சென்னை: பிற்படுத்தப்பட்டோர் மானிய கோரிக்கையில் இடம்பெற்றிருந்த இடஒதுக்கீடு வரலாற்று குறிப்பில் பெரியார், அம்பேத்கர் மற்றும் நேரு ஆகியோரின் பெயர்கள் விடுபட்டிருக்கின்றன. இது குறித்து விசிக சரமாரியாக கேள்விகளை எழுப்பியிருக்கிறது. கூட்டணி கட்சிகளின் கேள்வி தற்போது முதலமைச்சர் விஜய்க்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, அந்தந்த துறையின் சாதனைகள், திட்டங்கள், எதிர்கால இலக்குகள் குறித்து விளக்கி அதிகாரப்பூர்வமாக ஆவணம் வெளியிடப்படும். இதைத்தான் கொள்கை விளக்க குறிப்பேடு (பாலிசி நோட்) என்று சொல்வார்கள். சமீபத்தில் தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை பாலிசி நோட் வெளியிடப்பட்டிருந்தது.
இதில், 'இடஒதுக்கீட்டின் வரலாறு' என்கிற பகுதியும் இருந்தது. கடந்த காலங்களில் இந்த பகுதியில் 69% இடஒதுக்கீடு எப்படி சாத்தியமானது என்பது தெளிவாக விளக்கப்பட்டிருந்தது. அதாவது கடந்த திமுக ஆட்சியில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முதல் திருத்தம் பிரிவு 15(4) கொண்டு வரப்பட்டதற்கான வரலாற்று பின்னணி தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. 1951ல் தமிழகத்தில் நடைமுறையில் இருந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இந்த ரத்தை எதிர்த்து தந்தை பெரியார், தமிழ்நாட்டில் நடத்திய பிரம்மாண்ட எதிர்ப்பு ஊர்வலங்கள் மற்றும் போராட்டங்களின் விளைவாகவே, அரசியலமைப்பில் முதல் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அன்றைய பிரதமர் நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் சட்டத்துறை அமைச்சர் அம்பேத்கர் ஆகியோர் முன்னெடுத்து இந்த முதல் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினர். இதுவே பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான இடஒதுக்கீடு விதிகளுக்கு வலுவான அடித்தளமாக அமைந்தது. இந்த விஷயங்கள் எல்லாம் கடந்த திமுக ஆட்சியில் வெளியான பாலிசி நோட்டில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது தவெக ஆட்சியில் வெளியான நோட்டில் பெரியார், நேரு மற்றும் அம்பேத்கரின் பெயர்கள்.. நீதிக்கட்சியின் பெயர் என எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதைத்தான் விசிக பொதுச்செயலாளர் சிந்தனைசெல்வன், 'வரலாற்று இருட்டடிப்பு' என்று குற்றம்சாட்டியிருக்கிறார். பொதுவாக புதிய ஆட்சி அமையும்போது, கொள்கை விளக்க குறிப்பேட்டில் உள்ள வரலாற்று பகுதிகளை அமைச்சர்கள் மாற்ற மாட்டார்கள். முந்தைய ஆண்டுகளில் என்ன இருந்ததோ அது அப்படியே தொடரும். ஆனால், புதிய அமைச்சர்களின் கவனத்திற்கு வரலாமல், துறையின் அரசு செயலளரும், அவரை வழிநடத்தும் அரசு தலைமை செயலாளருமே இந்த மாற்றத்தை செய்திருப்பார்கள்.. அதற்கு அவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் விசிக குற்றம்சாட்டியிருக்கிறது. கூட்டணியில் உள்ள கட்சிகள் தொடர்ந்து தலைமை செயலாளரை குற்றம்சாட்டி வருகின்றன. ஏற்கெனவே இடதுசாரிகளுக்கு எதிரான உத்தரவு குறித்து தலைமை செயலாளருக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டம் நடத்தியிருந்தன. இப்போது விசிகவும் தலைமை செயலாளருக்கு எதிராக பேசியிருப்பது விஜய்க்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.இடஒதுக்கீட்டின் வரலாறு
பிற்படுத்தப்பட்டோரின் நலன்
விசிக எதிர்ப்பு
திமுக ஆட்சி
விஜய்க்கு நெருக்கடி