தாய் சிறுத்தைக்கு ஷாக்..திமுகவுக்கு தாவும் குட்டி சிறுத்தைகள்! ‘யோசிக்கும்’ தலையும் ’ஊர்’ புள்ளியும்

  • சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள், தற்போது தவெக அமைச்சரவையில் இணைந்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சமூக வலைத்தளங்களில் திமுக மற்றும் விசிக ஆதரவாளர்கள் இடையே கடும் வார்த்தைப் போர் நடைபெற்று வரும் நிலையில், திருமாவளவனின் முடிவால் அதிருப்தியில் இருக்கும் சில விசிக புள்ளிகள், திமுகவுக்கு தாவ இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக 'யோசிக்கும்' தலைவரும், 'ஊர்' புள்ளியும் நாளை திமுகவில் இணையலாம் என்கின்றனர்.

    Advertisement

    2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியலில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தாலும், தனிப்பெரும்பான்மை இல்லாத காரணத்தால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு அவசியமான சூழல் உருவானது.

    Advertisement

    இதையடுத்து காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் தவெக அரசுக்கு ஆதரவு அளித்தன. முதலில் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் நிலைப்பாட்டிலேயே இந்தக் கட்சிகள் இருந்தன.

    தவெக அமைச்சரவை

    ஆனால் பின்னர் அமைச்சரவையில் பங்கேற்பது குறித்து ஆலோசனைகள் தொடங்கின. பொதுப்பணி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ள ஆதவ் அர்ஜுனா, கூட்டணிக் கட்சிகளும் ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்று வெளிப்படையாக அழைப்பு விடுத்தார். இதைத்தொடர்ந்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் ஐயூஎம்எல் தலைவர் காதர் மொய்தீன் ஆகியோர் தங்களது கட்சித் தலைமை மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். அதன் பிறகு தவெக அமைச்சரவையில் இணைவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின.

    Advertisement

    திமுக கூட்டணி

    அதன்படி, விசிக சார்பில் மாநில துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசும், ஐயூஎம்எல் சார்பில் பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ. ஷாஜகானும் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதுவே தற்போது திமுக வட்டாரத்தில் அதிருப்தியை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா தனது சமூக வலைத்தள பதிவில் மறைமுகமாக விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகளை விமர்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பதிவில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் அரசியல் வட்டாரங்களில் கடும் விவாதத்துக்குள்ளானது.

    ஆ.ராசா

    ஆ.ராசா தனது எக்ஸ் பக்கத்தில், "முன் 'ஏற' தரப்பட்ட 'ஏணியும்' மூட சாதியை நொறுக்க வேண்டிய 'சிறுத்தையும்' வெறும் 'விசில்' சத்தத்திற்கு முட்டுக் கொடுக்குமென்றால்; பூ முடித்தவனை புறந்தள்ளி புணர்ச்சிக்கு வேறிடம் தேடுவதில் தவறில்லை! பெரியாரின் 'காலதேச வர்த்தமான' த்திற்கு காத்திருப்போம் ; என்றாலும் களமாடுவோம்! வெற்றி நமக்கே' என ஐயூஎம்எல், விசிக ஆகிய கட்சிகளையும் விமர்சித்துப் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலடியாக விசிக நிர்வாகிகளும் சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

    Advertisement

    எஸ்.எஸ். பாலாஜி

    விசிக நிர்வாகி எஸ்.எஸ். பாலாஜி வெளியிட்ட பதிவு திமுகவுக்கு நேரடி பதிலடி என பார்க்கப்படுகிறது. "அதிகாரம் எளியவர்களுக்கு சென்றால் சிலருக்கு ஆத்திரம் வருகிறது" என்ற வகையில் அவர் கூறியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதன் காரணமாக திமுக - விசிக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. அதே நேரத்தில், இரு கட்சித் தலைமை தரப்பும் வெளிப்படையாக கூட்டணி முறிவை பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

    விசிக நிர்வாகிகள்

    ஆனால், தரை மட்டத்தில் இரு கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்டிருக்கும் கருத்து மோதல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக சில விசிக நிர்வாகிகள் தவெக பக்கம் சாயும் மனநிலையிலிருக்கிறார்கள் என்ற தகவல்களும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றன. தவெக ஆட்சியில் இடம்பெற்ற பிறகு விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகளுக்கு புதிய கூட்டணி வாய்ப்பு உருவாகியுள்ளது. இதனால் எதிர்காலத்தில் இந்தக் கட்சிகள் தவெக கூட்டணியிலேயே தொடருமா அல்லது திமுக கூட்டணிக்குச் செல்லுமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

    Advertisement

    திமுக

    இதற்கிடையில், திமுக தரப்பும் கூட்டணி அரசியலை மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் பங்கேற்ற பின்னரும் திமுக கூட்டணியில் தொடர்வதாக கூறுவது அரசியல் ரீதியாக குழப்பமான சூழலை உருவாக்கியுள்ளதாக சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். வரும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2029 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தற்போதே வேலைகளை ஆரம்பிக்கவும் திமுக திட்டமிட்டுள்ளது.

    விடுதலை சிறுத்தைகள்

    இந்த நிலையில் தான் முன்னரே கூறியது போல விடுதலை சிறுத்தைகள் கட்சியில் திருமாவளவன் மீது அதிருப்தியில் இருக்கும் சில முன்னாள் எம்எல்ஏக்கள் திமுக தரப்புடன் பேசி வருவதாகவும் நாளை அவர்கள் திமுகவில் இணையக்கூடும் என்ற தகவல் உலாவி வருகிறது. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை, ஒருவேளை போட்டியிட்டு இருந்தால் அமைச்சராகி இருக்கலாம். ஆனால் இரண்டையுமே செய்ய விடாமல் திருமாவளவன் தவிர்த்து விட்டார் என அதிருப்தியில் இருக்கும் அவர்கள் திங்கட்கிழமை அறிவாலயத்துக்கு செல்லலாம் என சொல்லப்படுகிறது.

    Advertisement

    முக்கிய புள்ளிகள்

    மேலும் திருமாவளவனின் ஆதரவாளர்கள் சிலரை திரட்டி செல்லவும் திட்டமிட்டு இருக்கிறார்களாம். அதே நேரத்தில் திமுகவில் அவர்களை சேர்க்கக் கூடாது என திருமாவளவன் வலியுறுத்தியதாகவும் அதனை கண்டு கொள்ளாமல் திமுகவில் சேர்வதற்கான வேலைகள் படுஜோராக நடந்து வருவதாக சொல்கின்றனர். இந்த பட்டியலில் 'சிந்தனையான' தலைவரும், 'ஊர்' பெயரை தனது பெயருடன் சேர்த்து இருக்கும் தலைவரும் முக்கியமானவர்கள் என்கின்றனர்.

    English Summary

    Internal dissatisfaction in VCK reportedly grows after joining TVK government, with some former leaders expected to move towards DMK.