சென்னை: விசிக, தவெக தலைமையிலான அரசில் அங்கம் வகித்து வரும் சூழலில் விசிக முதன்மைச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், தவெக அரசை விமர்சித்துப் பேசி வருகிறார். இந்நிலையில், ஆளுநர் தேநீர் விருந்தை முதல்வர் விஜய் புறக்கணிப்பார் என நம்புகிறேன் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் ஆளூர் ஷானவாஸ்.
விசிக முன்னாள் எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மக்களவை தலைவர் கொடுத்த தேநீர் விருந்தில் திமுக எம்.பி கனிமொழி பங்கேற்றதன் மூலம், "திமுக பாஜக கூட்டணியா?" என்ற கேள்வி எழுந்துள்ளது. இத்தகைய கேள்வி தவெகவை நோக்கி வராமல் இருக்க, சுதந்திர தினத்தில் ஆளுநர் கொடுக்கும் தேநீர் விருந்தை தமிழக முதல்வர் விஜய் புறக்கணிப்பார் என்று நம்புகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில், நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா வழங்கிய தேநீர் விருந்தை, 'இந்தியா' கூட்டணியை சேர்ந்த கட்சிகள் புறக்கணித்தன. லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை. ஆனால், திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி, அந்த விருந்தில் பங்கேற்றார். இதுதொடர்பாக விமர்சிக்கப்பட்டு வரும் சூழலில் தான் ஆளூர் ஷானவாஸ் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். சட்டசமன்றத் தேர்தலில் ஆளூர் ஷானவாஸுக்கு விசிகவில் சீட் வழங்கப்படாத நிலையில், தேர்தலுக்குப் பிறகு அக்கட்சி தவெக உடன் கூட்டணி அமைந்ததை ஆளூர் ஷானவாஸ் ரசிக்கவில்லை. அவர் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவி வந்தன. எனினும் மௌனமாகவே இருந்து வந்தார் ஆளூர் ஷானவாஸ். சென்னையில் அண்மையில் நடந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விசிக முன்னாள் எம்.எல்.ஏ ஆளூர் ஷா நவாஸ், "தற்போதைய சூழ்நிலையில், ஆட்சி மாறிவிட்டது, காட்சியும் மாறிவிட்டது, அணிகளும் மாறிவிட்டன. அதற்காக எம்மை போன்றவர்கள் கொள்கையை மாற்ற முடியுமா? திராவிட மாடல் இந்தியாவிற்கே ரோல் மாடல் என பேசிய நாங்கள் தற்போது அதை மாற்றி பேச முடியுமா? முடியாது" எனக் கூறியிருந்தார்.