாஜிக்கு பொருளாளர் பதவியும், ஆளூர் ஷாநவாஸுக்கு முதன்மை செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது.

    ஆளூர் ஷாநவாஸ்

    இதில் பாலாஜி தொடர்ந்து கட்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், ஆளூர் ஷாநவாஸ் கட்சி நிகழ்ச்சிகளில் பெரிதாக பங்கேற்காமல் இருப்பதாகவும், தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் கூட கட்சி பொறுப்பை நீக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் விரைவில் வேறு அரசியல் முடிவு எடுக்கக்கூடும் என்ற பேச்சு வலுத்துள்ளது. இதற்கிடையில், முன்னாள் எம்.எல்.ஏ பனையூர் பாபு கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தது வி.சி.க.வுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    பனையூர் பாபு

    "பா.ஜ.க.வின் அரசியலை விமர்சித்துவிட்டு தற்போது தவெகவுடன் இணைந்திருக்கிறது" என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்திருந்தார். பனையூர் பாபுவை தொடர்ந்து, ஆளூர் ஷாநவாஸும் கட்சியில் இருந்து விலகலாம் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் சில நிர்வாகிகளும் திமுகவுடன் தொடர்பில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த சூழலில், கட்சிக்குள் உருவாகியுள்ள அதிருப்தியை சமாளிக்க திருமாவளவன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    தமிழக வெற்றிக் கழகம்

    குறிப்பாக, அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் முக்கிய பொறுப்புகள் வாங்கித் தருவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு, ஆளூர் ஷாநவாஸுக்காக ராஜ்யசபா உறுப்பினர் பதவி கேட்டு தமிழக வெற்றிக் கழகத்துடன் திருமாவளவன் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

    Advertisement

    மேயர் பதவி

    மேலும், வரும் உள்ளாட்சி தேர்தலில் இரண்டு மாநகர மேயர் பதவிகள் மற்றும் சில நகராட்சி தலைவர் பதவிகளை விசிகக்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த பதவிகளை கட்சியில் அதிருப்தியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளுக்கு வழங்கி அவர்களை சமாதானப்படுத்த முயற்சி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த முயற்சிகள் வெற்றி பெறுமா அல்லது மேலும் சில முக்கிய நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகுவார்களா என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Thirumavalavan reportedly holds talks to stop senior VCK leaders from moving towards DMK amid growing dissatisfaction.