விசிலுடன் கைகோர்க்குமா மாம்பழம்.. தவிக்கும் தவெக? பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வருவதில் பெரிய சிக்கல்

  • சென்னை: பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வர தவெக முயற்சிகள் மேற்கொண்டதாக தகவல் பரவியது. அதே நேரம் பாமக உள்ளே வந்தால் விசிக வெளியேறி விடும் என திருமாவளவன் கூறியதால் தவெக இந்த முடிவில் இருந்து பின் வாங்கியதாக சொல்லப்படுகிறது. இதனால் தவெக பாமக கூட்டணி அமைவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    Advertisement

    தமிழகத்தில் தவெக கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. ஆட்சி அமைப்பதற்கு தேவையான தனிப்பெரும்பான்மை அக்கட்சிக்கு கிடைக்காததால் காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி நடத்தி வருகிறது.

    Advertisement

    தவெக கூட்டணியில் பாமக?

    ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் நெருக்கடி அளிப்பதால், கூட்டணிக்குள் பாமகவை கொண்டு வந்து நெருக்கடியை சமாளிக்கலாமா? என்று தவெக கருதுவதாக சமீப நாட்களாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது. மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று பாமகவும் அறிவித்து இருப்பதால் தவெக அமைச்சரவையில் பாமக இடம் பெற திட்டமிட்டு இருக்கிறதா? என்ற யூகங்களுக்கு மேலும் வலு சேர்த்தது.

    சவுமியா அன்புமணிக்கு அமைசச்ர் பதவி வழங்கப்படலாம் என்று கூட பேச்சு அடிபட்டது. ஆனால் இதையெல்லாம் வதந்தி என பாமக மறுத்தாலும் தவெக தரப்பில் இருந்து இது பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. அதேநேரத்தில் பாமகவை கூட்டணியில் சேர்த்தால் நாங்கள் வெளியேறுவோம் என்று விசிக தெரிவித்துள்ளது.

    Advertisement

    தவெகவின் திட்டத்தில் பின்னடைவு

    இது பற்றி வன்னி அரசு அண்மையில் கூறும் போது, சாதியாவாத, மதவாத கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பதில் எங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறியிருந்தார். அதேபோல, திருமாவளவனும், "இடைத்தேர்தலுக்காக திட்டமிட்டு வதந்தி பரப்புகிறார்கள். பாமக, தவெக கூட்டணியில் இடம் பெறும் எனும் செய்தி பரப்பினால், விசிக பின்வாங்குவார்கள். தேர்தல் களத்தில் ஆர்வம் காட்டமாட்டார்கள், தவெக வேட்பாளர்களுக்கு வாக்குச் சேகரிக்க மாட்டார்கள்.

    இதன் மூலம், தவெகவுக்கு விசிகவின் ஆதரவு முழுமையாக போய்ச் சேராமல் தடுக்க வேண்டும். விசிகவின் வாக்குகளை தவெகவுக்கு செல்லவிடாமல் தடுக்க முடியும் என பரப்புகிறார்கள். இயக்கத் தோழர்கள் இதனை புரிந்துகொள்ள வேண்டும்' என்று கூறியிருந்தார். பாமகவை தவெக கூட்டணிக்குள் கொண்டு வர விசிக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் தவெகவின் திட்டத்திற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகுதான்..

    இடைத்தேர்தல் முடிவை பொறுத்தே இனி அடுத்த கட்ட அரசியல் கணக்குகள் மாறக்கூடும் என்று சொல்லப்படுகிறது. தவெக இரண்டு தொகுதியிலும் வெற்றி பெற்றால் எந்த சிக்கலும் இன்றி மேலும் பலத்துடன் ஆட்சியை கொண்டு சென்றுவிடும். அதே நேரத்தில் தோல்வி அடைந்தால் கூட்டணிக்குள்ளும் சலசலப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    விஜய்யின் செல்வாக்கு முடிந்துவிட்டதாக கூறி எதிர்க்கட்சிகளும் கடும் நெருக்கடியை கொடுக்கும் என்பதால் ஆட்சிக்கே சிக்கல் எழ வாய்ப்புப் உள்ளது. எனவே தவெக கூட்டணிக்குள் பாமக வருமா? இல்லை வேறு ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுமா? என்பது இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகே தெரிய வரும் என்பது அரசியல் விமர்சகர்கள் கருத்தாக உள்ளது.

    English Summary

    TVK PMK alliance: Reports circulated that TVK had attempted to bring the PMK into its alliance. However, it is said that TVK backed away from this plan after Thirumavalavan stated that the VCK would leave the alliance if the PMK joined. Consequently, the formation of a TVK-PMK alliance is reported to have hit a snag.